Home » » இலங்கையில் காணாமல் போன யுவதியின் சடலம் புதைகுழியில் கண்டுபிடிப்பு - நடந்தது என்ன?

இலங்கையில் காணாமல் போன யுவதியின் சடலம் புதைகுழியில் கண்டுபிடிப்பு - நடந்தது என்ன?


கம்பளை - வெலிகல்ல - எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா முனவர் என்ற யுவதி, கடந்த 7ம் தேதி காலை காணாமல் போயிருந்தார்.

பேராதனை - கெலிஓய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் இந்த யுவதி பணிப்புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், எல்பிட்டிய பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து கெலிஓய பகுதியிலுள்ள தனது வேலைத்தளத்திற்கு கடந்த 7ம் தேதி காலை குறித்த யுவதி சென்றுள்ளார்.

தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த யுவதி செல்லும் காணொளி பதிவாகியிருந்தது.

எனினும், அதனை அடுத்துள்ள எந்தவொரு சி.சி.டி.வி கமராவிலும் இந்த யுவதி பயணித்தமைக்கான ஆதாரங்கள் பதிவாகியிருக்கவில்லை.

குழியொன்று தோண்டப்பட்டு, சடலம் புதைக்கப்பட்டமைக்கான தடயங்களை போலீஸார் நேற்றைய தினம் அவதானித்தனர்.

அதேவேளை, குறித்த யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் பாதணியொன்றும், தண்ணீர் போத்தல் ஒன்றும் அந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதேசத்தில் நேற்றைய தினம் சில மணிநேரம் அமைதியின்மை நிலவியது.

சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பிரதேச மக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும், போலீஸார் பிரதேச மக்களை சமாதானப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நீதவான் முன்னிலையில் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்டு, யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வாட்ஸ்அப் தகவல்

குறித்த பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்பில் ஈடுபடும் 24 வயதான இளைஞனே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சரணடைவதற்கு முன்னர் பிரதேச மக்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பியுள்ளார்.

தான் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமையே, இந்த கொலையை செய்வதற்கான காரணம் என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''நான் நன்றாக தான் இருந்தேன். வாகனங்களுக்கு பெயின்ட் அடிப்பது தான் எனது வேலை. கடைசியில் எனது நிலைமை என்னவென்றால், நான் போதைக்கு அடிமையாகி விட்டேன். எங்க ஊரில் போதைப்பொருள் இருக்கின்றது. ஊரிலுள்ள அதிகளவானோர் போதையில் தான் இருப்பார்கள். யார் யார் என்பதை நான் சொல்லுவேன். எனது வாழ்க்கை சீரழிவதற்கு அவர்கள் தான் காரணம். அவர்கள் கொண்டு வந்ததனால் தான் அந்த அதை குடித்தேன். நான் அதை பாவித்து பாவித்து, எனது மூளை வத்தி போனது. இந்த போதைப்பொருளினால் தான் எனது வாழ்க்கை சீரழிந்தது. நான் இப்போது கொலைகாரனாகி விட்டேன்.

அன்றைக்கு என்ன நடந்தது என்றால், நான் புல் வெட்ட போயிருந்தேன். போதைப்பொருள் பயன்படுத்தியே சென்றேன். என்ன செய்தேன் என்றே விளங்கவில்லை. வீதியில் சென்ற இந்த பிள்ளையிடம் பணம் கேட்டேன். அந்த பிள்ளை கத்தினாள். அப்போது கழுத்தை பிடித்து நசுக்கினேன். கீழே வீழுந்தார். எனது முகத்தை பிச்சு எடுத்தாள். கடைசியில் எனது கையால் அந்த பிள்ளையின் உயிர் போக வேண்டிய நிலைமை வந்தது. கடைசியில் அந்த இடத்திலேயே குழியொன்றை தோண்டி, அந்த இடத்திலேயே புதைத்து விட்டேன்.

நான் செய்தது தவறு தான். அந்த போதைய பயன்படுத்தாமல் இருக்கும் போது தான் அது தெரிகின்றது. நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் தெரிகின்றது. எல்லாரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்." என சரணடைந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

போலீஸாரின் பதில்

குறித்த இளைஞன் இந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வேளையில், அதனை நிராகரித்தமையினால் இந்த கொலையை செய்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் போலீஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குறித்த யுவதியை பலவந்தமாக அருகாமையிலுள்ள காட்டுப் பகுதிக்குள் இழுத்து சென்று, அந்த இளைஞன் கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட யுவதியை, அதே இடத்தில் புதைத்துள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.




இலங்கை யுவதி சடலமாக மீட்பு
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |