ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி, தற்போது தனது கேப்டன்ஷிப் கரியரில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கிறார்.
இந்த ஆண்டில் தோனியின் தலைமையில் இதுவரை இந்தியா ஒரு தொடரைக் கூட வெல்ல முடியவில்லை. "தோனியை ஓரங்கட்டுங்கள், இளம் பாய்ச்சலை புகுத்துங்கள்...!" என ஆளாளுக்கு தோனியின் மீது சொற்கற்களை வீச ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக தன் மீதான விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுக்கும் தோனியால், இந்த முறை சமாளிக்கவே முடியவில்லை.
தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் சரித்திரத்தில், முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியதும், வங்கதேசம், இந்திய அணியை துவைத்துப்போட்டு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதற்கும், இந்திய அணியை சரியாக வழி நடத்தாதே காரணம் என அனைத்து விரல்களையும் தோனி முன் நீட்டுவது சரியா? அணியில் ஆடிய வீரர்கள் மட்டுமல்ல, அணித் தேர்வாளர்களுக்கும் முக்கிய பங்கு இல்லையா?
இதுவரை உலகக்கோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லையென்றாலும், கடந்த 20 ஆண்டுகளாக நிலையாகவும், சைலண்ட் தாதாவாகவும் கோலோச்சுகிறது தென்னாப்பிரிக்க அணி. ஆனால், மூன்று உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியும், கேப்டன் தோனியும் சறுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தோனியை வீழ்த்துவது ஐந்து முக்கிய எதிரிகள்தான்; அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்...
1. சொதப்பும் ஓப்பனிங்
ஒரு படத்துக்கு எப்படி முதல் நாள் ஓப்பனிங் வசூல் முக்கியமோ அதை விட முக்கியமானது முதல் விக்கெட்டுக்கான ஓப்பனிங். ரோஹித் ஷர்மா - தவான் ஜோடியால் இணைந்து ஐம்பது ரன்கள் கூட குவிக்க முடிவது இல்லை. இருவரில் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடுகிறார், மற்றொருவர் விரைவில் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 'ஒன்டவுன்' பேட்ஸ்மேனுக்கு களத்தில் நீண்ட நேரம் நின்று ஆட வேண்டிய பிரஷர் ஏற்படுகிறது. முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்துவிடுவதால் அடுத்த பத்து ஓவர்கள் வரை, ஆக்ரோஷமாக எதிரணி பந்துவீசுவதால் ரன் ரேட் மந்தமாகிவிடுகிறது. தவிர சில சமயங்களில் ஈரப்பதமான மைதானங்களில் வலிமை வாய்ந்த வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், பத்து ஓவருக்குள்ளாகவே இரண்டு - மூன்று விக்கெட்டுகள் விழுந்துவிடுகிறது.
2. தடுமாறும் மிடில் ஆர்டர்
நான் குறிப்பிட்ட இடத்தில் களமிறங்கினால் மட்டுமே ஸ்கோர் செய்வேன் என்ற வீரர்களின் வீண்பிடிவாதம் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு. தோனியால் ஒன்று முதல் ஏழு வரை எந்த இடத்தில் இறங்கினாலும் அதற்கேற்ப திறமையாக விளையாட முடியும். அப்படிப்பட்ட நெகிழ்வுத்தன்மை தற்போதைய பேட்டிங் வரிசையில் சுத்தமாக இல்லை. ரஹானேவை தவிர எந்தவொரு வீரருக்கும் நிலைத்து நின்று ஆடும் திறன் அறவே இல்லை. சேசிங்கில் ஒரு கட்டத்தில் கில்லியாக இருந்த அணி, கடந்த ஒரு வருடத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சில கத்துக்குட்டி அணிகளை தவிர மற்ற அணிகளுடன் அனைத்து போட்டிகளிலும் சேசிங்கில் தோல்வியடைந்துள்ளது.
3. மோசமான ஃபினிஷிங்
'உன்கிட்ட ஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனால் ஃபினிஷிங் சரியில்லேயப்பா' என கிரிக்கெட் உலகம் இந்தியாவை கலாய்த்தபோதுதான் யுவராஜும், தோனியும் நண்பேண்டாவாக இணைந்து 'நாங்க இருக்கோம்' என பல போட்டிகளில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ஆனால் 7-8 ஆண்டுகள் கழித்தும் கூட தோனிக்கு மாற்றாக ஃபினிஷிங் டச் கொடுக்க ஒரு நல்ல வீரர் கூட உருவாக்கப்படவில்லை. 32-35 வயது என்பது பொதுவாக எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் சோதனையான காலகட்டம். அந்த கட்டத்தை எல்லாம் டிராவிட், சச்சின் போன்ற வீரர்கள் தங்களை சிறிதே மாற்றியமைத்துக் கொண்டு மீண்டும் சாதனை படைத்திருக்கிறார்கள்.
தோனி ஒரு பேட்ஸ்மேனாக கடுமையான காலகட்டத்தில் இருக்கிறார். முன்பு போல இறங்கியவுடன் பெரிய ஷாட்டுகளை தெறிக்க விட முடியவில்லை என்பதால் மூன்றாம், நான்காம் நிலையில் இறங்கி, விக்கெட் விழாமல் பாட்னர்ஷிப் உருவாக்க எண்ணுகிறார். ஆனால், அணியில் நெகிழ்வுதன்மை இல்லாததால் கேப்டன் பதவி மட்டுமின்றி ஃபினிஷிங் பொறுப்பையும் சுமக்க தத்தளிக்கிறார். 'என்னால் மட்டுமே ஃபினிஷிங் வேலையை செய்ய முடியாது, ரெய்னா போன்றோர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்' என பிரஸ்மீட் வைத்தே மென்மையான வார்த்தைகளால் சொல்லியிருக்கிறார்.
4. சொத்தை 'வேகப்பந்து'
லைன் அண்ட் லெங்க்த் சரியாக வீச முடியாமலும், 135 கி.மீ வேகத்தை கூட எட்ட முடியாமலும் தவிக்கிறது இந்திய வேகப்பந்து. அணியில் சீராகவும், சிறப்பாகவும் பந்துவீசக்கூடிய முகமது ஷமி, காயத்தில் இருந்து இன்னும் குணமாகவில்லை. இறுதிக்கட்ட ஓவர்களில் ஓரளவு சிறப்பாக வீசும் புவனேஸ்வர் குமாரை தவிர, இந்தியாவில் வேறு நல்ல வேகப்பந்துவீச்சாளர்களே இல்லை என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது.
ஓப்பனிங் ->நடுவரிசை ->ஃபினிஷிங்->வேகப்பந்துவீச்சு என ஒவ்வொரு டிபார்ட்மென்டிலும் இருப்பவர்கள், மற்றவர்கள் மேல் கூடுதல் சுமையை ஏற்றிவைக்க, 'உன்னால் நான் கெட்டேன்... என்னால் நீ கெட்ட..!' என்ற கணக்காக செயலிந்து வருகிறது இந்திய அணி.
5. அணித் தேர்வாளர்கள்
கேப்டன் கேட்கும் வீரர்களையும் தராமல், திறமையான வீரர்களையும் அணியில் சேர்க்காமல் முரண்டுபிடித்து வருகிறது அணித் தேர்வு வாரியம். 'டிராவிட், சேவாக், ஜாகீர் என உலகின் தலைச்சிறந்த வீரர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை பி.சி.சி ஐ' என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். கம்பீர், யுவராஜ், இர்ஃபான் பதான் போன்றோரும் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்றே தெரியாமல் திகிலுடன் நாட்களைக் கடத்துகிறார்கள். சீனியர் வீரர்கள் மட்டுமே உள்ள அணியோ, ஜூனியர் வீரர்கள் மட்டுமே உள்ள அணியோ உலகக் கோப்பையை வெல்வது கடினம்.
சீனியர், ஜூனியர் வீரர்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்த காலக்கட்டத்தில் நல்ல கேப்டனும் கிடைத்ததால்தான் இந்தியா 2011-ல் உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது. டிவில்லியர்ஸ், மில்லர், அப்ரிடி, சேவாக், யுவராஜ், மேக்ஸ்வெல் போன்ற ஹிட்டர்கள் இருந்தால்தான், எதிரணி பவுலர் மன நிலையை ஆட்டம் காண வைக்க முடியும். அப்படியொரு ஹிட்டர் இந்திய அணிக்கு உடனடி தேவை. அனுபவமும், துடிப்பும் கொண்ட அணியை தேர்வு செய்வது அணித்தேர்வாளர்களின் முக்கிய கடமை.இப்படி அகோர அம்சங்களுடன் இந்திய அணி இருக்க, கேப்டன் தோனியால் மட்டுமே இந்திய அணியை அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வைக்க முடியுமா என்ன?
'துடிப்பான நூறு இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்!' என்பது விவேகனந்தர் வாக்கு. தோனி ஒரு கேப்டனாக கேட்பதெல்லாம் '11 துடிப்பான வீரர்களை தாருங்கள் எத்தனை கோப்பை வேண்டுமானாலும் வென்று காட்டுகிறேன்' என்பதே. ஏனெனில் கிரிக்கெட் தனிநபர் போட்டியல்ல, அது ஒரு குழு விளையாட்டு. தனிநபர் துதி பாடுவது வெற்றிக்கு உதவாது. தனது கேரியரில் இறுதிக்கட்டத்தில் இருக்கும் தோனிக்கு, அநேகமாக வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள உலகக்கோப்பை டி20 தொடர் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும்.
ஆக, ஃபுல்ஸ்டாப் வைத்து முடிப்பதா இல்லை கமா போட்டு தனது கேரியரின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதா என்பது தோனியின் கையில்தான் இருக்கிறது.