Advertisement

Responsive Advertisement

உக்ரேன் போராளிகளுக்கு ஆயுத விற்பனை விவகாரம்! சிக்குவாரா மகிந்த?

ரஸ்யா, உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பான விசாரணைகளில், இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சிக்கக் கூடும் என்று  இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் மருமகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஸ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக உக்ரேனிய அரசாங்கம் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, உதயங்க வீரதுங்க, தற்போது காணாமற்போயுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா,
தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராகப் போரிடும், உக்ரேனியர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையில், மகிந்த ராஜபக்சவும் கூட சிக்கிக் கொள்ளக் கூடும்.
உக்ரேனிடம் இருந்து இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதில் இருந்து, உதயங்க வீரதுங்க காணாமற்போயுள்ளார்.
உதயங்க வீரதுங்கவினால் விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை உக்ரேன் வழங்கியுள்ளது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, உதயங்க வீரதுங்க காணாமற்போயுள்ளதால்,நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரஸ்யாவுடன் இலங்கை கலந்துரையாடவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments