ஆயுதப் போராட்டத்தின் வெற்றிதான் இன்றைய அரசியல் என்பதனை மறந்து விடக்கூடாது. போராட்டத்தினை நடத்தியவர்களும் நாங்கள். அனைத்தையும் இழந்தவர்களும் நாங்களே.
ஆனால் இன்று பலனை அடைந்தவர்கள் யார்? கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஒரு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதனை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என சிரேஸ்ட சட்டத்தரணியும், தமிழரசிக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இன்று நீலன் அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, மல்வத்தை பாண்டிருப்பு, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சம்மாந்துரை, ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து விளையாட்டு கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்,
ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை தமிழரசுக் கட்சிக்காக உழைத்த பெரியார்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சட்டத்தரணி தவராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
வடக்கையும் கிழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள். அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே ஜெனிவா செல்வதனை நிறுத்திவிட்டு அம்பாறை மாவட்ட மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றேன்.
அம்பாறை மாவட்டம் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம். ஆனால் தற்போதும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்ந்தார்களா? என்ற வினாவை கேட்க வேண்டியிருக்கிறது.
தமிழர்களாகிய நாங்கள் சிறுபான்மையினம் அல்ல. சிறுபான்மை என்பது மொழி, இனம் அற்றவனே சிறுபான்மையினராக கனிக்கப்படுவான்.
தமிழர்களாகிய எங்களுக்கு இனம், மொழி ஆகிய இரண்டும் இருக்கின்றது. நாங்கள் வடக்கிலும் கிழக்கில் தொன்று தொட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே நாங்கள் சிறுபான்மையினர் அல்ல என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments