மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படும் மண் அகழ்வினை தடுக்கும் வகையில் பிரதேச செயலாளர் தலைமையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளை பிரதேச அபிவிருத்துக்குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,பட்டிப்பளை பிரதேச செயலாளர் த.டினேஸ் உட்பட தினைக்களங்களின் அதிகாரிகள்,பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புட்டிப்பளை பகுதியின் வாழைக்காலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுகள் நடைபெறுவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 16 இடங்களில் சட்ட விரோதமாக மண் அகழப்படுவதாகவும் அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்தார்.
இந்த சட்ட விரோத மண் அகழ்வுகள் இரவு வேளைகளிலேயே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் ரவுடிகள் போல் மற்றவர்களை அச்சுறுத்தி இந்த மண் அகழ்வில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு தீர்க்கமான முடிவு ஒன்றிணை இந்த பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கவேண்டும் எனவும் இந்த சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்க பொலிஸார் ஆதரவளிப்பதாகவும் இவை நிறுத்தப்படவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பெர்னாணந்து,பட்டிப்பளை பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் பொலிஸார் கண்காணிப்புடன் ஈடுபட்டுவருவதாகவும் அவ்வாறானவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
ஆத்துடன் வவுணதீவு பகுதியில் அனுமதிப்பத்திரத்துடன் மண் அகழ்வில் ஈடுபடுவதுடன் அந்த வாகனங்கள் கொக்கட்டிச்சோலை பகுதியூடாக பயணிப்பதன் காரணமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
0 Comments