Home » » கி.ப கழக உடற்கல்வி உதவி விரிவுரையாளர் நியமன விவகாரம் துணைவேந்தர் ஊழல் செய்தாரா?

கி.ப கழக உடற்கல்வி உதவி விரிவுரையாளர் நியமன விவகாரம் துணைவேந்தர் ஊழல் செய்தாரா?


கிழக்கு பல்கலைகழகத்தில் உடற்கல்வி உதவி விரிவுரையாளர் பதவிக்கென விண்ணப்பித்தவர்களில் தகமையுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்றிருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனம் மேற்கொள்ளப்படும் என கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
உடற்கல்வி உதவி விரிவுரையாளர் ஆட்சேர்ப்பில் உண்மையான தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் முறைகேடுகள், குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பாடு செய்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த நியமனம் தொடர்பில் ஏற்பட்டு குழப்பத்தினையடுத்து புதன்கிழமையே (26.02.2014) இந்த நியமனத்தினை இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதுடன், விண்ணப்பித்தவர்களில் தகமையுடையவர்கள் இருக்கும் பட்சத்தில் இந்தத் தெரிவினை மேற்கொண்டவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், இதற்காக மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்படும்.
இப் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்துள்ள போதும், அவர்களில் தகுதி அடிப்படையில் 3 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய இருவரில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் இது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் முடிவில் இது தொடர்பான உண்மை தெரியவரும்.
குறித்த பதவிக்கு பல்கலைக்கழக பட்டத்துடன், தேசிய ரீதியில் விளையாட்டுத்துறையில் முதலிடம் பெற்றவர், அல்லது விளையாட்டுத்துறை டிப்ளோமாவுடன் பத்து வருட அனுபவமும் இருத்தல் வேண்டும். நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் தகுதி அடிப்படையில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மற்றவகையில் இந்தத் தெரிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இதனை நலன்புரிப்பிரிவு உதவிப்பதிவாளரும், உடற் கல்விக்குப் பொறுப்பானவருமே மேற்கொண்டிருந்தனர். இதில் குழறுபடிகள் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைவேந்தர் தெரிவித்தார்.
அதே நேரம், பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர்களாக குறிப்பிட்ட வருடங்கள் கடமையாற்றுபவர்கள் தகுதியானவர்கள் என்றில்லை. தேவை கருதியே அவர்கள் தற்காலிகமாக இணைக்கப்படுகின்றனர். நிரந்தர நியமனங்கள் என வரும் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை ஒழுங்குகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் இது தொடர்பில், சிலர் தவறாக விளக்கம் கொண்டுள்ளனர்.
கல்வி சார் நியமனங்கள் மாத்திரமே என்னுடைய பங்குபற்றலுடன் நடைபெறுகின்றன. இந்த நியமனங்களில் மாணவர்களின் கல்வி நலன் கருதி தகுதியானவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள். இதில் எந்தவிதமான தவறகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியதும் என்னுடைய கடமை என்றும் துணை வேந்தர் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா புதிதாக நியமிக்கப்பட்டது முதல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உடல்கல்விப் பிரிவுக்கான விரிவுரையாளர் நியமனத்திலும் துணைவேந்தரால் குழறுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வருட இறுதியில் நடைபெற்ற வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போது, மட்டக்களப்பு மாவட்ட தமழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என உரையாற்றியிருந்தார். அதனையடுத்து துணைவேந்தர் மறுப்புத் தெரிவித்து விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |