ஸ்ரீலங்காவில் நடைமுறையில் இருக்கும் 19ஆவது திருத்த சட்டமானது முழுமையாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஊடக பிரதானிகள் மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் 19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் எனவும் அதிரடியாக தெரிவித்த ஜனாதிபதி, தற்போது நடைமுறையில் இருக்கும் 19 ஆவது திருத்தினை ஒழித்தால் 2020 ஆம் ஆண்டு செழிமையான நாடாக இலங்கை மாறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அரசியலமைப்பினால் தான் நாட்டில் அரசியல் ஸ்திரம் இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று யார் ஆட்சிக்கு வந்தாலும், 19 ஆவது அரசியலமைப்பினை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சுதந்திர கட்சி எடுக்கும் எந்தவொரு முடிவையும் நான் பின்பற்றுவேன் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
மேற்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடிக் கருத்தினால் கொழும்பு அரசியலில் சற்று பரபரப்பு நிலை தோன்றியுள்ளதாக நோக்கர்கள் கூறியிருக்கின்றனர்.
நாட்டின் முக்கியமான சட்டத்தை சாபக்கேடு என கூறிய அவரது கருத்து அரசியலில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தப்போகின்றது என்பதை அடுத்துவரும் நாட்களில் காணலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
0 Comments