Monday, October 31, 2022
31-10-2022.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று (31) நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருளுக்கான விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருள் விலை குறைவடையும் என்ற எதிர்பார்ப்பில், எரிபொருளுக்கான முன்பதிவுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க இறுதியாக 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையானது 40 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
டீசல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, எரிபொருள் கட்டணம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும் பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜயரத்ன தெரிவித்தார்.
கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்லுமாறு சுகாதார அமைச்சு கட்டுபாட்டினை விதித்து வழிகாட்டல் கோவையையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் பயணிகளுக்கான பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
எனினும் குறித்த விதிமுறைகள் நீக்கப்பட்டால் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது குறிதத விதிமுறைகள் அகற்றப்பட்டால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா என சூரியன் இணையத்தள செய்திப்பிரிவு கெமுனு விஜயரத்னவிடம் வினவியது.கொரோனா விதிமுறைகள் அகற்றப்பட்டாலும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பதிலளித்தார்.
'பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களில் விலை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியாத நிலையில் உணவக உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்கின்றனர்.
இந்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைத்து பயணிகள் பேருந்து மூலம் ஜீவனோபாயத்தை முன்னெடுக்கும் தரப்பினர் எவ்வாறு உயிர்வாழ்வது' என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன சுட்டிக்காட்டினார்.