வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் 36 வயதான கிறிஸ் கெய்ல், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக பங்கேற்றுள்ளார்.
கெய்ல், தனது காதலியும், ஜமைக்காவைச் சேர்ந்த பேஷன் டிசைனருமான நடாஷா பெரிட்ஜிடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நடாஷாவுக்கு பிரசவவலி ஏற்பட்ட தகவல் அறிந்து கிறிஸ் கெய்ல் சில தினங்களுக்கு முன்பு தாயகம் திரும்பினார்.
இதற்கிடையே பேட்டி அளித்த கெய்லின் சக அணி வீரர் சர்ப்ராஸ்கான், கெய்லுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அடுத்த இரு ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தவறான தகவல் பரிமாற்றம் காரணமாக, சர்ப்ராஸ்கான் தவறான தகவலை வெளியிட்டிருப்பது நேற்று தெரியவந்தது. அதாவது கெய்லுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதை கெய்ல் தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அவர் குழந்தைக்கு ‘ப்ளஷ்’ என்ற பெயர் சூட்டியிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெயர் இன்னொரு சர்ச்சைக்குரிய சம்பவத்தில் தொடர்புடையதாகும். கடந்த ஜனவரி மாதம் கிறிஸ் கெய்ல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது டி.வி. பெண் நிருபர் மெக்லானிக்கு பேட்டி அளித்தார்.
‘உனது கண் வசீகரமாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நாங்கள் எப்படியும் ஜெயித்து விடுவோம். அதன் பிறகு நாம் ஒன்றாக மது அருந்தலாம்’ என்று கூறியது சலசலப்பை உருவாக்கியது.
இவ்வாறு கூறி விட்டு இறுதியில் ‘டோன்ட் ப்ளஷ் பேபி’ என்றும் அந்த நிருபரை பார்த்து கூறினார். அப்படியென்றால் தமிழில் ‘வெட்கப்படாதே குழந்தாய்’ என்று அர்த்தம்.
அந்த சம்பவத்தில் உபயோகப்படுத்திய ஒரு வார்த்தையை இப்போது குழந்தைக்கு பெயராக வைத்திருப்பது ஆச்சரியப்படுத்தியுள்ளது. ‘ப்ளஷ்’ என்று தமாசுக்காக கெய்ல் வலைதளத்தில் பதிவு செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
தந்தையான கெய்லுக்கு, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘குட்டித்தேவதை ப்ளஷ் என்னை அங்கிள் என்று அழைக்கப்போவதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்று இணையதளத்தில் கூறியுள்ளார்.
0 Comments