செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கி மூன்று மாதங்களாக அப்போலோவில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டது.
அதுவரை ‘சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என சொல்லி வந்தார்கள்.
டிசம்பர் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்ட ’எக்மோ’ உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் அன்றிரவு 11:30-க்கு ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப் படிதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது’ என அப்போலோ நிர்வாகம் சொல்லியது.
பரபரப்பான அந்தக் கடைசி இரண்டு நாட்களில், ‘முதல்வர் ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் இயன்றதைச் செய்து வருகிறார்கள்’ என ரிச்சர்ட் பியெலிடம் இருந்து வெளியான இறுதி அறிக்கை மிக முக்கியமானது.
இதையடுத்து, டாக்டர் ரிச்சர்ட் பியெலின் மின்னஞ்சல் முகவரிக்கு ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாகவும், அதுநாள்வரை அப்போலோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளில் உள்ள மருத்துவ விவரங்கள் தொடர்பாகவும் டிசம்பர் 9-ம் தேதி கேள்விகள் அனுப்பப்பட்டன.
அந்தக் கேள்விகள் இங்கே...
1. இந்தியாவில் நுரையீரல் பாதிப்படைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம். இதன் காரணம் என்ன?
2. நீங்கள் செப்ஸிஸ் நோய் சிகிச்சை நிபுணர். செப்ஸிஸ் தாக்கத்திலிருந்து ஒருவர் குணமடைந்தாலும் அவரின் 25 சதவிகித உடல் ஆரோக்கியத்தைத்தான் திரும்பப் பெறமுடியும் என்பது உண்மையா? செப்ஸிஸ் குணமடைவதற்கான சிகிச்சைகள் உள்ளனவா?
3. அப்போலோ மருத்துவமனையின் ஓர் அறிக்கையில், முதல்வர் ’pulmonary edema’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்ஸிஸ் நோயிலிருந்து pulmonary edema எவ்வகையில் மாறுபட்டது?
4. தமிழக மருத்துவச் சிகிச்சை வரலாற்றில் ‘எக்மோ’ என்னும் கருவி பற்றி சாமானியர்கள் இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள். எக்மோ கருவியின் செயல்பாடு என்ன? வென்டிலேட்டர் கருவியைவிட அது மேம்பட்டதா? எக்மோ கருவியின் உதவியுடன் ஒரு நோயாளியை எவ்வளவு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்?
5. எக்மோ உதவியுடன் மீண்டும் குணமடைவது சாத்தியமா?
6. 4.12.2016 அன்று திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது?
7. நீங்கள் முதன்முதலில் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவரால் பேச முடிந்ததா? அவர் உங்களிடம் என்ன சொன்னார்?
8. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சிகிச்சை அளிக்க வேண்டி உங்களை முதன்முதலில் தொடர்பு கொண்டது யார்?
9. ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான உங்களது முதற்கட்டத் தகவலறிக்கை என்னவாக இருந்தது?
10. ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய தீவிர சிகிச்சை தொடர்பாக என்ன ஆலோசனைகளை அப்போலோ டாக்டர்களுக்கு வழங்கினீர்கள்? அவை அத்தனையும் சரிவரப் பின்பற்றப்பட்டனவா?
11. நீங்கள் கடைசியாக அவரைச் சந்தித்தபோது அவரது உடல்நிலை எப்படி இருந்தது?
12. கண் இமைக்கும் நொடியில், அத்தனையும் நிகழ்ந்தேறி உள்ளன. இது எதிர்பார்த்ததுதானா?
ரிச்சர்ட் பியெலுக்கு கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறோம். `பதில் அளிப்பாரா ரிச்சர்ட்?’ என்னும் 13-வது கேள்வியுடன்!
0 Comments