பல்கலைக்கழக கட்டமைப்பை தற்போதைய காலத்திற்கு ஏற்றால் போல் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழங்களில் பகிடிவதைகள் , பாலியல் மற்றும் பால் நிலைகளை அடிப்படையாக கொண்ட வன்முறைகளைத் தவிர்ப்பது தொடர்பாக கொழும்பு, கலதாரி ஹொட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழங்களுக்குள் சட்டம் சரியாக செயற்படுத்தப்படாமையே அங்கு பகிடிவதைகள் , பாலியல் மற்றும் பால் நிலை ரீதியிலான வன்முறைகள் என்பன அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்புக் கூறவேண்டும். இவர்களே நாட்டின் சட்டத்தை பல்கலைக்கழகத்திற்குள் உறுதிசெய்ய அவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். இதனை செய்யாது குறித்த வன்முறைகளை தவிர்க்க முடியாது.
இதேவேளை தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பானது. 1942 ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டது. இதனால் இன்றைய காலத்திற்கு ஏற்றால் போல் அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தவகையில் இலங்கையில் தற்போது புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள பொலிஸ் பல்கலைக்கழகத்தை அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களின் கட்டமைப்புக்கு ஏற்றவிதத்தில் நிர்மாணிக்குமாரே நான் வலியுறுத்தியுள்ளேன்.
ஏனெனில், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களே அமெரிக்காவினதும் மற்றும் இங்கிலாந்தினதும் பல்கலைக்கழகக் கட்டமைப்புக்கேற்ப காணப்படுகின்றன. இதனால் குறித்த பொலிஸ் பல்கலைக்கழகத்தையும் அவ்வாறு அமைக்க கூறியுள்ளேன். இதேவேளை எதிர்க்காலத்தில் இங்கு இதுபோன்ற பல்கலைக் கழகங்களே நிர்மானிக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது சட்டவரைபொன்றும் தயாரிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments