மட்டக்களப்பு- திருப்பழுகாமம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாகவும் இரத்ததான நிகழ்வு!!

Sunday, January 31, 2021


 மட்டக்களப்பு திருப்பழுகாமம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாகவும் இரத்ததான நிகழ்வு, பழுகாமம் வைத்தியசாலையில் இன்று(30) நடைபெற்றது.


"விலை மதிப்பிட முடியாத அறப்பணியில் நீங்களும் பெருமையுடன் பங்காளராகுங்கள்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் டாக்டர் திருமதி கீர்த்திகா மதனழகன் தலைமையிலான தாதிய உத்தியோகத்தர்கள், குருதிப் பரிசோதகர்கள், வைத்தியசாலை சிற்றுழியர்கள் என பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடைகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குருதிக்கொடையாளராக கலந்துகொண்டார்.

போரதீவுபற்று இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் பொதுமக்கள் மத்தியில் குருதித்தான விழிப்புணர்வையும், கொரோனாவிற்கு பின்னர் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள குருதிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலுமே இவ்வாறான இரத்ததான நிகழ்வினை செய்துள்ளோம் என, ஏற்பாட்டுக் குழுவினர் இதன்போது தெரிவித்தனர்.
READ MORE | comments

கொவிட்சீல்ட்' கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

 


பொதுமக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பு நடவடிக்கைக்கு அமைவாக 'கொவிட்சீல்ட்' கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசியேற்றும் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்திசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம் கனிபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படம் ; நூருல் ஹுதா உமர் )

READ MORE | comments

ஸ்ரீலங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...!

 


நூருல் ஹுதா உமர்.


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த புள்ளிக் கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அம்பாறை காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் ஸ்ரீலங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சன்ஜய ஜயசிங்க மற்றும் அதன் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  ஆறு சிங்கள, இரண்டு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழ் என புதிய 09 ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
READ MORE | comments

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலய வாவியில் மிதந்துவந்த ஆணின் சடலம்

 


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய பொலிஸாரால் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்

 


இலங்கையில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் மார்ச் மாதம் வரை உயர்வடைந்து காணப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

மழை காரணமாக காய்கறிகளின் பங்குகள் குறைக்கப்பட்டதே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரையில் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுமென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

நுவரெலியாவில் நிலநடுக்கம்..!!


 நுவரெலியா – வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.


குறித்தப் பகுதியில் இந்த சிறிய அளவிலான நிலநடுக்கமானது இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி, 2.0 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
READ MORE | comments

இந்த தடுப்பூசி 100 வீதம் பாதுகாப்பு தராது” மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர வெளியிட்ட புதிய தகவல்

 


கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து பெற்றவர்களும் ஏனையவர்கள் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பிரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்றைய தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து பெற்றவர்களும் ஏனையவர்கள் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பிரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஏனெனில் இத்தடுப்பூசியினால் 100 வீதம் பாதுகாப்பு தராது. பாதுகாப்பற்ற சிலரும் இருக்கலாம்.

அதனால் இத்தொற்றுக்கு தடுப்பூசி பெற்றவர் வாழும் பகுதியிலும் தொற்று பரவும் நிலைமை ஏற்பட்டால் அவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தவே நேரிடும். அச்சமயத்திற்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும்.

READ MORE | comments

பல மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியம்

 


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதை கூறியுள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, மாத்தளை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தொிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மாவட்டங்களிலும் இன்று பி.ப. 1 மணியின் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறுகின்றது.

READ MORE | comments

190 நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை

 


190 நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்கின்ற போதிலும், இலங்கைக்கு இந்தியா முன்னுரிமை வழங்கியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு, அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியது.

இலங்கைக்கு மிக விரைவில் எஸ்டா செனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியின் பெறுமதி 3 முதல் 4 அமெரிக்க டொலர் வரை உள்ளது.

மிகவும் இலாபமாக இந்த பெறுமதியை கொண்ட தடுப்பூசியே தற்போது காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், சீனாவினால் 3 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும்.

எனினும், தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தாம் பொறுமையாக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளது.

எனினும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் தடுப்பூசிகள் நாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பது இன்னும் நிச்சயமற்றே காணப்படுகின்றது.

மார்ச் மாதம் நடுப்பகுதி அல்லது மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கும் என தனக்கு அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிததார்.

இவ்வாறான நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 3 வகையிலான கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளது

இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த தடுப்பூசியானது, சிறியளவிலான பாதுகாப்பு மாத்திரமே என கூறிய அவர், சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


READ MORE | comments

தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது - யாரெல்லாம் போடக்கூடாது - வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன்..!!

Saturday, January 30, 2021

 


ஒரு வருடமாக பாரியளவில் ஆராயப்பட்டே தற்போது தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை தயாரித்து விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு போட்டு பரிசோதனை செய்தே இதனை உறுதிப்படுத்திருக்கிறார்கள். எல்லா நாடுகளும் மூன்று நிலைகளில் இது தொடர்பான பரிசோதனைகள் செய்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றன.


அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர குறித்த நாடுகளின் சுகாதார நிறுவனங்கள் இதற்கான அனுமதியை கொடுத்திருக்கின்றன. அந்த அனுமதி கொடுத்த பின்னரே நாம் அவற்றை பயன்படுத்துகிறோம். பல கட்டங்கள் பல பரிசோதனைகளை தாண்டி நிரூபிக்கப்பட்ட பின்னரே இந்த தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

எனவே மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசியை எடுக்கவேண்டும் என்று வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

கேள்வி: கொரோனா வைரஸ் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகின்ற தடுப்பூசிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமா ?

பதில்: கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விடயத்தில் பல்வேறு நாடுகள் தற்போது பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருக்கின்றன. இந்த தடுப்பூசிகளில் இருக்கின்ற பதார்த்தம் என்னவென்று நாம் பார்ப்போமானால் கொரோனா வைரஸின் பகுதிகள் அல்லது குற்றுயிராக்கப்பட்ட இந்த வைரஸின் பகுதிகள் உடம்பை தாக்காத வகையில் உடம்புக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை பெற்றுக் கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றது. உடம்புக்குள் இந்த தடுப்பூசி சென்றவுடன் எதிர்ப்பு சக்திகள் உருவாக ஆரம்பித்துவிடும். இதில் இரண்டு முறை ஒரே தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு தடவைகள் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட பின்னரே முழுமையாக ஒருவருக்கு அந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி கொரோனாவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சக்தி உருவாகும்.

கேள்வி : உலகில் எந்தெந்த நாடுகளில் எவ்வாறான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

பதில்: அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பைசர் மற்றும் மொடோனா என இரண்டு தடுப்பூசிகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை அவசரத் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனமும் அறிவித்திருக்கிறது. அந்த தடுப்பூசிகள் மிகமிக சக்தி வாய்ந்தவை. மேலும் அவை சிறந்ததோர் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடியதாக இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் இந்தியா சீனா ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தற்போது தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் பாவனைக்கும் தற்போது வந்துவிட்டன. ஆனால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளானது -70 தொடக்கம் -80 வரையான டிக்ரி காலநிலையில் வைத்துக்கொள்ள வேண்டியவைகளாக காணப்படுகின்றன.

எனவே, அந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வருமிடத்தில் மிகவும் கவனமாக அவற்றை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். அதேவேளை ஏனைய நாடுகளில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் 2 தொடக்கம் 8 டிகிரி காலநிலையில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவே காணப்படுகின்றன. இவை பொதுவாக இதுவரை காலமும் நாங்கள் பாவிக்கின்ற தடுப்பூசிகளை போன்ற ஒரு தன்மையைக் கொண்டுள்ளன.

நாம் ஏற்கனவே பல தடுப்பூசிகளை பெற்றிருக்கின்றோம். எனவே இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும். காரணம் அதற்கான பொறிமுறைகளை எம்மால் இலகுவாக உருவாக்க முடியும். விசேட பொறிமுறைகள் இதற்கு தேவையில்லை. இந்தியா சீனா ரஷ்யா ஆகிய நாடுகளின் தடுப்பூசி வகைகளைப் பயன்படுத்துவது எமக்கு இலகுவாக இருக்கும். இப்பொழுது எங்களுக்கு உடனடியாக கிடைக்கக் கூடியதாக இருப்பது இந்தியாவின் கொவிசீல் எனப்படும் தடுப்பூசியாகும். இது பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்த முறையில் உருவாக்க கூடியதுமான ஒரு தடுப்பூசியாகும். இதில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. இதனைத்தான் நாங்கள் இலங்கையில் முதலாவதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

கேள்வி : இலங்கைக்கு இன்று இந்தியாவிலிருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்க ஏற்பாடாகியுள்ளது. அது மட்டுமா அல்லது ஏனைய நாடுகளிலிருந்தும் எமக்கு தடுப்பூசிகள் கிடைக்குமா?

பதில் : இந்தியாவிலிருந்து எமக்கு முதலாவதாக ஆறு இலட்சம் தடுப்பூசிகள் வருகின்றன. அதனைவிட மேலும் இந்தியாவிலிருந்து எமக்கு தடுப்பூசிகள் கிடைப்பதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது. முதல் கட்டமாக தற்போது 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கின்றன. தொடர்ந்து இந்தியாவிலிருந்து மேலும் கிடைக்கும். இதனைவிட உலக சுகாதார ஸ்தாபனமும் எமக்கு ஒரு குறிப்பிட்டளவு தடுப்பூசிகளை வழங்கும். எமது நாட்டுக்கென்று ஒரு கோட்டா காணப்படுகின்றது. அதற்கேற்ற வகையில் அந்த தடுப்பூசிகள் கிடைக்கும்.

கேள்வி :அந்த தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனம் எங்கிருந்து எமக்கு பெற்றுக்கொடுக்கும்?

பதில் :அது நிச்சயமாக தெரியாது. ஆனால் பொதுவாக ஸ்பைசர் தடுப்பூசியாக இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. இந்திய தடுப்பூசியை தவிர சீனா ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை ஜனாதிபதி நடத்தியிருக்கின்றார். எனவே அந்த நாடுகளில் இருந்தும் எங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதற்தற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. வெகுவிரைவில் மிக அதிகமான தடுப்பூசிகள் எமது நாட்டை வந்தடையும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது நாங்கள் எதிர்பார்க்கின்ற சனத்தொகைக்கு இந்த தடுப்பூசிகளை பாவிக்கக் கூடியநிலை வெகு விரைவில் ஏற்படும் என்று நம்புகிறோம்.

கேள்வி: இந்தியாவில் இருந்து தற்போது தடுப்பூசிகள் வரவுள்ள நிலையில் மேலும் சில நாடுகளில் இருந்தும் தடுப்பூசிகள் கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளதா?

பதில் : நிச்சயமாக கிடைக்கும். அத்துடன் இந்தியாவிலிருந்து மேலும் தடுப்பூசிகள் கிடைக்கும்.

கேள்வி : இந்தியா எந்த தரப்புடன் இணைந்து இந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது?

பதில் : இந்தியா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஒரு பெரிய வெற்றி என்றே கூற வேண்டும். காரணம் அந்த தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா அந்த தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு விநியோகிப்பதற்கும் ஆரம்பித்திருக்கிறது. உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது.

கேள்வி: இந்தியாவில் தற்போது இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா?

பதில்: ஆம். இந்தியாவில் தற்போது இந்த கொவிசீல் என்ற தடுப்பூசி பாவனைக்கு வந்திருக்கிறது. வெற்றிகரமாக தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றது.

கேள்வி: தற்போது இலங்கைக்கு இந்த தடுப்பூசிகள் வந்தவுடன் இலங்கையில் முதல்கட்டமாக யாருக்கு எந்த முறைமையின் அடிப்படையில் எவ்வாறான பொறிமுறையில் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன என்பதை கூற முடியுமா?

பதில்: இது தொடர்பில் சுகாதார துறையானது ஒரு திட்டத்தையும் பொறிமுறையையும் தயாரித்திருக்கிறது. முதலாவதாக சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். காரணம் அவர்களுக்குதான் தற்போது ஆபத்து அதிகமாக இருக்கின்றது. அடுத்ததாக முப்படை மற்றும் பொலிசாருக்கு இந்த தடுப்பூசிகளை போடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர் அடுத்த கட்டமாக நாங்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க ஆரம்பிப்போம். முதலாவதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனைவிட முக்கியமாக வேறு நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டமிடல்கள் தற்போது இடம்பெறுகின்றன.

கேள்வி: இதற்கான பொறிமுறையை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதா?

பதில்: வெற்றிகரமான பொறிமுறையை உருவாக்கியிருக்கின்றோம். அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அலுவலகம், பிரதேச சபைகள் என சகலரும் இணைந்து தேர்தல் ஆணைக்குழுவின் பட்டியலையும் எடுத்து இந்த பொறிமுறையை உருவாக்கியுள்ளோம். அனைத்து மக்களும் இதில் உள்ளடங்கும் வகையில் இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகலரையும் அழைத்து தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: தடுப்பூசி ஏற்றப்படும் பொறிமுறை குறித்து விளக்க முடியுமா?

பதில்: அதாவது தடுப்பூசி போடப்பட வேண்டியவர்கள் தொடர்பாக நாங்கள் சில தினங்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்போம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி அவர்கள் நாங்கள் அறிவிக்கும் இடத்திற்கு வரவேண்டும். முதலாவதாக அவ்வாறு வருகிறவர்களிடம் அங்கு இருக்கின்ற சுகாதார துறையினரால் சில கேள்விகள் கேட்கப்படும். அதாவது தடுப்பூசி போடப்படுவதற்கு அவர்கள் தகுதியானவர்களா என அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தடுப்பூசி சம்பந்தப்பட்டவர்களுக்கு போடப்படும். தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அவர்கள் 30 நிமிடங்கள் மற்றுமொரு அறையில் தங்க வைக்கப்படுவார்கள். அதாவது ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகின்றதா என்பதை இதன் போது நாம் பார்ப்போம். 30 நிமிடங்கள் அவதானிக்கப்பட்ட பின்னரே தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் செல்லமுடியும். அவர்களுக்கு ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் அவர் இரண்டாவது தடவை எப்போது தடுப்பூசி ஏற்றுவதற்கு வரவேண்டும் என்ற திகதிகள் குறிக்கப்பட்டு வழங்கப்படும்.

கேள்வி: பக்க விளைவுகள் குறித்து பேசப்படுகின்றதே?

பதில்: பக்க விளைவுகளை பொறுத்தவரையில் சாதாரணமாக நாம் தடுப்பூசி ஒன்றை போடும்போது ஏற்படுகின்ற ஒரு சில நிலைமைகளை கூற முடியும். பொதுவாக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் சிறிய காய்ச்சல் ஏற்படலாம், அல்லது தடுப்பு ஊசி போட்ட இடத்தில் வலி இருக்கலாம், இவை சாதாரணமான விடயங்கள். நாங்கள் சம்பந்தப்பட்டவரை 30 நிமிடங்கள் அவதானிப்பதற்கு காரணம் வேறு ஏதாவது பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றதா என்பதை பார்ப்பதற்காகவாகும். அதாவது அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிக மிக அரிதாகவே இருக்கின்றன. ஆனால் நாங்கள் மிக அவதானமாக பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை பார்ப்போம். அவ்வாறு ஏற்படுமிடத்து அவர்களுக்கு தேவையான அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சை நிலைமைகள் அனைத்தும் அங்கு தயார் செய்யப்பட்டிருக்கும். எனவே எவரும் இங்கு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் தயார் நிலையில் இருக்கும். சகல வசதி கொண்ட அம்புலன்ஸ் வண்டி தயாராக அங்கு இருக்கும். அதுமட்டுமன்றி குறித்த தடுப்பூசி கட்டாயமாக ஒரு வைத்தியரினாலேயே சம்பந்தப்பட்டவருக்கு போடப்படும். அது ஒரு சிறிய ஊசி. கையில் மேல் பக்கத்தில் போடப்படும். மிக மிக சிறிய ஊசி. கொஞ்சம் மருந்து அதில் இடப்பட்டிருக்கும். பெரிய வலி எதுவும் இருக்காது. சிறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. ஆனால் பாரதுரமான பக்க விளைவுகள் ஏற்படவில்லை.

கேள்வி: இரண்டு தடுப்பூசிகளை ஒருவர் போட்டுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் எவ்வளவுகால இடைவெளியில் அவர் இந்த இரண்டாவது தடுப்பூசியை பெறவேண்டும்? தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பின்னர் அவரை எவ்வாறு சுகாதார நிலைமைகளை பின்பற்றவேண்டும்? உணவு கட்டுப்பாடு எதுவும் அவசியமா? முதலாவது தடுப்பூசியின் பின்னர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இரண்டாவது ஊசியின் பின்னர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக விளக்குங்கள்?

பதில்: முதலாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னர் நாம் தற்போது எவ்வாறு சுகாதார அறிவுறுத்தல்களை போகின்றோமோ அதேபோன்று கைகழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கட்டாயமாக செய்ய வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது நாங்கள் கூறுகின்ற சுகாதார கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். அதேநேரத்தில் உணவு விடயங்கள் தொடர்பில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. எதையும் சாப்பிடலாம். நான்குவார இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் கூட அவர் குறித்த சுகாதார அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

கேள்வி: எதற்காக அவ்வாறு செய்யவேண்டும்?

பதில்: காரணம் அவருக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகுவதற்கு சிறிய காலம் தேவைப்படும். உடனடியாக மேஜிக் போன்று எதிர்ப்புசக்தி உருவாகாது. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிய பின்னரும் அவர் தொடர்ந்து ஏன் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவருக்கு எதிர்ப்புசக்தி உருவாகியவுடன் அவருக்கு வைரஸ் தொற்றாது. ஆனால் நீங்கள் ஒரு இடத்தில் சென்று எதையாவதை தொட்டால் அல்லது மற்றவரிடமிருந்து உங்கள் கைகளுக்கு அல்லது உங்கள் தோல்களில் வைரஸ் ஒட்டிக்கொண்டால் அவை அங்கு தங்கியிருக்கும். உதாரணமாக கையில் வைரஸ் தங்கியிருக்கலாம். அப்போது நீங்கள் அதே கையுடன் வீட்டுக்கு சென்று அங்கே கைகளை கழுவாமல் கைகளினால் வேறு இடங்களை ஏனைய பொருட்களை தொடும் பட்சத்தில் அது வீட்டில் இருக்கின்ற தடுப்பூசி போடாதவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். சமூகத்தில் இருக்கின்ற அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு எமக்கு குறிப்பிட்ட கால எல்லை அவசியமாகும். அதுவரை இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். அதிகளவானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் இதில் தளர்வுகளை செய்யலாம்.

கேள்வி: முதலாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டு ஒருவர் இரண்டாவது தடுப்பூசியை போடுவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருக்கின்றதா?

பதில்: இல்லை என்றே அதற்கு கூறவேண்டும். முதலாவது தடுப்பூசியிலேயே சம்பந்தப்பட்டவருக்கு ஒரு அளவுக்கான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும். கணிசமான சக்தி உருவாகிவிடும். ஆனால் பூரணமான எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே இடையில் வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை.

கேள்வி: சுகாதாரத் துறையினர் எந்த அடிப்படையில் இவ்வளவு தூரம் நம்பிக்கையாக இதனை பற்றி பேசுகின்றனர்?

பதில்: எங்களுக்கு இதற்கான ஆதாரங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தாக்குவதை தடுப்பற்கான தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை நாங்கள் உலகளாவிய பார்த்த விடயங்களின் அடிப்படையில் இதில், நாம் நம்பிக்கை வைக்கிறோம். மிக முக்கியமாக இந்த தடுப்பூசி திடீரென உருவாகவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடமாக பாரியளவில் ஆராயப்பட்டே தற்போது தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை தயாரித்து விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு போட்டு பரிசோதனை செய்தே இதனை உறுதிப்படுத்திருக்கிறார்கள். எல்லா நாடுகளும் மூன்று நிலைகளில் இது தொடர்பான பரிசோதனைகள் செய்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றன. அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர் குறித்த நாடுகளின் சுகாதார நிறுவனங்கள் இதற்கான அனுமதியை கொடுத்திருக்கின்றன. அந்த அனுமதி கொடுத்த பின்னரே நாம் அவற்றை பயன்படுத்துகிறோம். பல கட்டங்கள் பல பரிசோதனைகளை தாண்டி நிரூபிக்கப்பட்ட பின்னரே இந்த தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசியை எடுக்கவேண்டும்

கேள்வி: தடுப்பூசியை யார் எடுக்கக்கூடாது ?

பதில்: கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார் விரைவில் தாயாக எதிர்பார்க்கின்றவர்கள் இதனை எடுக்கக்கூடாது. காரணம் அவர்களுக்கு ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான ஆய்வுகள் இதுவரை போதுமானதாக இல்லை. கடந்த ஒரு வருட காலமாகவே இந்த பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. எனவே அதில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பான ஒரு தெளிவற்ற தன்மை இருக்கின்றது. எனவே கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார் விரைவில் கர்ப்பிணியாக போகின்றவர்கள் இதனை போடக்கூடாது. அதுமட்டுமன்றி கடுமையான அலர்ஜி உள்ளவர்கள் தடுப்பூசி பெற முன்னர் வைத்திய ஆலோசனைகளை பெற்ற பின்னரே தடுப்பூசி பெறவேண்டும். சிலருக்கு சில உணவுகளை உண்டதும் உடம்பு முழுவதும் தடித்துவிடும். அதுபோன்ற அழட்சி உள்ளவர்கள் இதனை போடக்கூடாது. அதனால்தான் தடுப்பூசி போடப்பட முன்பதாக மக்களிடம் நாங்கள் கேள்வி கேட்கும் ஒரு பொறிமுறையை மேற்கொண்டுவருகிறோம். அவ்வாறானவர்கள் ஒரு பெரிய வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு நிலையிலேயே தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும். இதில் வைத்தியர் தீர்மானம் எடுக்கலாம்.

கேள்வி: எமக்கு உரிய முறையில் தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் விரைவாக நாட்டு மக்களுக்கு அதனை போட்டு விட முடியுமா?

பதில்: முடியும். அதற்கான ஒரு பெரிய ஒரு திட்டத்தையும் பொறிமுறையையும் நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம். ஒரு தேர்தலைப் போன்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைபெறும். முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு மூன்று நாட்களில் தடுப்பூசிகளை கொடுத்துவிடுவோம். திட்டமிட்ட அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெறும். அதாவது உதாணரமாக யாழ். வைத்தியசாலையில் சுகாதார துறையினருக்கு சகாதார துறையினருக்கு தடுப்பூசிபோடப்படும்போது குருநாகல் வைத்தியசாலையிலும் வழங்கப்படும்.

கேள்வி: சனத்தொகையில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது?

பதில்: ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு போடப்படும். ஆனால் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்படாது. தற்போதைக்கு உடனடியாக அவர்களுக்கு போட மாட்டோம். அவர்களுக்கு பின்னர் தடுப்பூசி போடுவது குறித்து யோசிக்கலாம்.

கேள்வி: இந்தியாவின் தடுப்பூசிக்கு இலங்கையின் மருத்துவ சபை அனுமதி வழங்கிவிட்டதா?

பதில்: இலங்கை மருத்துவ சபை அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது

கேள்வி: தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாகவா வழங்கப்படும்?

பதில்: இலங்கை மக்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் முற்றுமுழுதாக இலவசமாகவே போடப்படும். இலங்கை இலவச மருத்துவ சேவை வழங்க நாடு என்ற வகையில் இலவசமாகவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும். மறுபுறம் ஒரு தடுப்பூசி ஆறு டொலர் பெறுமதி கொண்டதாக இருக்கின்றது. இரண்டு கோடி மக்களுக்கு தடுப்பூசி பெறுவது என்றால் 12 கோடி டொலர் செலவு ஏற்படுகின்றது. இந்த 12 கோடி டொலரை செலவழிப்பதால் எமக்கு பாரிய இலாபம் கிடைக்கும்.

தடுப்பூசி போட்டு வைரஸை கட்டுப்படுத்திவிட்டால் நாம் சகல தொழிற்சாலைகளையும் இயங்க வைக்கலாம். தொழில்களை ஆரம்பிக்கலாம். பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து பொது நிறுவனங்களும் இயங்க ஆரம்பிக்கும். மக்களின் அழுத்தம் குறையும். பொருளாதார ரீதியில் பாரிய இலாபத்தை நாம் அடைவோம்.

உற்பத்தித்திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் வருமானம் மிகப்பெரியதாகும். சுகாதார துறையினர் தற்போது பாரிய களைப்பில் இருக்கின்றனர். அவர்களுக்கும் இந்த வைரஸை அகற்றி விட்டோம் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படும்போது பாரியதொரு சிறந்த ஆரோக்கிய நிலை ஏற்படும்.

எனவே இந்த தடுப்பூசிகளால் நாட்டுக்கு பெரியதொரு நன்மை கிடைக்கும். சமய வழிபாடுகள் ஆரம்பித்துவிடும். இது மக்களுக்கு ஒரு ஆன்மீக சுகத்தை பெற்றுக் கொடுக்கும். ஆன்மீகமும் இந்த பொது ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு இருக்கின்றது.

கேள்வி: எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று நம்புகிறீர்கள்?

பதில்: ஆம். விடிவுகாலம் ஒன்று தெரிகிறது. வருட இறுதியில் விடிவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
READ MORE | comments

பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்..!!

 


பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை, நாளைய தினம் (31) முன்னெடுக்கப்படவுள்ளது.


இதன்படி, இந்த நிகழ்வு நாளை காலை 9.00 மணிக்கு, பொலிஸ் வைத்தியசாலை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அத்துடன், கண்டி – குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையிலும், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்

நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கை, நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, முதலாவது கொரோனா தடுப்பூசி இராணுவ வைத்தியசாலையில் மூவருக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நாட்டில் Astra Zeneca Covishield கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்ட முதலாவது சுகாதார பணியாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு அமைவாக 5 ஆயிரத்து 286 பேருக்கு நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும், கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகளில் ஆயிரத்து 584 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராணுவ வைத்தியசாலையில், 600 பேருக்கும், கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் 382 பேருக்கும் இன்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி வழங்கபட்ட எவருக்கும், பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

கொவிட் தடுப்பூசி ஏற்றல் ஆசிரியர்களுக்கு முன்னுரி வழங்குமாறு கல்வி அமைச்சர் அரசாங்கத்திடம் வேண்டுகோள்.

Friday, January 29, 2021

 







READ MORE | comments

பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக திறக்க நடவடிக்கை!!

 


மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய நிலையில், சதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கபட்டுள்ளன.

இந்த நிலையில், ஏனைய வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில், பாடசாலைகளை படிப்படையாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களுடன் தொடர்புகளை கொண்டிருக்க கூடியவர்களாக ஆசிரியர்கள் காணப்படுவதன் காரணமாக அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.

இதன்படி, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

READ MORE | comments

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய உள்ளீர்ப்பு இடம்பெறாமையினால் 40000 மாணவர்கள் நிர்க்கதி- இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம்!!

 


இலங்கை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய உள்ளீர்ப்பு இடம்பெறாமையினால் அதற்கான விண்ணப்பித்த சுமார் 40000 மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவிக்கிறது.


2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றியவர்களை 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கடந்த வருடம் கோரப்பட்டிருந்தது. எனினும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளீர்ப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்து்ளளார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஏனைய அரச உயர் கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது, அவ்வாறு விண்ணப்பித்தால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்நிலையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேசிய கல்லியியல் கல்லூரிகளுக்கான உள்ளீர்ப்பு தாமதமடையும் போது, வெளியேறுதலும் தாமதமடையும். எனவே, ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும் நிலமை ஏற்படக் கூடும் என அவர் எச்சரித்துள்ளர்.

அவ்வாறே, 2019 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகள் கூட வெளிவந்துள்ளதோடு, 2019 ஆம் ஆண்டு பெறுபேறுகளும் விரைவில் வெளிவரவுள்ளன. எனினும் 2018 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதி கல்லூரி அனுமதிக்காக விண்ணப்பித்தமாணவர்களை உள்ளீர்ப்பு செய்ய முடியாது போயுள்ளதாக மஹிந்த ஜயசிங்க சுட்டிக் காட்டினார்.

எனவே, விரைவில் உள்ளீர்ப்பு நடடிவக்கைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் 8 ஆம் திகதி கல்வி அமைச்சிற்று முன்னர் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

புனானையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ! 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி

 


பொலன்னறுவை - மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியில் இன்று (29) தனியார் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (29) காலை 6.30 மணிக்கு புனானைப் பிரதேசத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பேருந்தில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3400 கொரோனா தடுப்பூசிகள் ! தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது


 ரீ.எல்.ஜவ்பர்கான்)

இந்திய அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் இன்று(29) ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3400 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாளை சனிக்கிழமை ஆரம்பமாவதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் உட்பட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமை புரியும் வைத்தியர்கள் சுகாதார ஊழியர்களுக்கு இத்தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக்கப்பட்ட பல பிரிவுகள் அடங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 573 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

கொழும்பு புறநகர்ப் பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற படுகொலை! அம்பலமான தகவல்கள்


 பாணந்துறை பல்லேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த நபரை கொலை செய்வதற்காக 7 நாட்களுக்கு வீடொன்றை வாடகைக்கு பெற்று திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளிகளுக்கு குறித்த வீட்டை வாடகைக்கு விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி காலை 9.15 மணியளவில் மொரடுவையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் உயிரிழந்திருந்தார். இதேவேளை, குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி ஒன்றும் 16 தோட்டாக்களும் மற்றும் மெகசின் ஒன்றும் பாணந்துறை வந்துராமுல்லை பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

READ MORE | comments

ஒரு வாரத்திற்கு காரைதீவில் 3 பாடசாலைகள் மூடக்கம் !

 


( வி.ரி.சகாதேவராஜா.)

கல்முனை சுகாதாரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள மூன்று பாடசாலைகள்  இன்று(29) வெள்ளிக்கிழமை தொடக்கம் ஒரு வாரகாலத்திற்கு மூடப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறையினரின் பரிந்துரைக்கேற்ப காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி சண்முகா மகா வித்தியாலயம் இ.கி.மி.பெண்கள் பாடசாலை ஆகிய 3 பாடசாலைகளே இவ்விதம் மூடப்பட்டுள்ளன என கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.

இதுவரை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஜந்து மாணவர்களும் இ.கி.மி.பெண்கள் பாடசாலை மற்றும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் தலா ஒரு மாணவரும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். முன்னெச்சரிக்கையாகவே இவ்விதம் பாடசாலை மூடப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த வெள்ளியன்று காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நடாத்திய பி சிஆர் சோதனைகள் இவ்விதம் இதுவரை ஏழு மாணவர்கள் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 69 பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

மட்டக்களப்பில் 5ம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று — 30 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

 


மட்டக்களப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் 5ம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று—30மாணவர்கள் தனிமைப்படுத்தலில்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருகின்றது.

மட்டக்களப்பு நகரில் பிரபல கனிஸ்ட பாடசாலை  5ம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது இனறு;(29)காலை கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டைமுனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாணவானுக்கு தொற்று உறுதியானதையடுத்து குறித்த பாடசாலையில் அம்மாணவானின் வகுப்பில் பயிலும் 30 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான மாணவனின் தாதி உத்தியோகத்தரான தந்தை ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாகி சிகச்சை பெற்றுவரும் நிலையில் மகனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில தினங்களின் முன்னர் மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித மிக்கேல் கல்லுரியின் 10ம் ஆண்டு மாணவனுக்கும் கொரோனா தொற்று ஏறபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை- மயிலம்பாவெளி மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!!

 


கடந்த 8 மணித்தியாலங்களில் மயிலம்பாவெளியில் 218 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு நகரத்தில் 118.1 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தெரிவித்தார்.

 
கடந்த 8 மணித்தியாலங்களில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


கடந்த 8 மணித்தியாலங்களில் நவகிரி 8.1 மில்லிமீட்டர், தும்பங்கேணி 52.7 மில்லிமீட்டர், உன்னிச்சை 23 மில்லிமீட்டர், வாகனேரி 88.3 மில்லிமீட்டர், கட்டுமுறிவு 11 மில்லிமீட்டர், றூகம் 43 மில்லிமீட்டர், கிரான் 88.2 மில்லிமீட்டர், பாசிக்குடா 80 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைப்பொறுப்பாளர் தெரிவித்தார்.
 
நீரேந்து பிரதேசங்களை அண்டிய பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
READ MORE | comments

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!!

 


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அங்கொடவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் அதிகளவான கொவிட் அறிகுறிகளை வெளிப்படுத்தியதன் காரணத்தினால் நேற்று மாலை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அவரது கணவர் காஞ்சனா ஜெயரத்ன மற்றும் அவரது மகள் மீது நேற்றைய தினம் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனைகளில் கோவிட் 19 க்கு எதிர்மறையாக முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
READ MORE | comments

பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று- பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்!!

 


பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த நிலமை மோசமடைவதற்கு முன்னர், மாணவர்களிடையே பி.சி.ஆர் பரீசோதனைகளை எழுமாறாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை இலங்கை ஆசிரியர் சங்த்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதால், பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
READ MORE | comments

இலங்கையில் தடுப்பூசி முதன்முதலில் மூன்று இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது!!

 


இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் 5 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

READ MORE | comments

கல்முனை மாநகர திண்மக் கழிவகற்றலுக்கு புதிய வாகனம் : சட்ட நடவடிக்கையும் கடுமையாக்கப்பட்டுள்ளது - டாக்டர் அர்சத் காரியப்பர்

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சபையினால் மாநகர மக்களின் திண்மக்கழிவகற்றும் தேவையை பூர்த்திசெய்ய திண்மக்கழிவகற்றும் வாகனம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) மாலை கல்முனை மாநகர முன்றலில் நடைபெற்றது.  திருத்தியமைக்கப்பட்ட வாகனம் கல்முனை மாநகர சபை  முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர், புதிதாக சேவைக்கு வந்துள்ள இந்த திண்மக்கழிவகற்றல் வாகனம் ஏ வலயத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. அண்மைக்காலமாக திண்ம கழிவகற்றல் நடவடிக்கைகளில் ஒரு சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தது. கழிவுகள் கொட்டப்படும் பள்ளகாட்டில் ஜெ.சி.பி இயந்திரத்தின் பழுது, குப்பைகளை பரிமாற்றம் செய்து ஏற்றப்படும் இடமின்மை போன்ற காரணங்களினால் திண்ம கழிவகற்றல் நடவடிக்கைகளில் தாமத நிலை காணப்பட்டது.

இவ்விரு காரணிகளுக்கு மாற்றீட்டு நடவடிக்கைகள் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில தினங்களில் திண்ம கழிவகற்றல் நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் வெகு விரைவில் திண்ம கழிவகற்றல் வாகனங்கள் வரும் தினங்கள் முன்கூட்டி அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது இடங்களிள் குப்பை போடுதல் முன்பை விட கடுமையான முறையில் தடை செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கையும் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றார்.
 
READ MORE | comments

ஈழத்து தமிழிலக்கியத்துறையில் நிரப்பப்படாத வெற்றிடம் டொமினிக் ஜீவா

 


செ.துஜியந்தன்

ஈழத்து நவின இலக்கியத்துறையின் முன்னோடி பிரபல பன்முக எழுத்தாளுமை டொமினிக் ஜீவா 28-01-2021 அன்று மாலை தைப்பூச நன்னாளில் தனது 94 ஆவது வயதில் இறையடிசேர்ந்தார். மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா பன்முன ஆளுமை படைத்தவர். டொமினிக் ஜீவா ஒரு படிக்காத மேதை , உன்னத மனிதாபிமானி, முற்போக்குச் சிந்தனையாளர், சிறந்த பத்திரிகையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் என பல அவதாரங்களை எடுத்தவர் டொமினிக் ஜீவா. இவரது இழப்பு தமிழ்கூறும்  நல்லுலகிற்கு ஈடிணையில்லா பெரும் இழப்பாகும்.

டொமினிக் ஜீவா 1927-06-27 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவரது தந்தை அவிராம்பிள்ளை, தாய் மரியம்மா. இளமைக் காலம் முதல் பல்துறைக் கலைகளையும் அற்றப்படுத்தும் வல்லமை கொண்டவர். முதன் முதலில் இலக்கியத்துறைக்குள் 1946 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்களின் முக்கியமானவராக கருதப்பட்ட ப.ஜீவானந்தம் என்பவர் தலைமறைவு வாழ்க்கை வாழும் பொருட்டு 1948 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அப்போது டொமினிக் ப.ஜீவானந்தத்தை சந்தித்தார். அன்று முதல் ஜீவானந்தத்தின் வழிகாட்டுதலில் தமது அரசியல், சமூக, இலக்கிய நோக்கினை சரியாக அமைத்துக்கொண்டார். அதனால் டொமினிக் என்ற தனது பெயருடன் ஜீவா என்பதை இணைத்துக் கொண்டு டொமினிக் ஜீவா என்று அறியப்பட்டார்.

சுதந்திரன் இதழ் 1956 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் டொமினிக் ஜீவாவின் எழுத்தாளன் என்ற சிறுகதை முதற்பரிசை பெற்றது. அதனைத் தொடர்ந்து தினகரன், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் தமிழ் நாட்டில் வெளிவந்த இலக்கிய இதழ்களான  சாந்தி, சரஸ்வதி, தாமரை அகிய இதழ்களில் இவரது சிறுகதைகளும், படைப்புகளும் வெளியாகியிருந்தன.

1966-08-15 முதல் மல்லிகை இதழை வெளியிட்டார். அன்று முதல் மல்லிகை டொமினிக் ஜீவா என்ற பெயராலும் அறியப்பட்டார். மல்லிகையின் மகுட வாக்கியம் 'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்: என்ற பாரதியின் வாக்காகும்.

சிகை அலங்கரிக்கும் நிலையம் ஒன்றில் இருந்து வெளிவந்த ஒரே சஞ்சிகை மல்லிகைதான். சலூனில் தொழில் செய்பவரைக் கொண்டு வெளிவந்த சர்வதேச சஞ்சிகையும் மல்லிகைதான். இது சவரக் கடையல்ல எனது சர்வகலாசாலை, எழுத்து எனக்கு தொழில், பேனா சமூக மாற்றத்திற்கான வலிமை மிக்க ஆயுதம். ஏன பெருமிதத்துடன் டொமினிக் ஜீவா பதிவு செய்துள்ளார்.

மல்லிகை இதழ் ஈழத்து எழுத்தாளர்கள் பலர் உருவாகுவதற்கு களம் அமைத்துக்கொடுத்துள்ளது. அன்று இந்திய சஞ்சிகைகளில் ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள் வெளிவருவது குறைவாகவே இருந்தது. அந்த இடைவெளியை ஈழத்து இதழான மல்லிகை நிரப்பிக்கொண்டது. உள்ளுர் இலக்கிவாதிகளின் பலரின் புகைப்படங்களை அட்டைப்படமாக தாங்கிவெளிவந்த புரட்சிகரமான இதழாக மல்லிகை இருந்தது. மல்லிகை பல இளம் எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு களம் அமைத்துக்கொடுத்திருந்தது.  

மல்லிகை இதழ் பற்றியும், அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றியும் பேராசிரியர் கா.சிவத்தம்பி இப்படி பதிவு செய்கின்றார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயக்க வேகம் குறைந்த நிலையில் முற்போக்கு இலக்கியப் பணியினைத் தொடர்ந்த செய்வதற்கென டொமினிக் ஜீவா மல்லிகை சஞ்சிகையை ஆரம்பித்தார்: எனக்குறிப்பிட்டுள்ளார். ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளிடையே ஆழ்ந்த சமூகப் பார்வையோடு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்ததிலும், தார்மீகப் பொறுப்போடு எழுதவேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தியதிலும் மல்லிகைக்கும், டெதமினிக் ஜீவாவிற்கும் கணிசமான பங்குண்டு என ஈழத்து எழுத்தாளர் யோக பலச்சந்திரன் மல்லிகை இதழின் சிறப்புக் குறித்து பதிவு செய்துள்ளார்.
 
பல படைப்புகளுக்கும், பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர். பழகுவதில் பண்புமிக்கவர். மல்லிகை டொமினிக் ஜீவா.  தமிழ் இலக்கிய வரலாற உள்ளவரை டொமினிக் ஜீவாவின்பெயரும், அவரது மல்லிகையின் பணிகளும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தனது 94 ஆவது வயது வரை தமிழ் மீது தீராத காதல் கொண்ட ஒரு தமிழ்ப்பற்றாளன், பன்முக ஆளுமையாளன் மல்லிகை டொமினிக் ஜீவாவின் இழப்பு ஈழத்து தமிழிலக்கிய உலகில் நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே இருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிரார்த்திப்போம்.  

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |