Home » » அளிக்கம்பை குறவர் சமூகத்தின் கதை

அளிக்கம்பை குறவர் சமூகத்தின் கதை

நான்கு வருடங்களுக்கு முன்னர் நாம் பார்த்தது போலவே இன்னும் இருக்கிறது அளிக்கம்பை கிராமம். ஆனாலும், ஆங்காங்கே சிறிது சிறிதாக சில மாற்றங்கள். இருந்த போதும், அளிக்கம்பை மக்களின் வாழ்க்கை எப்போதும் போல் வரண்டே கிடக்கிறது.
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபை பிரிவுக்குட்பட்டது அளிக்கம்பைக் கிராமம். வனக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 306 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்தக் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளில் அதிகமாவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதற்கு அவர்களின் வாழ்க்கை சான்றாக இருக்கிறது.
அளிக்கம்பை பிரதேசத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், சில ‘தார்’ வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆனாலும், முறையான பராமரிப்புகள் இல்லாமை காரணமாக அந்த வீதிகளும் தற்போது சேதமடையத் தொடங்கியுள்ளன. அளிக்கம்பை வனக்குறவர்களின் வாழ்வாதாரத் தொழில் – வேட்டையாடுதலாகவே இருந்தது. பயிற்றப்பட்ட நாய்களுடனும் வேட்டைக்கெனத் தயாரிக்கப்பட்ட கூரிய ஆயுதங்களுடனும் காட்டுக்குச் செல்லும் ஆண்கள் – தமது அன்றாட உணவுக்காக, மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வருவார்கள்.

ஆனால், தற்போது – அளிக்கம்பை மக்களால் முன்னரைப்போல் வேட்டையாட முடிவதில்லை என்கிறார், நாம் அங்கு சந்தித்தித்த வனக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை. வேட்டையாடுவதை பொலிஸார் தடுத்து வருவதால், வேட்டைக்குச் சென்று தங்களால் உணவைத் தேடிக் கொள்ள முடியாதுள்ளதாக வள்ளியம்மை கூறுகின்றார்.
இதனால், தமது சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் – மீன்பிடி, விவசாயம் போன்ற தொழில்களை மேற்கொள்ளலாமென முயற்சித்தால், அங்கும் அவர்கள் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள நேர்வதாகவும் வள்ளியம்மை கலையோடு விபரிக்கின்றார். நீண்ட நேரம் வள்ளியம்மையோடு பேசிக் கொண்டிருந்தோம். தனது சமூகம் பற்றிய ஏராளமான விடயங்களை வள்ளியம்மை தெரிந்து வைத்திருக்கின்றார்.

வனக்குறவர்களின் கலாசாரங்கள், பழங்கால நடைமுறைகள் பற்றிய நமது கேள்விகளுக்கெல்லாம் – புகையிலையை பாக்கு  வெட்டியால் நறுக்கிறவாறே வள்ளியம்மை பதிலளித்தார். கல்வியறிவற்ற வள்ளியம்மை – தனது மக்களின் கலாசாரம், வாழ்வியல் முறைமை மற்றும் அதற்கான காரண காரியங்கள் பற்றியெல்லாம் பேசியபோது, அவர் – ஓர் ஆச்சரியக்குறியீடாக நமக்குத் தெரிந்தார்.
பாம்பாட்டுதல், ஏடுபார்த்தும் கைபிடித்தும் சாத்திரம் கூறுதல் என்பன வனக்குறவர்கள் மத்தியிலுள்ள சில பிரத்தியேக நடவடிக்கைகளாகும். பாம்பாட்டுதல் மூலமாகவும், சாத்திரம் கூறுவதனூடாகவும் வனக்குறவர்கள் தமது அன்றாட செலவுகளுக்கான பணத்தினை சம்பாதித்துக் கொள்கின்றனர்.
ஆனாலும், அளிக்கம்பை கிராமத்தில் பாம்பாட்டுகின்றவர்கள் எவரும் தற்போது இல்லை. 2010ஆம் ஆண்டு அளிக்கம்பை மக்களின் வாழ்க்கையினை ஊடகங்களில் பதிவு செய்யும்பொருட்டு, அப்பிரதேசத்துக்கு நாம் சென்றிருந்தவேளை, அங்கு இரண்டு பாம்பாட்டிகள் இருந்ததாக கிராம மக்கள் கூறியமை நினைவு கொள்ளத்தக்கது.
“சாத்திரம் சொல்கின்றவர்கள் யாராவது இங்கு இருக்கின்றார்களா” என்று அளிக்கம்பை வாசியான பாக்கியம் என்பவரிடம் கேட்டோம். ‘சாஸ்திரம் சொல்லும் தொழிலில் அளிக்கம்பை வனக்குறவர்கள் ஈடுபடுவதில்லை. அனுராதபுரத்திலிருந்து வரும் குறவர்கள்தான் ஏடு பார்த்து சாத்திரம் சொல்வார்கள். அவர்களுக்கு சிங்களம் உட்பட பல பாசைகள் தெரியும்.
ஏடுகள் சிங்கள மொழியில் இருப்பதால், அனுராதபுரத்திலுள்ள குறவர்கள் ஏடுகளை படித்து அறிந்துள்ளதாக கூறுகிறார்கள். அனுராதபுரத்தில் வசிக்கும் வனக்குறவர்கள்தான் சாஸ்திரம் சொல்வதைத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். நாங்கள் கூட, அவர்களிடம்தான் சாஸ்திரம் கேட்போம்’ என்றார் பாக்கியம்.
அளிக்கம்பையின் வயது முதிர்ந்த பெண்களில் ஒருவர் ‘இறபொட சின்னப்பு வெடிக்காரன்’ என்பவர். 1927 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 87 வயதாகிறது. 2010ஆம் ஆண்டு இவரை நாம் அளிக்கம்பையில் வைத்துச் சந்தித்த போது, நம்முடன் உற்சாகமாகப் பேசிக்கதைத்தவர், இப்போது – நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார். தனது மகளுடைய வீட்டின் முன் அறையில் – பாயில் படுத்துக் கிடக்கும் அளிக்கம்பையின் அந்த மூத்த பிரஜையை நமது கமராவில் பதிவு செய்து கொண்டோம்

வனக்குறவர்களின் திருமண முறைமை, சில தசாப்தங்களுக்கு முன்னர் வித்தியாசமானதாய் இருந்ததாக தெரியவருகிறது. திருமணம் செய்யும் ஆண்களுக்கு – பெண் வீட்டார் சீதனமாக, பாம்புகளைக் கொண்ட பெட்டிகளையும், வேட்டைக்காகப் பயிற்றப்பட்ட நாய்களையும் மற்றும் வேட்டைக்கான ஆயுதங்களையும் சீதனமாக வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆயினும், இன்றைய தலைமுறையைச் சேர்ந்த திரேஸா அந்தக் கதைகளை மறுக்கின்றார்.
“எனக்குத் திருமணமாகிவிட்டது. என்னிடமிருந்து எனது கணவர் சீதனங்கள் எவையும் வாங்கவில்லை.அதுமட்டுமல்ல, எனது கணவரின் சொந்த வீட்டில்தான் என்னைக் கொண்டு வந்து வைத்திருக்கின்றார்” என்று கூறும் திரேஸாவின் முகத்தில் நிறையவே மகிழ்சியைக் காண முடிந்தது
அளிக்கம்பை வனக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெகன் எனும் இளைஞரொருவர்தான், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உப தவிசாளராக கடந்த முறை பதவி வகித்திருந்தார். ஆயினும், தற்போதைய பிரதேச சபையில் அளிக்கம்பை வனக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த எவரும் ‘மக்கள் பிரதிநிதி’களாகத் தெரிவாகவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அளிக்கம்பை வனக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த கணிசமான பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்டவர்களாக வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிந்தது. இவர்களில் அதிகமானோர் இளம் வயதுடையவர்கள் என்பது கவனிப்புக்குரிய விடயமாகும்.
இது குறித்து அளிக்கம்பை கிராமத்துக்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். பாக்கியராஜாவிடம் விசாரித்தோம். “கல்வியறிவின்மை, இள வயதுத் திருமணம் மற்றும் வறுமை போன்றவைதான் – கணவன்மாரினால் பெண்கள் கைவிடப்படுவதற்கு பிரதான காரணங்களாக உள்ளன” என்றார் சமுர்த்தி உத்தியோகத்தர் பாக்கியராஜா.
இதேவேளை, “அளிக்கம்பை பகுதியானது, தனித்ததொரு கிராமமாகக் காணப்படுவதும், இந்தக் கிராமத்தின் எல்லைகளில் பிற மக்களின் வாழ்விடங்கள் எவையுமில்லாமல், அளிக்கம்மை மக்கள் தனித்த வாழ்க்கையினை நடத்துவதும் இவர்களின் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படாமைக்கு பிரதானமான காரணமாகும்” என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பாக்கியராஜா விளக்கமளித்தார்.
இவ்வாறான சூழ்நிலைகளாலும், வறுமை காரணமாகவும் அளிக்கம்பையிலுள்ள கணிசமான மக்கள் – ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று ‘கையேந்தி’ப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இருந்தபோதும், தமது சமூகத்தின் இவ்வாறான நிலைமை மாற வேண்டும் என்பதில், அளிக்கம்பையிலுள்ள சில இளைஞர் யுவதிகள் பேரார்வம் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ரோசலின். இவர் வீட்டிலிருந்தவாறே தையல் தொழிலைச் செய்து வருகிறார்.

மட்டக்களப்பு மாவட்டம் சென்று – தையல் கற்கை நெறியைப் படித்ததாகக் கூறும் ரோசலின் நம்மிடம் பேசினார். “எனது சமூகத்தவர்கள் மற்றவர்களிடமிருந்து கையேந்திப் பிழைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பது எனது விருப்பமாகும். நமது வருமானத்தை நாம்தான் தேடிக் கொள்ள வேண்டும். அதற்கு, இளையவர்களான நாங்கள்தான் – முன்மாதிரியாக இருந்து காட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேதான், இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன் என்று கூறும் ரோசலின் கண்களில் நம்பிக்கை தெரிந்தது
அளிக்கம்பையில் 2010ஆம் ஆண்டு நாம் சந்தித்த பலரையும் விசாரித்தோம். அவர்களில் கணிசமானோர் தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அறியக் கிடைத்தது. ரீட்டாவின் கணவர் அவ்வாறு வெளிநாடு சென்றுள்ளவர்ளில் ஒருவர். “என்னுடைய கணவர் வெளிநாடு செல்வதற்காக, முகவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்காக, கடன்பட்டோம்.
கணவர் வெளிநாடு சென்று ஒரு வருடமும் மூன்று மாதங்களுமாகின்றன. ஒரு வருடமாக கணவர் உழைத்த பணத்தின் பெரும் பகுதி – கடனைக் கொடுத்துத் தீர்ப்பதற்கே போதுமாக இருந்தது. இப்போது, இரண்டு மூன்று மாதங்களாகத்தான் கணவரிடமிருந்து கிடைக்கும் பணம் ஓரளவு மிச்சப்படுகிறது” என்றார் ரீட்டா.
கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்ற போதும், ரீட்டாவும், அவருடைய மகனும் அடிப்படை வசதிகளற்ற குடிசையொன்றிலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட, நான்கு வருடங்களுக்கு முன்னர் பார்த்தது போலவே, அளிக்கம்பைக் கிராமம் இன்னும் உள்ளது.
அவர்களின் வாழ்க்கையிலும், சமூகக் கட்டமைப்பிலும் சொல்லிக் கொள்ளும் வகையில் எவ்விதமான முன்னேற்றங்ளையும் காண முடியவில்லை. ஒரு வேளைச் சோற்றுக்கும், ஒரு குடம் நீருக்குமாக அலைவதற்கே – அவர்களுடைய ஒவ்வொரு நாளும் போதுமாக இருக்கிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |