Sunday, November 30, 2014
லிங்கா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12–ந் தேதி ரிலீசாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாளையும், லிங்கா படம் ரிலீசையும் ஒன்றாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
லிங்கா ரிலீசுக்கு முன்பு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷிடம் இருந்து படத்தின் மொத்த உரிமையும் ஈராஸ் பட நிறுவனம் வாங்கி விட்டது. ரூ.165 கோடிக்கு கைமாறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன் பிறகு செட்டிலைட் தியேட்டர் உரிமைகள், வெளிநாட்டுக்கான உரிமைகள் என ரூ.200 கோடி வரை வியாபாராமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை ரூ.70 கோடி கொடுத்து வேந்தர் மூவிஸ் வாங்கி இருக்கிறது. ரஜினியின் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு போனது இல்லை என்கின்றனர்.
வேந்தர் மூவிஸ் ஏற்கனவே தலைவா, எதிர்நீச்சல், பாண்டிய நாடு, பூஜை போன்ற படங்களை வாங்கி வெளியிட்டு இருக்கிறது. லிங்கா படம் உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுவும் சாதனையாக கருதப்படுகிறது.
இதுவரை ரஜினி படங்கள் எதுவும் இவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டது இல்லை.
தமிழகத்தில் மட்டும் 700 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. இதுவரை 650 தியேட்டர்கள் ‘லிங்கா’ படத்துக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதி 50 தியேட்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 65 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டும் 200 தியேட்டர்களில் திரையிடுகின்றன. அங்கும் இவ்வளவு தியேட்டர்களில் வேறு எந்த படமும் திரையிடப்பட்டது இல்லை.
லிங்கா படத்தில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அணை தகராறை மைய கருவாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ‘யு’ சான்று அளித்துள்ளனர்.