இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வரும் சச்சின் தெண்டுல்கர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்த சாதனையை நிகழ்த்தியுள்ள சச்சின் தெண்டுல்கரின் பல சாதனைகளை யாராலும் நெருங்கவே முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சச்சின் தெண்டுல்கருக்கு சதம் எப்படி அடிப்பது என்பது மட்டுமே தெரியும் சதங்களை இரட்டை சதம் முச்சதம் எடுக்க தெரியாது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
துபாயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தவருமான கபில் தேவ் கூறியதாவது:- சச்சின் தெண்டுல்கர் தனது முழுத்திறனுக்கு நியாயம் செய்யவில்லை. அவர் விளையாடியதைவிட இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என்று நான் நினைத்தேன். விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற அதிரடியான ஆட்டத்தை சச்சின் வெளிப்படுத்தவில்லை. நேர்த்தியாக விளையாடுபவராகவே சச்சின் தெண்டுல்கர் இருந்துவிட்டார். எனது தலைமையின் கீழ் சச்சின் விளையாடி இருந்தால், சேவாக் போல அதிரடியாக ஆடுமாறு நான் அவரை வலியுறுத்தி இருப்பேன்.
அதிரடி ஆட்டத்தை சச்சின் வெளிப்படுத்தியிருந்தால், தற்போது சாதித்ததைவிட அதிகம் அவரால் சாதித்திருக்க முடியும். எப்படி சதம் அடிப்பது என்பதை மட்டுமே சச்சின் அறிந்திருந்தார். அதை எப்படி இரட்டை சதமாகவோ அல்லது முச்சதமாகவோ அல்லது 400 ரன்களாகவோ மாற்றுவது எப்படி என்பது அவருக்கு தெரியவில்லை” என்றார்.
0 Comments