சீனா தனது நாட்டு தம்பதியர் ஒரே ஒரு குழந்தையையே பெற வேண்டும் என்று கடந்த 34 ஆண்டுகளாக அமுல்படுத்திவந்த ‘ஒரு பிள்ளை’ கொள்கையை தளர்த்துவதாகவும் இன்று முதல் தம்பதியர் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்திருக்கிறது.
சீனாவின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 1979 ஆம் ஆண்டு சீனா இந்த சட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இந்த கொள்கையில் அரிதாக சில விதிவிலக்குகள் இருந்தபோதிலும் அதனை மீறுபவர்களுக்கு எதிராக சீனா சட்டரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இரண்டாவது பிள்ளை பெறுபவர்களுக்கு பெருந்தொகை தண்டனைப்பணம் விதிக்கப்பட்டதுடன் அவர்களுக்ககன அரச சலுகைகள் ரதுச்செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த 34 ஆண்டுகளில் சீனா தனது நாட்டில் சுமார் 400 மில்லியன் குழந்தை பிறப்புக்களை தவிர்த்திருக்கிறது.
ஆனால், சீனாவின் இந்த கொள்கை காரணமாக மூப்படைந்த மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து பல அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறைக்கு இது வழிவகுத்தது. ஒரே ஒரு குழந்தையை மட்டுமே பெற முடியும் என்ற காரணத்தினால் தம்பதிகள் ஆண் குழந்தைகளை பெறுவதிலேயே கூடுதல் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஆண் பெண் விகிதாசார சமநிலை மற்றம் அடைந்தது. பல சீன ஆண்கள் தமது வாழ்க்கைத் துணையை தேடுவதற்கு பெரும் பாடுபட்டனர். இதனால். அண்டைய நாடுகளான வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து பெண்களை தேட வேண்டிய கட்டாயத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டனர். அத்துடன் , அண்டைய நாடுகளில் இருந்து இளம் பெண்களை பலவந்தமாக சீனாவுக்குள் கடத்தி சீன ஆண்களுக்கு பெருந்தொகைப் பணத்துக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத வியாபாரம் பெர்மளவில் வளர்ச்சி கண்டது.
இந்த நிலையில் தான் தனது சனத்தொகையில் ஏற்ப்பட்டுள்ள சமநிலைத் தளம்பலை சீர் செய்யும் பொருட்டு ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளை பெறலாம் என்று சீன கம்யூனிச கட்சி அறிவித்திருக்கிறது. இந்த ‘இரண்டு பிள்ளைகள்’ கொள்கை தீவிரமாக அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்த ‘ஒரு பிள்ளை ‘ கொள்கையில் இருந்து ‘ இரு பிள்ளைகள்’ கொள்கை மனித உரிமைகள் அமைப்புக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளபோதிலும், சீனா தொடர்ந்தும் குடும்பங்கள் மீது கட்டுப்பாட்டை விதித்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என்று அவை குற்றம் சாட்டியுள்ளன. குடும்பங்கள் மீது தனது முழு கட்டுப்பாட்டையும் சீன அரசு நீக்கவேண்டும் என்று அவை வலியுறுத்தி உள்ளன.
தற்போது சீனாவின் சனத்தொகையில் 30 சத வீதத்துக்கும் அதிகமானவர்கள் 50 வயதை தாண்டியவர்கள். சீனாவின் மொத்த சனத்தொகை 1.36 பில்லியன்கள் ஆகும். இரண்டு பிள்ளைகளை பெறலாம் என்று அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள போதிலும், ‘ஒரு பிள்ளை’ என்பது சமூக வழக்காக சீன சமூகத்தில் பரிணமித்திருப்பதால் எதிர்பார்பதுபோல் பலரும் ‘இரு பிள்ளைகள் ‘ கொள்கையை கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் இந்த ‘இரு பிள்ளைகள்’ கொள்கை கடைப்பிடிக்கப் பட்டாலும் கூட சீன சனத்தொகையில் ஏற்ப்பட்டுள்ள பால் வேறுபாடு மற்றும் வயது வேறுபாட்டு தளம்பலை சீர் செய்வது கடினம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments