முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நாட்டை பொறுபேற்கும் போது ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக இருந்த தனிநபர் கடனானது 2015 ஆம் ஆண்டு அவர் ஆட்சியை விட்டுச் செல்லும் போது 4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருந்தாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள சகல மக்களின் கடன் சுமையை அதிகரித்து விட்டே மகிந்த ராஜபக்ச ஆட்சியை விடடுச் சென்றார்.அதேபோல் மகிந்த ராஜபக்ச நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்ற போது நாட்டின் மொத்த கடன் 21 லட்சத்து 39 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவாக இருந்தது.
மகிந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டு செல்லும் போது நாட்டின் மொத்த கடன் 73 லட்சத்து 90 ஆயிரத்து 899 மில்லியன் ரூபா.இதனையே மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு மிகுதியாக வைத்து விட்டுச் சென்றார்.
நாடு தற்போது கடன் பொறியில் சிக்கியிருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கமே காரணம்.பெற்ற கடன்களில் தரகு பணம் பெற்றனர்.
தேசிய உற்பத்தி துறையை அழித்தனர்.அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்காது, கண்காட்சி திட்டங்களை உருவாக்கினர். நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவாத அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தினர்.
நாட்டை கடனாளியாக்கி விட்டு, அந்த பணத்தை அழித்தனர். இவற்றை யார் செய்தனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.இவ்வாறான நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினர் ஆடை அணிந்து கொண்டா மக்களை பற்றி பேசுகின்றனர் என நான் கேள்வி எழுப்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த மகிந்த அரசாங்கத்திற்கு காலம் அவகாசம் இருந்தது.
போர் முடிந்த பின்னரும் போர் இல்லாத சூழ்நிலையில், 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சியை விட்டு செல்லும் போது நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் 44 பில்லியன் டொலர்கள்.
இரண்டு மடங்காக வெளிநாட்டு கடன் அதிகரித்து காணப்பட்டது.யுத்தம் நடைபெறாத நிலையில், எதற்கான இந்த பணம் செலவிடப்பட்டது.
அவர்கள் பெற்ற பெருந்தொகை கடன் காரணமாக நாடு தற்போது மிகப் பெரிய கடன் பொறியில் சிக்கியுள்ளது என்றார்.
முதலாம் இணைப்பு
அர்ப்பணிப்புகள் காரணமாகவே சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தது: கபீர் ஹசீம்
ஜக்கிய தேசியக் கட்சியினர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அமைதியான புரட்சியை செய்ததாகவும் அன்று முதல் தொடர்ந்தும் கட்சியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளனர்.
கட்சியினரை போலவே கட்சி என்ற வகையில் நாமும் சில அர்ப்பணிப்புகளை செய்துள்ளேம்.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்றிய போதிலும் தனித்து ஆட்சி அமைக்காது, நாட்டை ஆட்சி செய்வதற்கு பதிலாக நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அர்ப்பணிப்பை செய்ததுடன் ஜனவரி 8 ஆம் திகதி பொது வேட்பாளரை நிறுத்தியதன் மூலமும் ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்பை செய்தது. இதுவும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செய்த அர்ப்பணிப்பாகும்.
கடந்த 20 வருடங்களாக போராட்டம் நடத்தி வந்த கட்சி என்ற வகையில் இந்த அர்ப்பணிப்பை எங்களால் செய்ய முடிந்தது.கூலித் தொழிலாளிகளின் தேசம் என பெயரிடப்பட்ட சிங்கப்பூர் இன்று ஆசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக மாறியுள்ளது.
அந்நாட்டு மக்கள், தலைவர்கள் செய்துள்ள அர்ப்பணிப்புகள் காரணமாகவே சிங்கப்பூர் இந்த நிலைமையை அடைந்துள்ளது.
அதேபோல் குடிசைவாசி சமூகம் என கூறப்பட்ட கொரியா தற்போது தொழிற்நுட்பத்தின் கேந்திர நிலையமாக மாறியுள்ளது.மக்களும், அந்த நாடுகளின் தலைவர்கள் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாவே இந்த நாடுகள் இவ்வாறு முன்னேற்றத்தை நோக்கி சென்றுள்ளன.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை அனுஷ்டிக்கும் மே தினமானது அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளும் மக்களின் மே தினம் என்பதை மிகவும் அக்கறையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.