QR எரிபொருள் ஒதுக்கீடு – இன்று நள்ளிரவு முதல் விலை திருத்தம்

Wednesday, May 31, 2023

 


தற்போது QR அமைப்பின் மூலம் வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு வாரத்திற்கு மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 07 லீட்டர் எரிபொருள் கோட்டா 14 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 8 லீட்டர் எரிபொருள் 14 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான 15 லீட்டர் எரிபொருள் கோட்டா 22 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கார் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு 30 லீட்டரில் இருந்து 40 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 60 லீட்டரிலிருந்தும், லொறிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 75 லீட்டரில் இருந்து 125 லீட்டராகவும் அதிகரிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறையும் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

READ MORE | comments

கிழக்கு மாகாணத்திற்கு 4,200 புதிய ஆசிரியர்கள்?



31-05-2023

கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.

இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்திர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதிளித்த கல்வி அமைச்சர்,அதற்கு முதல் கட்டமாக மூன்று மாதக்காலத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக உறுதியளித்தார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் சிரேஸ்ட ஆலோசகர் டாக்டர் அமல் அரச டி சில்வா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


READ MORE | comments

பாக்குநீரிணையினை நீந்திக்கடந்தார் மட்டு மண்ணின் மைந்தன்

Sunday, May 28, 2023

 


இன்றைய தினம் பாக்குநீரிணையினை கடந்து மட்டக்களப்பு  மண்ணிற்கு பெருமைசேர்த்த T . மதுஷிகன் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்ட குழுவினர் தலைமன்னாரில் வரவேற்று பாராட்டினர்.


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.


20 வயதுடைய ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மதுஷிகன்  இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ மீற்றர் தூரத்தை இன்று அதிகாலை நீந்தத் தொடங்கி இன்று பிற்பகல் 2 மணியளவில் நாட்டின் தலைமன்னாரை வந்தடைந்தார். 


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க வேண்டும் என்பது  நீச்சல் வீரர்கள் பலரினதும் அபிலாஷையாக இருந்து வருகின்றது. ஆனால் இதை நீந்திக் கடக்கின்றமை என்பது மிகப் பெரிய சவால் ஆகும். 


ஏனெனில் இந்நீரிணை பூராவும் கடல் பாம்புகள், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதையும் தாண்டி மட்டக்களப்பை சேர்ந்த இந்த மாணவன் சாதித்திருப்பது பெரிய விடயமே காரணம் இத் தூரத்தை நீந்திக்கடக்க முயன்ற பலர் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது இச் சவால்களை முறியடித்து கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்தேர்ச்சியாக நீந்தி இலக்கை அடைந்துள்ள மதுசிகனை பாராட்டியே ஆக வேண்டும்


மட்டக்களப்பிலும் இவ்வாறான திறமையாளர்கள் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறோம்.

READ MORE | comments

மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்க அமெரிக்க அரசு அனுமதி

Saturday, May 27, 2023

 


உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் “சிப்” பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது. நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் கணினி போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் கண் பார்வை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.

இதில் பல கட்ட சோதனையில் குரங்குகளின் மூளையில் ‘சிப்’பை பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.

இது தொர்பான ஆய்வறிக்கைகைளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் நியூராலிங்க் நிறுவனம் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த ஒப்புதலுக்கு அமெரிக்க அரசிடம் நியூராலிங்க் நிறுவனம் பலமுறை விண்ணப்பித்து இருந்தது. ஆனால் அவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக நியூராலிங்க் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “ஒருநாள் எங்கள் தொழில்நுட்பம் ஏராளமானோருக்கு உதவி செய்ய போவதன் முக்கிய முதல்படிதான் இது.

நியூராலிங்க் குழுவினர் மேற்கொண்ட மிகவும் இன்றியமையாத பணிகளின் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இந்த அனுமதியை அளித்திருக்கிறது” என்று கூறியுள்ளது.

மேலும் மூளையில் உள்ள தகவல்களை ப்ளுடூத் மூலம் மின் பொருட்களுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்பவர்களை பதிவு செய்யும் பணிகள் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.

READ MORE | comments

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு மீண்டும் சிக்கலில்

 


உயர்தர விடைத்தாள் மதிப்பீடுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடி அதற்குக் காரணம். பத்தொன்பதாயிரம் ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்காகக் கோரிய முன்பணத்தை இதுவரை திணைக்களத்தினால் செலுத்த முடியவில்லை.

ஒரு பகுதியினருக்கு மட்டுமே முன்பணம் செலுத்த முடிந்தது. முன்பணம் பெறாதவர்கள் நேற்று (26) மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகினர்.

முற்பணம் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் இவர்கள் மீண்டும் மதிப்பீடுகளுக்காக இணைந்துள்ளனர். ஆனால், முன்பணம் வழங்க, துறையிடம் பணம் இல்லை என, குறித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அறுபத்து மூன்று பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு பன்னிரெண்டு பாடங்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்படவில்லை அல்லது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

READ MORE | comments

வீதி பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டலும், பயிற்சியும்

Saturday, May 20, 2023

 


(அஸ்ஹர் இப்றாஹிம்)

வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, கல்முனை, ஸாஹிறா தேசிய கல்லூரி மாணவ தலைவர்களுக்கான வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஒழுக்காற்றுசபை என்பவற்றின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

கல்முனை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி அஸ்ரிபா தனி நிகழ்ச்சி பிரிவில் சம்பியனானர்




(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இறுதி நாள் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

கோட்டமட்ட போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக கலந்து கொண்ட  தரம் 06ம் பிரிவில் கல்வி கற்கும் எஸ்.எப். அஸ்ரிபா 12வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 100 மீட்டர், 60 மீட்டர்  ஓட்டப் போட்டி மற்றும் நீளம் பாய்தல் ஆகிய மூன்று தனி நிகழ்ச்சிகளிலும் முதலிடத்தைப் பெற்று அந்த வயதுப் பிரிவில்  சாம்பியனானார். 

கல்முனை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சம்பியன் பெற்ற மாணவியை திறம்படவழிப்படுத்திய இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர்  ஏ.எச். நதீரா, உடற்கல்வி பாட ஆசிரியர்களான எம்.ஆர்.எம். றப்கான், எம்.ஜ. ரஃபீக்கா பீவி (தரம் - 07 பகுதித் தலைவி), எம்.எம். றிசான், ஆர்.எம். அஸ்மி, எம்.ஜ. சாமிலா (தரம் - 08 பகுதித் தலைவி) மற்றும் சாதனை படைத்த மாணவிக்கும் பாடசாலை சார்பாக அதிபர் யூ.எல்.எம். அமீன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

எஸ்.எப். அஸ்ரிபா சம்பியன் பெற்றமைக்காக கல்முனை கோட்ட கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட சம்பியன் வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை
குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை அதிபர் அலுவலகத்தில் கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா மற்றும் உடற்கல்வி பாட ஆசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். 
READ MORE | comments

கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் மோசடியில் 09 தரகர்கள் கைது

Friday, May 19, 2023

 


குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கும் 09 தரகர்கள் இன்று காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பரிசீலிப்பதற்காக 25,000 ரூபா பணம் அறவீடு செய்து வரிசையில் நிற்காமல் முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக இந்தக் கடவுச்சீட்டுகள் பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அதனை உடனடியாக மேற்கொள்ளுமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி இன்று காலை இவர்களிடம் பணம் பெற்ற 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கைகள் தொடரும் என்றும், மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும் : ஜனாதிபதி!

 


நாட்டிற்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அனைத்துவித முயற்சிகளையும்  நாம்  முன்னெடுப்போம்.  இந்த செயற்பாட்டை புதிதாக அமைக்க  வேண்டிய அவசியம் இல்லை.தென் இந்தியாவின் தமிழ் நாட்டில் இந்த திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான இணையத்தள முறைமைகள்  காணப்படுகின்றன. அது தொடர்பில் நான் இந்தியாவுடன்  பேச்சுக்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றேன். தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற இலங்கையில் பயன்பாட்டில் உள்ள மொழிகளே அங்கும் காணப்படுவதால் மேற்படி பணிகள் மேலும் எளிதாகும்.  

 வருமான  நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான  ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்த போதே கூறியிருந்த போதிலும் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியது.அதனால் இந்த பணிக்கு நாம் எந்த அளவு  காலத்தை செலவிட்டுள்ளோம் எனத் தெரிந்துகொள்ள முடியும். அதனால் ரெமிஸ் (RAMIS)  போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை  இவ்வருடத்திற்குள்  செய்து முடிக்க வேண்டும் என்பதே பாராளுமன்றத்தினதும் எனதும் நோக்கமாகும்.   துரிதப்படுத்தும் அளவிற்கு அந்த பயணம் பயன் தருவதாக அமையும்.

டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பசுமை பொருளாதாரம் இன்று ஆசியாவின்  வியாபாரச் செயற்பாடாக மாறியுள்ளது. அந்த பொருளாதாரத்தின் பெறுமதி 5 ட்ரில்லியன் ஆகும். அதனை ஆரம்பிப்பதற்கு நமக்கு 5 ட்ரில்லியன்கள்  அவசியமில்லை. சில பில்லியன்கள் போதுமானது. அதனால் இந்த வேலைத்திட்டங்களோடு டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கவேண்டியது அவசியமாகும்.அதற்காக நாம் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது.  

இது ஆரம்பம் மாத்திரமே. டராஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற அனைவரும் டிஜிட்டல் மயமாக்கலை பலப்படுத்துவதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். அது தொடர்பிலான உங்களது யோசனைகளை இராஜாங்க அமைச்சருக்கு  தெரியப்படுத்துங்கள்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,தொழில்நுட்ப  இராஜாங்க அமைச்சர்  கனக ஹேரத்,  டராஸ் நிறுவனத்தின்  இலங்கை  முகாமையாளர்  ரபீல் பெர்னாண்டோ, சர்வதேச விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும்  டராஸ் நிறுவனத்தின் பணிக்குழாம் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

READ MORE | comments

பாடப்புத்தகங்கள் விநியோகம் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது: கல்வியமைச்சர்!


 நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 95 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த விநியோகம் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கும் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்களை அச்சிட உதவிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்தார்.

“2023 ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான பொருட்களை வழங்குவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் எங்களுக்கு ஆதரவளித்தது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மொழிகளில் 350 வகையான பாடப்புத்தகங்களை அச்சிட அரசாங்கம் 16 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இது முந்தையதை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ச்சுக் கழகம் இந்தியா வழங்கிய உதவியின் மூலம் தேவையான 45% புத்தகங்களை மூலப் பொருட்களைப் பெற்று வழங்கியது. மீதமுள்ள 55% 22 தனியார் அச்சக நிறுவனங்களால் அச்சிடப்படுகிறது.
READ MORE | comments

இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்

Thursday, May 18, 2023


 இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

STEPS கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடுமையான தலைவலி, நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

35 வயதுக்கு மேற்பட்ட எவரும் நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டுள்ள சுகாதார நிலையங்களில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள முடியும்.

உலகளவில் பதிவாகியுள்ள இருதய நோய் மற்றும் அகால மரணத்திற்கு உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும்.

READ MORE | comments

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது

 


எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பணத்தில் அரசாங்கம் மாணவர்களுக்கு வேலை வழங்கினாலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின்படி, நிலைமையை பரிசீலித்து, இளைஞர்களை இலக்கு வைத்து அவை தயாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

READ MORE | comments

மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் !

Wednesday, May 17, 2023

 


மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ள நிலையில், அவ்வாறு கைது செய்வதற்கு எந்த தடையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தமக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

(செய்திப் பின்னணி)

பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 14 ஆம் திகதி அவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத் தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் கருத்து வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்கவிடம் இந்த உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்படி, போதகரின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் கூறிய கருத்து தொடர்பான காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் அங்கு வெளியிட்ட கருத்துக்கள் புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுந்தன.

ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன நேற்று (15) கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

மதப்போராட்டம் ஏற்படுவதற்கு முன்னர் இந்த போதகரை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்த இவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமய இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.


READ MORE | comments

மஹிந்த உட்பட மூவருக்கு எதிரான பயணத்தடை முழுமையாக நீக்கம்

 


கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு சமர்பிப்பு !

Tuesday, May 16, 2023

 




ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

அதன்படி மின்சார கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சார உற்பத்தி தரவுகள் மற்றும் விற்பனை தரவுகள், எரிபொருள், நிலக்கரி மற்றும் இதர மூலப் பொருட்களின் விலைகள் மற்றும் இந்த ஆண்டுக்கான மின்சார உற்பத்தித் திட்டம் மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனவரி முதலாம் திகதி மற்றும் ஜூலை முதலாம் திகதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான முன்மொழிவை சமர்பித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டீசல், பெற்றோல், நிலக்கரி போன்றவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மின்சாரத் தேவையும் சுமார் 18 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகவே தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை சுமார் 20 வீதத்தால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

READ MORE | comments

புதிய ஆளுநர்களாக பி.எம்.எஸ். சார்ள்ஸ், செந்தில் தொண்டமான், லக்ஷ்மன் யாப்பா நாளை சத்தியபிரமாணம்!


 வட மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் நாளை (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.  

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

READ MORE | comments

மே 23 முதல் தனியார் வகுப்புக்களுக்கு தடை


 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் அனுப்பப்படும்

 


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (15) தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு காரணத்தினால் பாடசாலை அல்லது தனியார் பரீட்சார்த்திகள் அனுமதிச் அட்டையை
பெறவில்லையென்றால், திணைக்களத்தின் இணையத்தளத்தில் அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கு வசதி செய்து தருவதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

READ MORE | comments

பால் மாவுக்கான விலை இன்று குறைக்கப்பட மாட்டாது

Monday, May 15, 2023

 


முன்னதாக அறிவித்தது போன்று பால் மாவுக்கான விலை இன்று குறைக்கப்பட மாட்டாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவால் குறைக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், புதிய ஏற்றுமதி தாமதம் காரணமாக, மே 23 ஆம் திகதிக்கு முன்னர் விலை குறைக்கப்படாது என இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இறக்குமதியாளர்களின் கூற்றுப்படி, புதிய விலையின் கீழ் வரும் பங்குகள் வரும் செவ்வாய்கிழமைக்கு முன் சந்தைக்கு வராது.

பால் மா இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து பால்மா விலைகளை குறைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கடந்த வாரம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

என்னை உருவாக்கினாள் என் தாய்!

Sunday, May 14, 2023


(அன்னையர் தினம் மே 14)

தாயானவள் நாம் காணும் தெய்வமாக இவ் உலகில் பரிணிமித்து கடவுளாக மதிக்கப்படுகிறாள்.மண்ணில் பயிர் முளைக்க நீரும் , மண்ணும் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறதோ !  அதே போல் மனிதனின் பரிணிமிப்புக்கு தாய் விளங்குகிறாள். தாய் என்பவள் மானிடர்களாகிய நமக்கு மாத்திரம் இல்லாமல் விலங்குகளுக்கும் தாயின் முக்கியத்துவம் சிறப்பம்சமாகின்றது.தாயானவள் தெய்வங்களுக்கு அதிபதியாக விளங்குகின்றாள்.நித்தமும் கண்விளித்து , குடும்ப பொறுப்புக்களையும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் சிறப்பான முறையில் முடிக்கும் பெண் தாயே !

கணவரின் கடைகள் முதல் சமையலைறையின் அட்டகாசங்கள் , குழந்தை பராமரிப்பு போன்ற பல்வேறு விதமான வேலைகளை செய்து முடித்து விட்டு தானும் வேலை செய்கின்றாள்.நித்தமும் தன் நம்மை  பற்றி யோசித்து கொண்டிருக்கும் உறவு தாய். தாய்க்கும் பின்னர் தாரம் என்பார்கள் தாயுடன் குறிப்பாக 30 வருடங்களாக வாழ்கிறோம்.ஏனைய 30 வருடங்களை தாரத்திற்காக வாழ்கின்றோம்,அந்த இடத்தில் தாரமே தாயாக நம் கண்களுக்கு முன்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடவுளாக காணப்படுகிறாள் .


சில சினிமாப் பாடல்களிலும் கூட தாய் "சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா " ,அம்மா எனும் மந்திரமே உலகம் முழுதும் ஆழ்கிறதே போன்ற தாயைப்பற்றிய அமுத மொழிகள் வியாபித்துள்ளமை.

வார்த்தைகளால் கூறமுடியாத  கதாநாயகியாகவும்  அளவுகோல்களால் அளக்க முடியாத  அன்பாகனவளாகவும் . சுய நலம் இல்லாத இதயம் தன்னை விட தன் குடும்பத்தை நேசிப்பவளாகவும். வெறுப்பை காட்ட முடியாத தங்கச்சொரூபமாகவும் நடமாடுகிறாள் தாய்.

தன்னை அழகுப்படுத்தி பார்ப்பதை விட சமையலை அழகாக்கி நம்மை அழகு பார்க்கும் அந்த இளகிய இதயம் யாருக்கு இருக்கும் தாய்க்கே.உதாரணமாக பறவைகள் தங்களது குஞ்சுகளுக்கு தனது கூரிய சொண்டின் மூலம் அவதானமாக உணவூட்டுகிறது இதுவும் தாய்மையே ! .இதை விட சுவாரஸ்மான அம்சம் பசு தன்னுடைய கன்று எங்கே அம்மா அம்மா என அழைக்கிறதோ அங்கு வேகமாக ஓடி தனது கன்றுக்கு பால் கொடுக்கும். இதே போலவே தாய்மை என்பது பறவைகள், விலங்குகள் பாகுபாடின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் தாய்மை விளங்கி இருக்கும்.


தாயில் சிறந்த கோயிலும் இல்லை தப்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என முற்கால புராணங்கள் கூறுகின்றன. தாயின் கருவறை ஒரு சொர்க்க பூமியாக விளங்குகிறது.காலையில் படி .மாலையில் படி தன்னை போல் கஷ்ரமில்லாமல் தான் குழந்தை எதிர்காலத்தில் மிளிர வேண்டும் என்று தன்னைத்தானே தியாகம் செய்பவள். 

தன்னுயுர் போல் குழந்தையை காத்து நுட்டின் தலைசிறந்த ஒழுக்கமுள்ள பிரஜையாக வாழ வழிகாட்டுபவள். இவ்வாறு பல்வேறு இன்னல்கள் ,சவால்களுக்கு மத்தியிலும் உண்மையாய் கடவுளாய் தன் குழந்தையே பாதுகாக்கிறாள்.தாயின் மகத்துவம் இந்த உலகில் புரியாத ஜீவன்கள் வாழ முடியாது.


இவ்வாறு பல்வேறு விதமாக போற்றி வழிபடும்  தெய்வமாக காணப்படுபவள் என் தாய்.


✍️ஸோபிதன் சதானந்தம்

இளம் ஊடகவியலாளர்



READ MORE | comments

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிக்கை


 தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அனுப்பி வைக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

இலங்கையில் காணாமல் போன யுவதியின் சடலம் புதைகுழியில் கண்டுபிடிப்பு - நடந்தது என்ன?


கம்பளை - வெலிகல்ல - எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா முனவர் என்ற யுவதி, கடந்த 7ம் தேதி காலை காணாமல் போயிருந்தார்.

பேராதனை - கெலிஓய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் இந்த யுவதி பணிப்புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், எல்பிட்டிய பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து கெலிஓய பகுதியிலுள்ள தனது வேலைத்தளத்திற்கு கடந்த 7ம் தேதி காலை குறித்த யுவதி சென்றுள்ளார்.

தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த யுவதி செல்லும் காணொளி பதிவாகியிருந்தது.

எனினும், அதனை அடுத்துள்ள எந்தவொரு சி.சி.டி.வி கமராவிலும் இந்த யுவதி பயணித்தமைக்கான ஆதாரங்கள் பதிவாகியிருக்கவில்லை.

குழியொன்று தோண்டப்பட்டு, சடலம் புதைக்கப்பட்டமைக்கான தடயங்களை போலீஸார் நேற்றைய தினம் அவதானித்தனர்.

அதேவேளை, குறித்த யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் பாதணியொன்றும், தண்ணீர் போத்தல் ஒன்றும் அந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதேசத்தில் நேற்றைய தினம் சில மணிநேரம் அமைதியின்மை நிலவியது.

சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பிரதேச மக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும், போலீஸார் பிரதேச மக்களை சமாதானப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நீதவான் முன்னிலையில் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்டு, யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வாட்ஸ்அப் தகவல்

குறித்த பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்பில் ஈடுபடும் 24 வயதான இளைஞனே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சரணடைவதற்கு முன்னர் பிரதேச மக்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பியுள்ளார்.

தான் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமையே, இந்த கொலையை செய்வதற்கான காரணம் என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''நான் நன்றாக தான் இருந்தேன். வாகனங்களுக்கு பெயின்ட் அடிப்பது தான் எனது வேலை. கடைசியில் எனது நிலைமை என்னவென்றால், நான் போதைக்கு அடிமையாகி விட்டேன். எங்க ஊரில் போதைப்பொருள் இருக்கின்றது. ஊரிலுள்ள அதிகளவானோர் போதையில் தான் இருப்பார்கள். யார் யார் என்பதை நான் சொல்லுவேன். எனது வாழ்க்கை சீரழிவதற்கு அவர்கள் தான் காரணம். அவர்கள் கொண்டு வந்ததனால் தான் அந்த அதை குடித்தேன். நான் அதை பாவித்து பாவித்து, எனது மூளை வத்தி போனது. இந்த போதைப்பொருளினால் தான் எனது வாழ்க்கை சீரழிந்தது. நான் இப்போது கொலைகாரனாகி விட்டேன்.

அன்றைக்கு என்ன நடந்தது என்றால், நான் புல் வெட்ட போயிருந்தேன். போதைப்பொருள் பயன்படுத்தியே சென்றேன். என்ன செய்தேன் என்றே விளங்கவில்லை. வீதியில் சென்ற இந்த பிள்ளையிடம் பணம் கேட்டேன். அந்த பிள்ளை கத்தினாள். அப்போது கழுத்தை பிடித்து நசுக்கினேன். கீழே வீழுந்தார். எனது முகத்தை பிச்சு எடுத்தாள். கடைசியில் எனது கையால் அந்த பிள்ளையின் உயிர் போக வேண்டிய நிலைமை வந்தது. கடைசியில் அந்த இடத்திலேயே குழியொன்றை தோண்டி, அந்த இடத்திலேயே புதைத்து விட்டேன்.

நான் செய்தது தவறு தான். அந்த போதைய பயன்படுத்தாமல் இருக்கும் போது தான் அது தெரிகின்றது. நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் தெரிகின்றது. எல்லாரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்." என சரணடைந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

போலீஸாரின் பதில்

குறித்த இளைஞன் இந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வேளையில், அதனை நிராகரித்தமையினால் இந்த கொலையை செய்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் போலீஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குறித்த யுவதியை பலவந்தமாக அருகாமையிலுள்ள காட்டுப் பகுதிக்குள் இழுத்து சென்று, அந்த இளைஞன் கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட யுவதியை, அதே இடத்தில் புதைத்துள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.




இலங்கை யுவதி சடலமாக மீட்பு
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |