விடுதலைப் புலிகள் இயக்கத்தினை உடைத்தது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கான நகர்வினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சி கிளையின் கூட்டம் மட்டக்களப்பு நல்லை வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்.குடாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் வடமாகாண முதலமைச்சருக்கோ, உறுப்பினருக்கோ, அமைச்சருக்கோ கடிதம் அனுப்பவில்லை. முதலமைச்சரை விலக்கிப் பார்க்கின்றனர்.
இது ஐக்கிய தேசிய கட்சியின் பிரித்தாளும் தந்திரமாகும். ஏற்கனவே விடுதலைப் புலிகளை உடைத்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினர்.
அலிசாகீர் மெளானாவை வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்தார்கள். அதனைப்போன்று தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கான நகர்வினை ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கும் சக்தியில் பல சர்வதேச சதிகளும் உள்ளன. அதேபோன்று இலங்கையிலும் பல சதிகள் இருக்கின்றன. அதன் பின்னணியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை நோக்கி பல கேள்விகள் வருகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்க வேண்டும் என்ற விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டும் என்ற விடயத்திலும் தொடர்புகள் உள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அறிக்கையினை விடுத்துக் கொண்டுள்ளனர். மக்களை ஒருபாணியில் குழப்பும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனடாவில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கட்சி பதிந்துள்ளது என தெரிவித்துள்ளார். சம்பந்தன் ஐயா கூறிய விடயமும் உண்மை. சுமந்திரன் ஐயா கூறிய விடயமும் உண்மை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி போட்டியிடும்போது அது தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட வேண்டும். அதனை அறிவிக்க வேண்டும். அதனையே சுமந்திரன் அவர்களும் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் எத்தனை கட்சி உள்ளது என்ற சந்தேகமும் இன்று பலரிடம் உள்ளது. இதில் எனக்கும் குழப்பம் உள்ளது.
சித்தார்த்தனும் ஆனந்த சங்கரி ஐயாவும் கிளிநொச்சியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின்போதே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டனர். அவர்கள் சேர்ந்ததன் பின்னர் அவர்கள் சேர்ந்த விதம் பிழையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களாகிய நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு கட்சிகளே உள்ளன. ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் தற்போது கட்சியொன்றினை ஆரம்பித்துள்ளார்.
தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். சம்பந்தன் ஐயா ஆவர்கள் நான்கு கட்சிகள்தான் உள்ளது என்பதை தெளிவாக அறிவித்துள்ளார்.இந்த விடயம் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியில் இருக்கும் நாங்கள் இது தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும்.ஏனைய கட்சிகளை விட மிக முக்கிய கட்சியாக தமிழரசுக்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளது.
அடுத்தகட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதாக இருந்தால் எம்மை நோக்கிவரும் பரீட்சைகளில் வெற்றிபெற வேண்டும். நாங்கள் பரீட்சையென்று கூறுவது தேர்தல்களையாகும்.
ஒன்பதாவது பரீட்சையாக பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்றது. இது தொடர்பில் இரண்டு விதமாக பேசப்படுகின்றது. தொகுதி ரீதியாக, தற்போதுள்ள நடைமுறையில் நடத்துவது என சொல்லப்படுகின்றது.
இதன் காரணமாக அரசாங்கத்துக்குள்ளேயே குழப்புங்கள் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தாலும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைத்தே ஆகவேண்டும். ஆயுள்காலம் ஒருவருடமே உள்ளது.
பாராளுமன்றத்தினை ஜனாதிபதியினால் மட்டுமே கலைக்கமுடியும். பிரதமரால் அதனைக் கலைக்க முடியாது. எந்த வகையில் தேர்தல் நடாத்தப்பட்டாலும் நாங்கள் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளோம்.
தமிழர்கள் என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை தத்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
முஸ்லிம் காங்கிரசை தத்தெடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியை விமர்சிப்பதற்கு,பிழையை சுட்டிக்காட்டுவதற்கு உரிமைள்ளது. ஆனால் வெற்றிலைக்கு வாக்களித்துவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
நாம் தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தினை பாவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தந்தை செல்வாவின் காலப்பகுதியில் நடைபெற்ற போராட்டங்களின்போது இஸ்லாமிய மக்களை இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே தமிழ் பேசும் சமூகம் என்ற பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட தமிழர்களை சிறுமைப்படுத்துகின்றது.
நாங்கள் ஒருபோதும் தமிழ் பேசும் மக்கள் அல்ல. நாங்கள் தமிழர்கள். நாங்கள் இன்னும் இனத்தினை அணைத்து செல்லவேண்டும் என்ற கொள்கையுடனேயே இருந்து வருகின்றோம்.இதனையே தந்தை செல்வா செய்துள்ளார் என்றார்.