Home » » திருக்கோவில் ஷீரடி சாய் கருணாலயம் மகா கும்பாவிஷேகம் செ.துஜியந்தன் பாண்டிருப்பு நிருபர்

திருக்கோவில் ஷீரடி சாய் கருணாலயம் மகா கும்பாவிஷேகம் செ.துஜியந்தன் பாண்டிருப்பு நிருபர்


அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தாமரைக்குளம் எனும் இடத்தில் பிரமாண்டமாய் அமையப்பெற்றுள்ள ஷீரடி சாய் கருணாலயத்தின் ஷீரடி சாய்நாதர் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெருவிழா எதிர்வரும் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் 10.30 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஷீரடிசாய்பாப கருணாலயத்தின் ஆதினகர்த்த திருமதி சீத்தா விவேக் மேற்கொண்டுவருகின்றார். 
கிழக்கு மாகாணத்தில் ஷீரடி சாய்நாதருக்கு முதன் முதலாக பிரமாண்டமான முறையில் கருணாலயம் ஒன்று கட்டியெழுப்பப்ட்டுள்ளது. மிக நீண்டகாலமாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு கல்வி மற்றும் சமய, சமூக சேவைகளை புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் பெரியகல்லாற்றைச் சேர்ந்த விவேக் சீதா குடும்பத்தினர் வழங்கிவருகின்றனர். ஷீரடி சாய் பாபவின் பக்தர்களான இவர்கள் தங்களுடைய சமூகப்பணியினை விஸ்தரிக்கும் நோக்கில் ஷீரடி சாய்நாதருக்கான கருணாலயம் ஊடாக தர்மப்பணியினை ஆற்றவுள்ளனர்.

இவ் ஆலயத்தின் பூர்வாங்க கிரியைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணியளவில் விநாயகர் வழிபாடு, பிரதிஷ்டா சங்கல்யம், மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளன. இங்கு எதிர்வரும் ஏப்பிரல்  முதலாம் திகதி ஷீரடி சாய் நாதருக்கு பக்தர்கள் பால் காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து 02 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த் வேளையில் ஷீரடி சாய் நாதர் பிரதிஸ்டை மகா கும்பாவிஷேக குட முழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது. கும்பாவிஷேகத்தை தொடர்ந்து 48 தினங்கள் தினமும் காலை 9 மணிக்கு மண்டலாபிஷேக பூசையும், சாய்நாதருக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.

ஈழத்து இசைக் கலைஞர் ஜெயந்தன் கந்தப்புவின் இசையில் உருவான  ஷீரடி சாய்நாதரின் பக்திப்பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா திருக்கோவில் ஷீரடி கருணாலயத்தில்   எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன், 02 ஆம் திகதி கொழும்பு ஷீரடி சாய் மத்திய நிலையத்திலும் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.  கலியுகததின் கண்கண்ட புருஷராக விளங்குகின்ற மகா குரு ஷீரடிசாய்பாபா. பாபாவின் அற்புதங்கள் பல உண்டு

ஆத்மாவை தூய்மைப்படுத்தி பக்தர்களை மேம்படுத்துவதில் சீரடி சாய்பாபா எப்போதும் கவனமுடன் இருந்தார். தேவை இல்லாத சமயச் சடங்குகளை அவர் விரும்பியதே இல்லை. அவை நேரத்தையும் பொருளையும் வீணாக்குபவை என்றார்.
அதே சமயத்தில் புராணங்களையும் சாஸ்திரங்களையும் உண்மையே என்றார். ஒரு தடவை புராணங்கள் பற்றிப் பேச்சு வந்தபோது ராமனும் கிருஷ்ணனும் கூட உண்மையிலேயே இருந்தனர் என்று கூறினார்.  
ராமபிரான் ராவணனோடு நடத்திய சண்டையை பார்த்ததாகவும் சாய்பாபா குறிப்பிட்டார். இதைக் கேட்ட சாமா என்ற பக்தர் 'விஷ்ணுலோகம் பிரம்மலோகம் உண்மையாகவே இருக்கிறதா? அவை இருந்தால் நீங்கள் எனக்கு அவற்றைக் காட்ட வேண்டும்' என்றார்.

உடனே பாபா அவரைத் தம் கண்களை மூடிக் கொள்ளும்படி கூறினார். கண்களை மூடியதும் சாமாவுக்கு விஷ்ணு லோகம் கயிலாயம் பிரம்மலோகம் மூன்றையும் பாபா காட்டினார். பிறகு அவர் சாமாவிடம் இதில் இருந்தும் மேம்பட்ட நிலைக்கு நாம் செல்ல வேண்டும் என்றார்.
ஒவ்வொரு பக்தனும் புண்ணியத்தை செய்து தன் ஆன்ம ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்றார். அதற்காக பாபா ஒவ்வொரு பக்தனின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்ப அற்புதங்கள் செய்தார். அறிவுரைகள் வழங்கினார்.

பாபாவின் பக்தர்களில் நானா என்று ஒருவர் இருந்தார். அவர் தினமும் சாஸ்திரங்களில் கூறப்பட்டிருப்பது போல பிராமணர்களுக்கு உணவளித்து விட்டு சாப்பிடும் வழக்கத்தை வைத்திருந்தார்.
ஒருநாள் அவர் பாபாவிடம்'தினமும் நான் அதிதிகளுக்கு உணவு கொடுக்க விரும்புகிறேன். ஆனால் சில நாட்கள் விருந்தினர்கள் யாரும் வருவதில்லை' என்றார்.

அதற்கு பாபா 'நீ சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். அதிதி என்றால் பிராமணர் மட்டுமே என்று அர்த்தம் அல்ல. நீ சாப்பிடும் சமயத்தில் மனிதரோ பறவையோ மிருகமோ புழுப்பூச்சிகளோ எந்தப் பிராணி பசியோடு வருகிறதோ அதுவே அதிதி. எந்த பிராணி வந்தாலும் அதை ஏற்றுக் கொள். மனம் குளிர உணவு கொடு. இவ்வாறு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான விருந்தாளிகளுக்கு உணவு கொடுத்து பசி போக்கிய புண்ணியம் உனக்குக் கிடைக்கும்' என்றார்.

பாபாவின் இந்த அறிவுரை நானாவின் கண்ணைத் திறந்தது. அன்று முதல் அவர் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்கி புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டார்.
இப்படி மேலும் சில பக்தர்களின் ஆத்மாவை அவர் சுத்திகரித்த விதம் அலாதியானது. சாய்பாபாவைப் பார்த்து சாமா திடீரென ஒருநாள் கோபம் கொண்டார்.
அவர் பாபாவிடம் 'உங்களிடம் வருபவர்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள். அவர்களை செல்வந்தர்களாக மாற்றுகிறீர்கள். அவர்கள் நோயைத் தீர்க்கிறீர்கள் குழந்தை வரம் கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் நீங்கள் எதுவுமே செய்யவில்லை' என்றார்.

அவரைப் பார்த்து புன்னகைத்த பாபா 'உனக்கு நான் செல்வத்தைத் தரப்போவதில்லை. அது நிலையற்றது. உனக்கு புனித நூல்களே போதும்' என்றார். சொன்னபடி சாமாவுக்கு அவர் பாகவதம் விஷ்ணு சகஸ்ர நாமம் நூல்களையேக் கொடுத்தார். அதுதான் சாமாவுக்கு பின்னாட்களில் உண்மையிலே புண்ணியத்தை சேர்ப்பதாக அமைந்தது.
ஒருவர் பரிபூரண நிலையை அடைவது என்பது சாதாரண வி‌ஷயமல்ல. அதற்கும் பாபா வழிகாட்டியுள்ளார்.

'தியானம் செய்வதற்கு என்னை உருவமற்ற நிலையில் நினைத்து ஆனந்தமாக நினைத்து தியானம் இருங்கள். அது மிகவும் கஷ்டமாக இருந்தால் இப்போது நீங்கள் என்னை எப்படிப் பார்க்கிறீர்களோ இதே போன்று உருவத்தில் எண்ணிப் பாருங்கள். அதையே இரவும் பகலுமாக சிந்தித்து வாருங்கள். அத்தகைய தியானத்தால் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகும். தியானம் செய்யும் செய்கையே கூட மறைந்து போகும். நாளடைவில் அது உங்களை பிரம்மத்தோடு ஒன்றுபடும் நிலையில் கொண்டு போய் சேர்த்து விடும்' என்றார்.

சில சமயம் சாய்பாபா தனது போதனைகளை உபகதைகள் சொல்லி உணர்த்துவார். சில சமயம் செய்கைகள் மூலம் உணர்த்துவார்.
மசூதிக்கு வரும் பக்தர்கள் தலையில் கை வைத்து பாபா ஆசீர்வாதம் செய்வதுண்டு. சில பக்தர்களின் மன உணர்வுகள் கட்டுப்படாததாக இருக்கும். அத்தகைய பக்தர்கள் தலை மீது அவர் கையை பலமாக வைத்து அழுத்துவார். அது அந்த பக்தர்களின் மன உணர்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தச் செய்தது.

1917-ம் ஆண்டு பாந்த்ராவைச் சேர்ந்த ஜனார்தன் கல்வாங்கர் என்பவர் சீரடி சென்றிருந்தபோதுஇ அவர் தலை மீது பாபா கை வைத்து ஆசீர்வதித்தார். அப்போது அவருக்குப் புதுமையான அனுபவம் ஏற்பட்டது.
அதன் காரணமாக ஜனார்தன் தன்னையே மறந்தார். சுற்றுப்புறத்தையும் மறந்து பேரானந்த நிலையில் மூழ்கினார்.

அன்று முதல் ஜனார்தன் ஆன்மீக வாழ்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். பாபா தனது சக்தியைப் பயன்படுத்தி அந்த பக்தர் அந்தப் புண்ணியத்தைப் பெற வழி வகுத்தார்.
பாபா சில சமயம் மறைமுகமாகவும் பக்தர்களுக்கு போதனை செய்வதுண்டு. அந்த வகையில் அவர் நிறைய பேரை தற்கொலையில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
ஆனால் பாபாவின் சில போதனைகள் மிகத் தெளிவாக இருக்கும். மசூதியில் அப்துல்லா என்று ஒரு பக்தர் இருந்தார்.

அவரிடம் பாபா 'நீ அதிகமாக தூங்குகிறாய். அது தவறு. சரியான நேரத்துக்கு தூங்கு. சரியான நேரத்துக்கு எழுந்திரு. மிகவும் குறைவாக சாப்பிடு. விதம் விதமாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படாதே. ஒரு நேரத்தில் ஒரு வகையான உணவை மட்டுமே எடுத்துக் கொள்' என்றார்.

என்றாலும் பாபாவின் இந்தஅறிவுரைகளை அப்துல்லா தொடர்ந்து கடைபிடிக்க இயலாமல் திணறினார். ஒருநாள் அப்துல்லா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.
அதைக் கவனித்த பாபா 'அப்துல்லா என்ன சந்திரனைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாயா?' என்றார். அப்துல்லாவுக்கு எதுவும் புரியவில்லை.

பாபா ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கு அவருக்கு விடை கிடைக்கவில்லை. மறுநாள் அவர் உள்ளங்கையில் தண்ணீரை எடுத்தபோது அதில் சந்திரன் ஒன்று பளீரெனத் தோன்றி மறைந்தது.

அதைக் கண்டு அப்துல்லா ஆச்சரியத்தில் மூழ்கினார். பாபா சொன்னபடியே சந்திரனைப் பார்த்து விட்டோமே என்று ஆனந்தம் அடைந்தார். அன்று முதல் அவர் பாபாவின் தெளிவான போதனைகள் அனைத்தையும் கேட்டு அதன்படி நடக்கலானார்.
இந்த மாற்றம் காரணமாக பல உயர்வான புண்ணியங்களை பெறும் வாய்ப்பை அப்துல்லா பெற்றார்.

மராட்டிய மாநிலம் அந்தேரியைச் சேர்ந்தவர் பாலாபட். இவர் 1909-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று பாபாவை தரிசனம் செய்து ஆசி பெறுவதற்காக சீரடிக்கு வந்திருந்தார்.
அன்றிரவு 8 மணிக்கு அவர் பாபாவை சந்திக்கச் சென்றார். அப்போது பாபா அருகில் நான்கு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பாபா முன்னால் போய் அமர்ந்த பாலாபட் 'எனக்கு நீங்கள் முழுமையான உபதேசம் தர வேண்டும். அதன்பிறகு என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றார்.

அதற்கு பாபா 'ஒருவர் ஆன்ம பலம் பெற்று தன்னை மேம்படுத்திக் கொள்ள குரு அவசியம் வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. குரு கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால்இ கவலைப்பட வேண்டியதே இல்லை. ஏனெனில் எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

அதுபோல நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெற முடியும். இதற்கு ஒரு குரு வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாம் உங்களிடம் கொட்டிக் கிடக்கிறது.
ஒவ்வொரு தடவையும் உங்கள் மனதினை உள்நோக்கி கேட்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப கேட்பது கிடைக்கும்.

அதன் தொடர்ச்சியாக உங்களுக்குள் மெல்ல மாற்றம் வரும். இதன் மூலம் நாம் நமது ஆத்மாவைப் பார்க்க வேண்டும்.
அது உங்களுக்கு நிறைய வி‌ஷயங்களைக் கற்றுத் தரும். அதுதான் உங்களுக்கு குரு' என்றார்.
இந்த எளிய போதனையே பாலாபட்டை மேன்மைப்படுத்தியது. அவரை முதிர்ச்சி பெற்ற மனிதனாக மாற்றியது.

பாபாவின் பக்தர்களில் நிமோன்கர் என்பவரும் ஒருவர். அவரிடம் பாபா ஒருநாள் 'நீ ஏன் பாகவதம் படிப்பதில்லை' என்றார். அதற்கு நிமோன்கர் 'எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.' என்றார்.
என்றாலும் பாபா உத்தரவுக்கு இணங்கி தினமும் அவர் சமஸ்கிருதத்தை படிக்கத் தொடங்கினார்.

மிகவும் குறுகிய காலத்தில் அவர் சமஸ்கிருதத்தை கற்றுத் தேர்ந்தார். சிறிது நாட்களில் அவர் சமஸ்கிருதத்தில் நன்கு புலமைப்பெற்றவராக மாறிப் போனார். ஒரு கட்டத்தில் அவர் சமஸ்கிருத பண்டிதர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அளவுக்கு மகிமைப் பெற்றவராக மாறினார்.

பிறகு மற்ற ஆன்மிக நூல்களையும் தத்துவ நூல்களையும் நிமோன்கர் கற்றுத் தேற பாபா வழி வகுத்தார். ஆனால் பெரும்பாலான பக்தர்கள் தாங்கள் முக்திப் பெற மிக எளிதாக வழி காட்டும்படி பாபாவிடம் கேட்டுக் கொண்டனர்.

அவர்களிடம் பாபா 'நான் அருளிய போதனைகளை தொடர்ந்து சிந்தியுங்கள். என் நாமத்தை நினைத்துக் கொண்டே இருங்கள்' என்றார். சிலரிடம் அவரது பாதங்களை வழிபடும்படி அறிவுறுத்தினார்.

ஒரு தடவை சீரடியைச் சேர்ந்த ஒருவர் நிறைய மது அருந்தி விட்டு அதிக போதையுடன் மசூதிக்கு வந்திருந்தார். அவரிடம் பாபாஇ 'விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உச்சரியுங்கள்' என்றார். அந்த குடிகாரன் அன்றே பாபாவுக்கு தொண்டு செய்யும் அற்புதமான சீடராக மாறினான்.

இப்படி ஒவ்வொரு பக்தனையும் சாய்பாபா அவரவருக்கு ஏற்ப ஆசி வழங்கி தேர்வு செய்து தம் வசமாக்கிக் கொண்டார். பாபாவின் இந்த சிறப்பை உணராமல் பல பக்தர்கள் ஆணவத்துடனும் நம்பிக்கை இல்லாமலும் சீரடி தலத்துக்கு செல்வதுண்டு.

அத்தகையவர்கள் சீரடி மண்ணில் கால் வைத்ததுமே பாபாவின் மீது இனம் புரியாத ஈர்ப்பைப் பெற்றனர்.
ஷீரடியில் கால் வைத்ததும் கிடைக்கும் அனுபவத்தைப்போன்றே திருக்கோவில் ஷீரடி கருணாலயத்தின் புனிதத்தன்மையும் விளங்குகினற்துஃ கிழக்குமாகாணத்தில் ஷீரடிசாய்பாபாவின் பக்தர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் அழகிய கருணாலயம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறப்பணிகள் பல முன்னெடுக்கப்டவுள்ளன. இவ் ஆலயத்தினை கட்டப்பாடுபாட்ட ஷீரடி பக்தர்களான திருமதி சீத்தா விவேக் குடும்பத்தினரின் நற்பணியை நன்றியுணர்வுடன் நினைவுகூருகின்றனர் ஷீரடிசாய்பாபவின் பக்தர்கள். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |