Home » » ஈழத்து தமிழிலக்கியத்துறையில் நிரப்பப்படாத வெற்றிடம் டொமினிக் ஜீவா

ஈழத்து தமிழிலக்கியத்துறையில் நிரப்பப்படாத வெற்றிடம் டொமினிக் ஜீவா

 


செ.துஜியந்தன்

ஈழத்து நவின இலக்கியத்துறையின் முன்னோடி பிரபல பன்முக எழுத்தாளுமை டொமினிக் ஜீவா 28-01-2021 அன்று மாலை தைப்பூச நன்னாளில் தனது 94 ஆவது வயதில் இறையடிசேர்ந்தார். மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா பன்முன ஆளுமை படைத்தவர். டொமினிக் ஜீவா ஒரு படிக்காத மேதை , உன்னத மனிதாபிமானி, முற்போக்குச் சிந்தனையாளர், சிறந்த பத்திரிகையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் என பல அவதாரங்களை எடுத்தவர் டொமினிக் ஜீவா. இவரது இழப்பு தமிழ்கூறும்  நல்லுலகிற்கு ஈடிணையில்லா பெரும் இழப்பாகும்.

டொமினிக் ஜீவா 1927-06-27 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவரது தந்தை அவிராம்பிள்ளை, தாய் மரியம்மா. இளமைக் காலம் முதல் பல்துறைக் கலைகளையும் அற்றப்படுத்தும் வல்லமை கொண்டவர். முதன் முதலில் இலக்கியத்துறைக்குள் 1946 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்களின் முக்கியமானவராக கருதப்பட்ட ப.ஜீவானந்தம் என்பவர் தலைமறைவு வாழ்க்கை வாழும் பொருட்டு 1948 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அப்போது டொமினிக் ப.ஜீவானந்தத்தை சந்தித்தார். அன்று முதல் ஜீவானந்தத்தின் வழிகாட்டுதலில் தமது அரசியல், சமூக, இலக்கிய நோக்கினை சரியாக அமைத்துக்கொண்டார். அதனால் டொமினிக் என்ற தனது பெயருடன் ஜீவா என்பதை இணைத்துக் கொண்டு டொமினிக் ஜீவா என்று அறியப்பட்டார்.

சுதந்திரன் இதழ் 1956 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் டொமினிக் ஜீவாவின் எழுத்தாளன் என்ற சிறுகதை முதற்பரிசை பெற்றது. அதனைத் தொடர்ந்து தினகரன், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் தமிழ் நாட்டில் வெளிவந்த இலக்கிய இதழ்களான  சாந்தி, சரஸ்வதி, தாமரை அகிய இதழ்களில் இவரது சிறுகதைகளும், படைப்புகளும் வெளியாகியிருந்தன.

1966-08-15 முதல் மல்லிகை இதழை வெளியிட்டார். அன்று முதல் மல்லிகை டொமினிக் ஜீவா என்ற பெயராலும் அறியப்பட்டார். மல்லிகையின் மகுட வாக்கியம் 'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்: என்ற பாரதியின் வாக்காகும்.

சிகை அலங்கரிக்கும் நிலையம் ஒன்றில் இருந்து வெளிவந்த ஒரே சஞ்சிகை மல்லிகைதான். சலூனில் தொழில் செய்பவரைக் கொண்டு வெளிவந்த சர்வதேச சஞ்சிகையும் மல்லிகைதான். இது சவரக் கடையல்ல எனது சர்வகலாசாலை, எழுத்து எனக்கு தொழில், பேனா சமூக மாற்றத்திற்கான வலிமை மிக்க ஆயுதம். ஏன பெருமிதத்துடன் டொமினிக் ஜீவா பதிவு செய்துள்ளார்.

மல்லிகை இதழ் ஈழத்து எழுத்தாளர்கள் பலர் உருவாகுவதற்கு களம் அமைத்துக்கொடுத்துள்ளது. அன்று இந்திய சஞ்சிகைகளில் ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள் வெளிவருவது குறைவாகவே இருந்தது. அந்த இடைவெளியை ஈழத்து இதழான மல்லிகை நிரப்பிக்கொண்டது. உள்ளுர் இலக்கிவாதிகளின் பலரின் புகைப்படங்களை அட்டைப்படமாக தாங்கிவெளிவந்த புரட்சிகரமான இதழாக மல்லிகை இருந்தது. மல்லிகை பல இளம் எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு களம் அமைத்துக்கொடுத்திருந்தது.  

மல்லிகை இதழ் பற்றியும், அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றியும் பேராசிரியர் கா.சிவத்தம்பி இப்படி பதிவு செய்கின்றார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயக்க வேகம் குறைந்த நிலையில் முற்போக்கு இலக்கியப் பணியினைத் தொடர்ந்த செய்வதற்கென டொமினிக் ஜீவா மல்லிகை சஞ்சிகையை ஆரம்பித்தார்: எனக்குறிப்பிட்டுள்ளார். ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளிடையே ஆழ்ந்த சமூகப் பார்வையோடு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்ததிலும், தார்மீகப் பொறுப்போடு எழுதவேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தியதிலும் மல்லிகைக்கும், டெதமினிக் ஜீவாவிற்கும் கணிசமான பங்குண்டு என ஈழத்து எழுத்தாளர் யோக பலச்சந்திரன் மல்லிகை இதழின் சிறப்புக் குறித்து பதிவு செய்துள்ளார்.
 
பல படைப்புகளுக்கும், பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர். பழகுவதில் பண்புமிக்கவர். மல்லிகை டொமினிக் ஜீவா.  தமிழ் இலக்கிய வரலாற உள்ளவரை டொமினிக் ஜீவாவின்பெயரும், அவரது மல்லிகையின் பணிகளும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தனது 94 ஆவது வயது வரை தமிழ் மீது தீராத காதல் கொண்ட ஒரு தமிழ்ப்பற்றாளன், பன்முக ஆளுமையாளன் மல்லிகை டொமினிக் ஜீவாவின் இழப்பு ஈழத்து தமிழிலக்கிய உலகில் நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே இருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிரார்த்திப்போம்.  

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |