இன்று ஊடகங்களில் பிரதானமாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனைத் தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் காணப்படுவதால் அது குறித்த வரலாற்றுப் பின்னணியை இச் சந்தர்ப்பத்தில் வெளிக் கொணர்வது அவசியம்.
கல்முனை மற்றும் கல்முனைக்குடி என்பன இரு வெவ்வேறு தனிக்கிராமங்களாகும். மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள பதிவேடுகளின் படி கல்முனைப்பட்டினமானது ஆரம்பத்தில் நூறு வீதம் தமிழர்களையே கொண்டிருந்தது. கல்முனைப்பட்டினமானது வடக்கே தமிழ்க்கிராமமான பாண்டிருப்பையும் தெற்கே முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியையும் கிழக்கே கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லையாகக் கொண்டு விளங்கிற்று.
கல்முனைப்பட்டினத்தின் வடக்கு எல்லை “தாளவட்டுவான்” வீதியும் தெற்கு எல்லை “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதியும் ஆகும். கல்முனைப்பட்டினம் மூன்று கிராமத்தலைவர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கல்முனையையும் கல்முனைக்குடியையும் பிரிக்கும் எல்லையாகச் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த தரவைப்பிள்ளையார் கோயிலின் முன்னால் கடற்கரையை நோக்கிச் செல்லும் “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதியே விளங்கிற்று.
அக்காலத்தில் பொதுமராமத்து இலாகாவினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனைப் பெயர்ப்பலகை முன்பு தரவைப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருந்த இப்பெயர்ப்பலகை அப்போதைய கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரின் (முஸ்லிம்) அனுசரணையுடன் திட்டமிட்ட முறையிலே தெற்கு நோக்கி கல்முனை ஸாகிராக் கல்லூரி வளவுக்கு முன்னால் நகர்த்தப்பட்டது.
கல்முனைக்குடியைக் கல்முனையுடன் இணைத்து எதிர்காலத்தில் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமமான கல்முனைக்குடியையும் கல்முனையின் பகுதியாகச் சித்தரித்துக் கல்முனைப் பட்டினத்தில் தமிழர்களைச் சிறுபான்மையாக்கும் திட்டத்தின் முதல் அங்கமே மேற்கூறப்பட்ட பெயர்ப்பலகை நகர்த்தப்பட்ட நிகழ்வாகும்.
கல்முனைப்பட்டினம் 1892ம் ஆண்டின் 18ம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினால் நிறுவப்பட்ட சபையொன்றினால் நிருவகிக்கப்பட்டது. 1947 வரை கல்முனை மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளைக் (குறிச்சிகளை) கொண்டிருந்தது.
இம்மூன்று குறிச்சிகளும் (1ம், 2ம், 3ம் குறிச்சிகள்) தமிழர்களையே கொண்டிருந்தன. பின்பு 1946ம் ஆண்டின் 3ம் இலக்க பட்டினசபைகள் சட்டத்தின் பிரகாரம் இற்குப் பதிலாகக் கல்முனைப் பட்டினசபை உருவாக்கப்பட்ட போது கல்முனைக்குத் தெற்கே நான்கு பிரிவுகளைக் (குறிச்சிகளைக்) கொண்டிருந்த கல்முனைக்குடிக் கிராமமும் கல்முனைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டது.
அதேவேளை கல்முனைக்கு மிக அண்மித்ததாக அமைந்த பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற தமிழர்வாழ் கிராமங்கள் கல்முனைப் பட்டினசபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. கல்முனைப்பட்டினசபையில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் திட்டத்தின் அடுத்த அங்கமே இது.
மேலும் கல்முனைப் பட்டினசபைக்குரிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்ட வேளைகளிலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். வட்டாரங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்காகக் கல்முனை 3ம் குறிச்சியை “மாரியன் வீதி” எனப்படும் வீதியால் இரண்டாய்ப் பிரித்து வடக்கே உள்ளவர்களைக் கல்முனை 2ம் குறிச்சியுடன் சேர்த்து 2ம் வட்டாரம் எனவும் தெற்கே உள்ளவர்களைக் கல்முனைக்குடியின் 3ம் குறிச்சியுடன் சேர்த்து 3ம் வட்டாரம் எனவும் அமைத்தார்கள். இதனால் கல்முனை 3ம் குறிச்சித் தமிழர்கள் இரண்டு வட்டாரங்களில் பங்கு போடப்பட்டார்கள். கல்முனைப் பட்டினசபையில் தமிழ் உறுப்பினர்களைக் குறைக்கும் திட்டமே இது. இதனால் கல்முனைப் பட்டினசபையின் 7 வட்டாரங்களுள் 2 வட்டாரங்கள் தமிழ்ப் பெரும்பான்மையாகவும் 5 வட்டாரங்கள் முஸ்லிம் பெருமபான்மையாகவும் வருமாறு திட்டமிட்டு அமைக்கப்பட்டன.
முன்பு கல்முனைக்குத் தெற்கே “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதிக்கும் தற்போது “செயிலான்” வீதி என அழைக்கப்படும் வீதிக்கும் இடைப்பரப்பில் பிரதான வீதியை அண்டி தரவைப்பிள்ளையார் ஆலயத்திற்கான மடமும் அதற்குரிய வளவும் அதனைச் சுற்றி சுமார் 100 தமிழ்க் குடும்பங்களும் இருந்தன. இப்பகுதியில் வாழ்ந்தோருக்குக் கல்முனை 3ம் குறிச்சிக் கிராமத்தலைவரே கடமைகள் செய்து வந்தார்.
முதலாவதாக நடந்த கல்முனைப்பட்டின சபைத் தேர்தலின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனத்தினால் “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதிக்கும் “செயிலான்” வீதிக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுப் பயத்தினால் இடம் பெயர்ந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் மன்னாருக்குச் சென்று குடியேறினர்.
கல்முனைப் பட்டினசபையின் முதலாவது நடவடிக்கை தமிழ்க்குறிச்சியான கல்முனை 2ம் குறிச்சியில் அமைந்திருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கடற்கரையோரம் 2 ஏக்கர் நிலம் முஸ்லிம் மையவாடிக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியில் கடற்கரையோரம் நிலம் இருக்கும் போதுதான் இது தமிழர்களுக்கு எதிராக வேண்டுமென்று செய்யப்பட்டது. மட்டுமல்லாமல் கல்முனைக்குடியில் முஸ்லிம்களுக்கென்றிருந்த சந்தையை 1950 இல் மூடிவிட்டு முஸ்லிம் உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பட்டினசபையின் அனுசரணையுடன் தமிழர்களின் கல்முனைச் சந்தையில் முஸ்லிம்கள் ஊடுருவி அங்கிருந்த தமிழ், சிங்கள வர்த்தகர்களை இடம் பெயரச் செய்தார்கள்.
உண்மையில் “கோப்பை உடைத்தான் சந்தி” என முன்னர் அழைக்கப்பட்டதும் தற்போது “செயிலான் வீதி” என அழைக்கப்படுவதுமான இடத்திலிருந்துதான் கல்முனைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசம் வடக்கு நோக்கி இருந்தது. ஆனால் காலவரையில் அப்பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாலேயே தமிழர்களின் பிரதேசம் “தரவைப்பிள்ளையார் கோயில்” வீதி (தற்போது கடற்கரைப்பள்ளி வீதி) வரை தள்ளப்பட்டது.
1967ம் ஆண்டு கல்முனை 1ம் குறிச்சியைச் சேர்ந்த கடற்கரைப் பகுதியின் அரசகாணிகளில் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டு இப் பகுதிக்குக் ‘காரியப்பர்புரம்’ என்றும் பெயரிடப்பட்டது. தமிழர்கள் இதனை எதிர்த்தார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தின் போது கல்முனையின் தென் எல்லையான கல்முனை 3ம் குறிச்சியைச் சேர்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டும் பொருட்கள் நாசமாக்கப்பட்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் அம்மக்கள் அகதிகளாகி அண்மைய தமிழ்க்கிராமங்களில் தஞ்சமடைந்தனர். கலவரம் அடங்கிய பின் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் பலர் பயத்தின் காரணமாகக் குறைந்த விலைக்கு முஸ்லிம்களுக்குத் தங்கள் வீடு,வளவுகளை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்லலாயினர். இவ்வாறு இடம் பெயர்ந்த சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த கறுவாக்கேணியில் குடியேறி வாழத் தொடங்கினர்.
சுமார் 250 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் கல்முனையில் மட்டுமல்ல கல்முனைக்குடி சாய்ந்தமருது ஆகிய இடங்களிலும் பரந்து முஸ்லிம் மக்களிடையே வாழ்ந்தனர். 1960 இல் சாய்ந்தமருது (கரவாகு தெற்கு) கிராமசபை தேர்தலொன்றை அடுத்தும் பின்னர் 1967 இல் ஏற்பட்ட கலவரங்களையடுத்தும் கல்முனைக்குடியிலும் சாய்ந்தமருதுவிலும் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் இப்பகுதியலிருந்து இடம் பெயர்ந்தன. இப்பகுதிகளில் இன்றும் காணப்படும் இந்து ஆலயங்களின் இடிபாடுகள் இதற்குச் சான்றாகும். இன்று பிரபல கல்லூரியாக விளங்கும் பதியுதீன் மஃமுத் மகளிர் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் முன்பு அரசாங்க தமிழ்க்கலவன் பாடசாலையொன்று அமைந்திருந்தது. கல்முனையில் கலவரங்கள் ஏற்படவும் தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாயிருந்தது முஸ்லிம்களைப் பெருமபான்மையாகக் கொண்ட கல்முனைப்பட்டினசபையின் ஒருதலைப்பட்சமான உருவாக்கமும் அப்பட்டினசபை மேற்கொண்ட தமிழர் விரோத நடவடிக்கைகளுமேயாகும்.
இந்தப் பின்னணியிலேதான் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனைப்பட்டினசபையை இரண்டாகப் பிரித்துத் தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் வடபகுதியைத் தமிழ்ப் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் உருவாக்குமாறு கல்முனைத் தமிழர்கள் 1960 களிலிருந்தே கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
1967 இல் கல்முனையில் நிகழ்ந்த தமிழ் – முஸ்லிம் இனக்கலவரத்தின் பின்னர் காலஞ் சென்ற தோ.அந்தோணிப்பிள்ளை (அந்தோணிப்பிள்ளை மாஸ்ரர்) தலைமையிலான ‘கல்முனை முன்னேற்றச் சங்கம்’ அப்போதைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் – தமிழரசுக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தவர் காலஞ்சென்ற மு.திருச்செல்வம் அவர்களிடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் இந்நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவேயில்லை. வழமைபோல் பாராளுமன்ற நலன்கள் சார்ந்த தங்கள் கட்சி அரசியலுக்காக இப்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் தமிழரசுக்கட்சி நடந்து கொண்டது.
அதிகாரத்திலிருந்தபோது கூட கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கைமீது அக்கறையற்றிருந்தமை கிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது அக்கட்சிக்கு ஆத்மார்த்தமான அக்கறையிருக்கவில்லை என்பதன் வெளிப்பாடேயாகும்.
1970 க்குப் பின் கல்முனை நகரை அண்டியதாய் அமைந்திருந்த சிறியநீர்ப்பாசனக் குளங்களின் படுக்கைகள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டு அவை மண் நிரப்பப்பட்டுக் கடைத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டன. நீர்ப்பாசனத் தேவைக்காகவும் மழைக்காலத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்ட இச்சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. கல்முனை நகரை முஸ்லிம் மயப்படுத்தும் நோக்கமே இது. அரசியல் செல்வாக்கும் பொருளாதாரபலமும் அற்றிருந்த தமிழர்களால் இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழரசுக்கட்சி அறவே அக்கறையற்றிருந்தது.
1977 – 1989 காலப்பகுதியில் ஜனாப் ஏ. ஆர். மன்சூர் அவர்கள் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் கல்முனை 1ம் குறிச்சியில் வாடிவீடு, கிறவல்குழி மற்றும் சவக்காலையை அண்டிய பகுதிகள் உள்ளடங்கிய பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு இக்குடியேற்றப் பிரிவுக்கு ‘இஸ்லாமாபாத்’ எனவும் பெயரிடப்பட்டது. அதேபோன்று கல்முனை நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்குப் பின்னால் தேவாலயத்திற்குச் சொந்தமான பள்ளப்பூமி (இப்பூமியில் முன்பு இல்லச் சிறுவர்களுக்கான உணவுத் தேவைக்காக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு வந்தது). சுவீகரிக்கப்பட்டு இ.போ.ச. அலுவலகம் மற்றும் மடுவம் அரச அலுவலகங்கள் அமைக்கப்பட்டதுடன் கல்முனை – மணல்சேனை வீதியையும் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியையும் இணைத்துப் பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டு அதற்குக் ‘ஹிஜ்ரா’ வீதி எனப் பெயரிடப்பட்டது. இவ்வாறு திட்டமிட்டு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் மயப்படுத்தப்பட்ட கல்முனைதான் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தகநிலையங்களை அதிகளவில் கொண்டு விளங்குகிறது.
பிரதேச சபைகள் அமுலுக்கு வருமுன்னர் முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் கரவாகு தெற்குக் (சாய்ந்தமருது) கிராமசபை, கல்முனைப் பட்டினசபை, கரவாகு வடமேற்குக் (சேனைக்குடியிருப்பு) கிராமசபை, கரவாகு வடக்குக் (பெரியநீலாவணை) கிராமசபை ஆகிய உள்ளுராட்சி அலகுகளை உள்ளடக்கியிருந்தது. 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பட்டினசபைகளும் கிராமசபைகளும் இல்லாதொழிக்கப்பட்டுப் பதிலாக பிரதேசசபைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கரவாகுப்பற்றுப் (கல்முனை) பிரதேசசபை எனும் பெயரில் தனியானதொரு உள்ளுராட்சி அலகாக ஆக்கப்பட்டது இப்பிரதேசசபை அமைக்கப்பட்ட பின்னரும் கூட கரவாகுப்பற்றுப் பிரதேசசபையை தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரணடாகப் பிரித்து தென்பகுதியைக் கரவாகு தெற்கு எனும் பெயரில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசசபையாகவும் வடபகுதியைக் கரவாகுவடக்கு எனும் பெயரில் தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேசசபையாகவும் உருவாக்கித் தரும்படி கல்முனைத் தமிழர்கள் பல பொது அமைப்புக்களினூடாக அரசை வற்புறுத்தி வந்துள்ளனர். குறிப்பாக ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம்’ 1988 இல் இருந்தே இதுவிடயமாகத் தொடர்ந்து முயற்சிகளை எடுத்தது.
இதே போன்றுதான் பழைய நிர்வாக அலகான பிரிவுக் காரியாதிகாரி முறை நீக்கபட்டுப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் நிர்வாக அலகுகளாக அறிமுகம் செய்யப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவு எனும் பெயரில் தனியானதொரு நிர்வாக அலகாக ஆக்கப்பட்டது. முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவினை (தற்போது பிரதேச செயலகப்பிரிவு என மாற்றம் பெற்றுள்ளது) கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு தென்பகுதியானது 100 முஸ்லிம்களைக் கொண்டதாகவும் வடபகுதியானது தமிழர்களைப் பெரும்பான்மையாகவும், தமிழர், முஸ்லிம், சிங்களவர் மூவின மக்களையும் கொண்டதாகவும் இரண்டு தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமென்பதே 1988 இலிருந்து கல்முனைத் தமிழர்களால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். இக்கோரிக்கையினை ‘அம்பாறை மாவட்டத்தமிழர் மகாசங்கம்’ 1988 நடுப்பகுதியில் முன்னெடுக்க ஆரம்பித்தது.
1988 இன் பிற்பகுதியில் கல்முனைப் பகுதிக்கு அப்போது விஜயம் செய்த முன்னால் அமைச்சர் காலஞ்சென்ற ரஞ்சன் விஜயரட்னாவைச் சந்தித்து இது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தி ஜனாதிபதிக்கு முகவரியிட்ட மகஜர் ஒன்றையும் அச்சங்கம் கையளித்தது. ரஞ்சன் விஜயரட்ன அவர்கள் கொழும்பு திரும்பியதும் அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் காலஞ்சென்ற கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுத்ததன் பயனாக கல்முனைத் தமிழ்ப் பிரிவொன்றைத் (சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவு) திறப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை 12.01.1989 திகதியிட்ட ஆஃர்யு6ஃ89 இலக்கக் கடிதத்தின் மூலம் பணித்திருந்தது. இது விடயமாக முன்னால் பொத்துவில் தொகுதியிள் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான திருமதி.ரங்கநாயகி பத்மநாதன் அவர்கள் காட்டிய தீவிரமான அக்கறை பதிவுக்குரியது. எனினும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டினால் அது நடைபெறாமல் தடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1989 பெப்ரவரியில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் உபதலைவர் காலஞ்சென்ற திரு.கே.கணபதிப்பிள்ளை (கவிஞர் பாண்டியூரன்) தலைமையில் கல்முனைத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட சாத்வீக மறியல் போராட்டம் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாகக் கல்முனைத் தமிழ்ப் பிரிவுக்கெனத் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு (உப) அலுவலகம் ஒன்று 12.04.1989 இல் திறக்கப்பட்டு மேலதிக உதவி அரசாங்க அதிபராகத் தமிழர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஆனால் இவ்வலுவலகப் பிரிவு எல்லைகள் வகுக்கப்பட்டதாகவோ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாகவோ முழுமையான அதிகாரங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டதாகவோ அல்லாமல் ‘கல்முனைத் தமிழ்ப் பிரிவு’ எனும் பெயர்ப் பலகையுடன் பெயரளவிலேயே இயங்கி வந்தது.
இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தினர் தொடர்ந்து எடுத்துக் கொண்ட பெருமுயற்சிகள் காரணமாக 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இத்தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் கல்முனைத் தமிழ்ப் பிரிவு உள்ளடங்கலாகத் தரமுயர்த்தப்பட்ட 28 பிரதேச செயலகப் பிரிவுகளில் கல்முனைத் தமிழ்ப்பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள்யாவும் நிறைவேற்றப்பட்டன.
மேற்படி அமைச்சரவைத் தீர்மானமும் வழமைபோல் அம்பாறை மாவட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் தலையீடு காரணமாக அமுல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
1990ஃ93 காலப் பகுதியில் முனைப்பான செயற்பாடுகளில் ஈடுபட்ட அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு.து.இராமகிருஸ்ணன் இணைப்புச் செயலாளர் காலஞ் சென்ற திரு.ஆர் அம்பலவாணர் மற்றும் இக்கட்டுரை ஆசிரியர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் பணிகளும் பதிவுக்குரியவை. பின்னர் கடந்த பொது ஜன ஐக்கிய முன்னனி அரசாங்க காலத்திலும் 30.03.1998 இல் புதிய பிரதேச செயலகங்கள் சம்பந்தமாக அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் செல்வாக்குப் பிரயோகம் காரணமாக கல்முனைத் தமிழ்ப் பிரிவு முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு நடைமுறையில் தனியானதொரு பிரதேச செயலகப்பிரிவாகவும் தமிழ்ப்பிரிவானது அதிகாரமற்றதோர் உப பிரததேச செயலகப் பிரிவாகப் பெயரளவிலேயே கல்முனைத் தமிழர்களுக்குக் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இயங்கி வந்தது.
ஆனாலும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தினர் தங்கள் முயற்சிகளைக் கைவிடாது தொடர்ந்தும் செயற்பட்டனர். இச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக 1999 நடுப்பகுதியில் சங்கத் தூதுக்குழு முன்னாள் பொது நிருவாக அமைச்சர் திரு.ரட்ணசிறி விக்கிரமநாயக்கா அவர்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்நாள் அமைச்சருமான திரு.டக்ளஸ் தேவானந்தா சகிதம் இக்கட்டுரையாசிரியரின் தலைமையில் சந்தித்துப் பேசிய போது அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதிய பிரதேச செயலகப் பிரிவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பனம்பாலன தலைமையிலான ஆணைக்குழுவுக்கு வரைபடங்கள் புள்ளி விபரங்களுடன் கூடிய விபரமான அறிக்கையொன்றைச் சமர்பித்தது மட்டுமல்லாமல் இக்கட்டுரையாசிரியரின் தலைமையில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் தூதுக்குழு 1999 ஒக்டோபரில் ‘பனம்பாலன ஆணைக்குழு’ முன் நேரிலும் சாட்சியமளித்தது. ஆனால் பாராளுமன்றம் 2000 இல் கலைக்கப்பட்டதும் ‘பனம்பாலன ஆணைக்குழு’வும் செயலிழந்து போயிற்று.
இதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்பு கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தனிப்பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு கோரி கல்முனைத் தமிழ் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 24.01.2001 இலிருந்து 31.01.2001 வரை கல்முனைத் தமிழர்களால் உண்ணாவிரதப் போராட்டமொன்றும் நடைபெற்றது.
2000ம் ஆண்டின் ஆரம்பத்திலும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனைத் தமிழர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்தியுமிருந்தனர். 2001ம் ஆண்டின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர் சங்கத்தின் தூதுக்குழுவொன்று கொழும்பு சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக முன்னாள் பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள், நிருவாக மறுசீரமைப்பு அமைச்சர் காலஞ்சென்ற றிச்சர்ட் பத்திரனவைச் சந்தித்து இது விடயமாகப் பேசியதுடன் இவ்விடயம் அப்போதைய ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவேயில்லை.
காலத்துக்காலம் பதவியிலிருந்த அரசாங்கத்திடம் மட்டுமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடங்களிடமும் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த சகல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தினர் கொழும்பு வந்து அவர்களை நேரில் சந்தித்து பலதடவைகள் முறையிட்டிருக்கிறார்கள். கிடைத்தது உறுதி மொழிகளே தவிர உருப்படியாக ஒன்றும் நடைபெறவேயில்லை.
கல்முனைத் தமிழர்களுடைய நீண்ட காலக் கோரிக்கைகளான தனியான பிரதேச சபைக் கோரிக்கையும் கல்முனை உபபிரதேச செயலகப் பிரிவைப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தும் கோரிக்கையும் கிணற்றுக்குள்ளே போட்ட கல்லாகக் கிடக்க கல்முனைப் பிரதேச சபையானது 11.06.1999 இலிருந்து அமுலுக்கு வருமாறு 1998.12.11 திகதியிட்ட 1057ஃ16 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ‘கல்முனை நகரசபை’ எனும் பெயரில் நகரசபையாக்கப்பட்டுப் பின் 15.04.2002 இலிருந்து மாநகரசபையாக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு துண்டாடப்பட்டு 100 மூ முஸ்லிம்களைக் கொண்ட ‘சாய்ந்தமருது பிரதேசசெயலகம்’ 2001 இல் உருவாக்கப்பட்டது. தமிழர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கும் முஸ்லிம்களின் தமிழர்களுக்கு எதிரான நியாயமற்ற கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுவதற்கும் காரணியாக அமைந்திருப்பது ‘அரசியல் செல்வாக்கு’ என்ற ‘துரும்பு’ தான் என்பது காலம் கற்றுத்தந்துள்ள பாடமாகும்.
கடந்த 65 வருடகால அரசியல் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்த வரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியோ – தமிழர் விடுதலைக் கூட்டணியோ – தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ முஸ்லிம் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக பொருளாதார அரசியல் பாரபட்சங்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை அற்றிருந்தார்கள் என்பதே உண்மை மட்டுமல்ல அதற்கான உளப்பாங்கும் இக்கட்சித் தலைமைப் பீடங்களில் இருக்கவில்லை. ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று கூறிக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் இக்கட்சிகள் நடந்து கொண்டமை தமிழர்களுக்கு விரோதமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மறைமுகமான ஊக்கியாக அமைந்தது. மேலும் தமிழர்கள் அபிவிருத்தியைப் புறக்கணித்து விடுதலைப் போராட்ட அரசியலில் மட்டுமே முனைப்புக் கொண்டிருந்த காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் இணைந்து அமைச்சர்கள் உட்பட பல பதவிகளைப் பெற்றுத் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார்கள். தமிழர்களுடைய அரசியல் தலைமைகள் பதவி நாற்காலிகளைப் பற்றிக் கொள்வதற்காகத் தேர்தல்களில் வாக்குச் சேகரிக்கும் தந்திரோபாயமாக மக்களை உணர்ச்சியூட்டி வந்தார்களே தவிர அவர்களை அறிவூட்டவில்லை. தமிழர்களும் தமிழ் அரசியல் தலைமைகளின் உணர்ச்சியூட்டும் பேச்சுகளாலும் நடவடிக்கைகளாலும் மேலும் மேலும் உசுப்பேற்றப்பட்டு பட்டுவேட்டிக் கனவுலகில் சஞ்சரித்து இன்று இடுப்பிலே கட்டியிருந்த கோவணத்தையும் இழந்து நிற்கிறார்கள். இந்த நிலையில்தான் அரசியல் களநிலைமையையும் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு கல்முனைத் தமிழர்கள் தங்கள் சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகக் கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தை வென்றெடுக்கும் நோக்கில் அரச ஆதரவு சக்திகளை நாடினார்கள்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுப்பதை எதிர்க்கின்றது. அரச ஆதரவு சக்திகளை நாடிய தமிழர்களைச் சாடுகிறது. இப்பிரச்சனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சனை என்று வாதிட்டு தமிழர்களின் அறிவுபூர்வமான அணுகுமுறையைத் திசை திருப்பப் பார்ப்பது மட்டுமல்லாமல் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் முயற்சிக்கிறது. கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் பாரபடசமற்ற நிர்வாகம் சம்பந்தமானது. அதனை அரசாங்கத்திடம் கோரிப் பெறவேண்டுமே தவிர இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பேசித் தீர்க்கும் விடயம் அல்ல. மேலும்1993ம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானத்தின் தொடர் நடவடிக்கையாகவே இவ்வுப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளுகிறதே தவிர இவ்விடயம் புதியதல்ல என்பதையும் இதனை ஒரு தமிழ் – முஸ்லிம் முரண்பாடாகப் பார்க்கக்கூடாது என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை எதிர்க்கும் முஸ்லிம் காங்கிரஸ் பின்வரும் விடயங்களைக் காரணமாக முன்வைக்கின்றது.
தரமுயர்த்தப்படவுள்ள கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்குகின்றன என்பதால் அவை முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாம். இம்முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள இடப்பரப்பு முன்பு தமிழர்களுக்குச் சொந்தமானவையாக இருந்து பின்னாளில் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டவை என்பதையும் இவ்வர்த்தக நிலையங்கள் கல்முனைத் தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைவது பூகோள ரீதியாகத் தவிர்க்கமுடியாதது என்ற யதார்த்தத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்து செயற்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள்ளும் மண்முனைவடக்கு பிரதேச செயலக எல்லைக்குள்ளும் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் அமைத்திருப்பது போன்றுதான் இதுவும் பூகோள ரீதியாகத் தவிர்க்க முடியாதது.
முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் மற்றுமொரு காரணம் தரமுயர்த்தப்படவுள்ள கல்முனைத் தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் நிலத்தொடர்பற்ற முறையிலே முஸ்லிம்கள் அடங்குவது தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்துமாம். இது ஆதாரமற்ற வெறும் குதர்க்க வாதமாகும்.
கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தெற்கே கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை (கடற்கரைப் பள்ளி வீதி) எல்லையாகக் கொண்டு வடக்கே பெரிய நீலாவணைக் கிராமம் வரை அதாவது வடக்கு எல்லையாக மட்டக்களப்பு மாவட்டமாகவும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லைகளாகக் கொண்டு அமையும் போது நிலத்தொடர்பற்ற என்ற பேச்சுக்கே இடமில்லை. அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் பல தமிழ்க்கிராமங்கள் அமைந்திருப்பதும் அதேபோல் சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் எல்லைக்குள் பல தமிழ்க் கிராமங்கள் அமைந்திருப்பதும் இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாணிக்கமடு எனும் தமிழ்க்கிராமம் அமைந்திருப்பதும் அட்டாளைச்சேனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் திராய்க்கேணி எனும் தமிழ்க்கிராமம் அமைந்திருப்பதும் நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் எனும் தமிழ்க் கிராமம் அமைந்திருப்பதும் காரைதீவு தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு போன்ற முஸ்லிம் கிராமங்கள் அமைந்திருப்பதும் போன்றதுதான் உத்தேச கல்முனைத் தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மருதமுனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் எனும் முஸ்லிம் வாழ்விடங்கள் அமைய இருப்பது. இது தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்குமே தவிர ஊறுவிளைவிக்க மாட்டாது. இவ்விடயத்தைத் தமிழ் – முஸ்லிம் முரண்பாடாகக் கற்பிதம் செய்வது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவறான கண்ணோட்டத்தையும் தமிழர் விரோத மனப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது. மேலும் இவ்விடயத்தைக் குழப்பியடிப்பதற்காக இவ்விடயம் குறித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பேச வேண்டும் என்கிறது. இதுவும் அவசியம் அற்றது. அரசாங்கம் கல்முனைத் தமிழர்களின் நியாயபூர்வமான யதார்த்தபூர்வமான எதிர்பார்ப்பை உணர்ந்து கடந்த இருபத்தைந்து வருடங்களாக உபபிரதேச செயலகமாக இயங்கிவந்த ஒரு பிரிவை சகல அதிகாரங்களும் கொண்டதொரு பிரதேச செயலகப் பிரிவாகத் தரமுயர்த்த மேற் கொள்ளும் நிர்வாக நடவடிக்கையையிட்டு ஏதோ ஒரு புதிய பிரச்சனைபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஏன் பேச வேண்டும்? கடந்த காலத்தில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அனைத்துக் கட்சிமாநாடு நடந்து கொண்டிருந்த போது தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் இரு வெவ்வேறு சிறுபான்மைச் சமூகங்கள் தமிழர்களுக்குரிய உரிமைகளை இந்நாட்டு அரசாங்கம்தான் வழங்கவேண்டும். அதேபோல் முஸ்லிம்களுக்குரிய உரிமைகளையும் இந்நாட்டு அரசாங்கம்தான் வழங்க வேண்டும். ஆகவே இனப்பிரச்சினைக்குரிய தீர்வு குறித்தோ முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தோ தமிழர்தரப்புடன் பேச வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை என்ற பொருள்பட ஊடகங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் பகிரங்கமாக அறிக்கையிட்டதை இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைமை நினைத்துப் பார்த்தல் பொருத்தம்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் தமிழர் தரப்பின் மீதான வேண்டுமென்ற குற்றச்சாட்டு அரசுக்கு ஆதரவான சிங்களப் பிரமுகர்களின் ஆதரவைத் தமிழர் தரப்பினர் நாடுகிறார்கள் என்பது. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு தமிழ் அரசியல் தலைமை வல்லமையற்றிருக்கும் நிலையில் தமிழர்தரப்பினர் அரச ஆதரவு சக்திகளை நாடுவது இயல்புதானே. முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டுதானே தங்கள் சமூகத்தின் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதனைத் தமிழ்ச்சமூகத்தினர் செய்தால் தவறா?
நிறைவாக இன்று எழுந்துள்ள பூகோள அரசியல் – பிராந்திய அரசியல் – தென்னிலங்கை அரசியல் – வட இலங்கை அரசியல் – கிழக்கிலங்கை அரசியல் சூழ்நிலைகளின் பின்புலத்தில் பார்க்கும் போது கிழக்கு மாகாணத்தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடான ஓர் புதிய சுயமான மாற்று அரசியல்தளமொன்றின் தேவையைக் குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குத் தேவை என்பதை கல்முனைத்தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது.
நடைமுறையில் எந்த உருப்படியான நிகழ்ச்சித் திட்டமும் இல்லாமல் வெறுமனே தமிழ்த்தேசியம் பற்றித் தங்கள் அரசியல் இருப்புக்காக வாயளவில் மட்டுமே பேசுகின்ற போலித்தமிழ் அரசியல் தலைவர்களை இனங்கண்டு நிராகரிப்பது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தமிழர்கள் அனைவரும் தங்களுக்கென்று ஓர் புதிய சுயமான மாற்று அரசியல் தளத்தில் ஐக்கியப்பட்டால் மட்டுமே கிழக்குத் தமிழர்கள் தங்கள் எதிர்கால சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்கவைத்துப் பேணிப் பாதுகாக்க முடியும். அதனைவிடுத்து கடந்த 65 வருடகாலமாக நடந்து வந்த அரசியல் பாதையிலேயே தொடர்ந்து செல்வோமானால் கிழக்குத் தமிழர்கள் காணாமல் போய்விடுவது வெகுதூரத்தில் இல்லை. இதனையிட்டு கிழக்கு மாகாணத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய சரியான கால கட்டமும் இதுவே.