Home » » கல்முனை விகாராதிபதி தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கான உண்ணாவிரத போராட்டம்

கல்முனை விகாராதிபதி தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கான உண்ணாவிரத போராட்டம்


ஆர்.சயனொளிபவன் & TEAM

 • 5 நாட்கள் வரை நீடித்த உண்ணாவிரத போராட்டம் -  அடைந்த வெற்றிகள் 
 • தமிழ் மக்களின் பாதுகாவலராக தோற்றமளிக்கின்ற தேரர்  
 • பிரதேச செயலக உருவாக்கத்திற்கு தடையாகவுள்ள காரணிகள்
 • உயிர்த்த ஞாயிறு   தாக்குதலால் கள நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் 
 • தமிழ் சிங்கள -  முஸ்லீம் சமூகங்களிற்கு இடையே உள்ள உறவுமுறையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் 
 • தமிழ் தலைமையின் அமைதியான போக்கு 
 • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாகுவதற்குரிய சாத்தியப்பாடுகள்


எமது நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அமைதியின்மையை உருவாக்கிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையிலே 1989 இல்  இருந்து நீண்டகாலமாக கிடப்பில் வைக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக உருவாக்கத்திற்கான கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்  தலைமயில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கல்முனை பகுதியில் பெரும் பதட்ட நிலையை உருவாக்கியது.


கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள் ,  கிறிஸ்­தவ போதகர் அருட்­தந்தை கிரு­பை­ராஜா, கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அ.விஜ­ய­ரெத்­தினம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டம்
 • முதல் நாளில் இருந்து பெரும்தொகையான மக்களின் ஆதரவை பெற்ற ஒரு போராட்டமாகவும்
 • 3 வது நாளில் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தின தேரர் வருகை தந்து கல்முனை தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு தமது முழு ஆதரவை தெரிவித்ததையும்
 • 4 வது நாளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அமைச்சர்கள் தயா கமகே, மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பின்னர் M A சுமந்திரன் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட செய்தி உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு தெரியபடுத்தப்பட்டதும் . ஆனால் உண்ணாவிரதம் இருந்தவர்கள் அதனை ஏற்க மறுத்ததையும்
 • 5ஆவது நாளான கடந்த சனியன்று ஞானதேரர் குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்து உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு அளித்த 30 நாட்கள் வாக்குறுதிக்கு இணங்கி அவர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமா கைவிடுவது என்ற முடிவிற்கும் வந்ததும்
மேலும் இவ் உன்னாவிரத போராட்டமானது தமிழ் சிங்கள மக்களின் ஆதரவை பெற்றது மட்டுமல்லாது இரு இனங்களிடையேயும் உறுதியான புரிந்துணர்வை வளர்க்கும் போராட்டமாகவும் முடிவிற்கு வந்துள்ளது.

5 நாட்கள் வரை நீடித்த உண்ணாவிரத போர்ராட்டம் அடைந்த வெற்றிகள் 

கல்முனை வடக்கு செயலகம் உருவாக்கத்திற்கான முயற்சி 30 வருடகாலத்தை கடந்தும் இன்று வரை ஒரு உப பிரதேச செயலகமாக இயங்கிக்கொண்டு இருப்பது யாவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும். குறிப்பாக இப் பிரதேச செயலக  உருவாக்கத்திற்கான 30 வருடகால முயற்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை அளிக்காத இத் தருணத்தில் ரன்முத்து சங்கரட்ன தேரர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் உடனடி வெற்றிகளை கொடுக்காவிட்டாலும் பல நன்மைகளை விளைவித்துள்ளது

கல்முனை விகாராதிபதியான ரன்முத்து சங்கரட்ன தேரர் பலராலும் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு தமது உயிரையே இப் பகுதியில் வாழுகின்ற தமிழ் மக்களுக்காக தியாகம் செய்ய முன்வந்தது பெரும்பாலான மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற 18% தமிழ் மக்களுக்கும் தேரரின் முயற்சி புது தென்பை கொடுத்துள்ளது .மேலும் இப் பகுதியில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் மனதிலும் தேரர் தமது நலனில் தூய்மையான அக்கறை கொண்டுள்ளார் என்ற ஒரு நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.

30 வருடகாலமாக முடிவே இன்றி தொடர்ந்த கோரிக்கைக்கு குறைந்த பட்சம் 30 நாட்களுக்குள் தீர்வு பெற்றுத்தருவேன் என அழுத்தம் திருத்தமாக ஞான தேரர் வழங்கிய வாக்குறுதியும். மேலும் ஞான தேரர் வழங்கிய வாக்குறுதி அரசிற்கு பெரும் அழுத்தத்தையும் கொடுத்துள்ளது.

வட கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கான முயற்சி கல்முனை குடியை சேர்ந்த ஒரு சிறு குழுவினரை தவிர இலங்கையில் உள்ள சகல தரப்பு மக்களாலும் நியாயபூர்வமான கோரிக்கையாக பார்க்கப்பட்டுள்ளது


தமிழ் சிங்கள மக்களிற்கிடையேயான உறவில் ஒரு புரிந்துணர்வையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது பெரும்பாலான சிங்கள மக்களின் அனுதாபத்தையும் கல்முனை தமிழ் மக்கள் பக்கம் சாய வைத்துள்ளது
 • பல சமூகம் வாழும் கிழக்கில் போரின் தாக்கம் எவ்வாறான விளைவுகளை கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை இவ் நிகழ்வு அழுத்தம் திருத்தமாக வெளிக்கொணர்ந்துள்ளது. குறிப்பாக வடமாகாணம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் தெளிவாக தென்படுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழர்கள் நாளாந்தம் அனுபவிக்கின்ற பிரதிகூலங்களை   தமிழ் தலைமைகளுக்கு எந்த அளவிற்கு தெரிகின்றதோ தெரியாது ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு தெளிவாக தென்படுத்தியுள்ளது


இவ் விடயம் நாட்டில் உள்ள பெரும்பாலான மத தலைவர்களுக்கும் , அரசியல் தலைவர்களுக்கும் தெளிவாக தென்படுத்துவது மட்டுமல்லாது மேலும் குறிப்பாக ரணில் அரசின் ஸ்திரத்தன்மையையும் மீண்டும் ஒரு முறை சோதனைக்கு உள்ளாக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
தமிழ் மக்களின் பாதுகாவலராக தோற்றமளிக்கின்ற தேரர்

15 வருடங்களுக்கு  முன்பு அதாவது  2004ஆம் ஆண்டு கல்முனை விகாரைக்கு  விகாரதிபதியாக பொறுப்பேற்று வந்த ரன்முத்து சங்கரட்ன தேரர் தனது
 • முதல் முயற்சியாக தமிழை சரளமாக பேசக்கூடிய தேர்ச்சியுடைய ஒரு துறவியாகவும் குறிப்பாக தமிழில் ஒரு சொல்லு கூட பேசமுடியாத நிலையில் இப் பகுதியிற்கு விகாரதிபதியாக பொறுப்பேற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்
 • சகல மதங்களையும்  மதிப்பவராகவும் மேலும் அதனை வாய் சொல்லால் மட்டும் காட்டாமல் நடைமுறையில் காட்டும் ஒரு பெரிய மனிதரும் ஆவார் 
 • அமைதி சாந்தம் நியாயம் போன்ற நட் தன்மைகளை மதிக்கும் பௌத்த துறவியாகவும்
 • ஒரு சமூகம் அநியாயமான முறையில் ஒடுக்கப்படும் போது அல்லது மற்றைய சமுகம்களுக்கு உள்ள உரிமைகள் இன்னொரு சமூகத்திற்கு மறுக்கப்படும் போது தனது உயிரையும் துச்சமாக மதித்து ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு போராட தயார் என்பதனை கடந்த வாரம் இவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரத முயற்சியும் எடுத்துக்காட்டுகின்றது 
பிரதேச செயலக உருவாக்கத்திற்கு தடையாகவுள்ள காரணிகள்

தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த ஒரு பகுதியில் தமக்கென ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க முற்படுகின்ற வேளையில் குறிப்பாக கல்முனைகுடிப்பகுதியில் வாழ்கின்ற முஸ்லீம் சமூகத்தில் ஒரு சிறு பகுதி தொடர்ச்சியாக நியாயபூர்வமற்ற காரணங்களை  காட்டி வந்த வேளையில் அவர்களுடைய வாதம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து நலிவுத்தன்மையை அடைந்துள்ளது
 • முஸ்லீம் அரசியல் தலைவர்களை பொறுத்த அளவில் தமது சமூகம் நாடளாவிய ரீதியில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டியுள்ளதாலும் மற்றும் அவர்களுடைய அரசியல் பலம் கேள்விக்குறியாகியதாலும் மேலும் இவ்வாறன நியாயபூர்வமான கோரிக்கைக்கு எதிர்ப்புநடவடிக்கையில் ஈடுபடுவதனால் தமது சமூகத்திற்கு மேலும் அவப்பெயரை சிங்கள தமிழ் சமுகங்களுக்குள் ஏற்படுத்தும் என்ற எண்ணப்பட்டாலும் அமைதியான அணுகுமுறையை கையாளுகின்றனர்
 • கூடுதலான முஸ்லீம் மக்களை பொறுத்த அளவில் தற்போதைய நாட்டின் நிலமையில் தமிழ் மக்களின் நியாயமான பிரதேச செயலக உருவாக்கத்திற்காண கோரிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பதன் மூலம் மேலும் நெருக்குவாரத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய சந்தர்ப்பம்  உருவாகலாம் என்ற எண்ணப்படும்
இக் காரணங்களால் எதிர்ப்பு போராட்டம் ஒரு மிக குறுகிய வட்டமாக மாற்றம் கண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதுமேலும் இவர்களுடைய வாதம் என்னவெனில்
 • தற்போது 90% மேற்பட்ட தமது சமூகத்தை சார்ந்தவர்களின் வியாபார ஸ்தாபனம்கள் தமிழர் பகுதிகளில் இருப்பதனால் இப் பிரதேசம் தமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்றும்  • கல்முனை என்ற பகுதி முஸ்லிம்களுக்கு உரித்தான பகுதி எனவும் இதனால் இப் பிரதேசம் முழுவதும் முஸ்லீம் பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் எனவும் 
 • 33,000 மேற்பட்ட தமிழர்கள் வாழுகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குள் சில பகுதிகளுக்குள் 3,215 முஸ்லீம் மக்களும் வாழ்வதனாலும்  மற்றும் தமது சமூகத்தைசேர்ந்த அம் மக்களின் நன்மைகருதி முழு கல்முனை தமிழ் பகுதியும் தமது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் எனவும்
நியாய பூர்வமற்ற காரணங்களை  காட்டுகின்றனர் மேலும் இக் காரணங்கள்  எவ் வகையிலும் நியாயப்படுத்த முடியாதென்பதை நன்கு அறிந்துள்ள ரண்முத்து சங்கரட்ன தேரர் வேறு வழிகள் இன்றி அதேவேளை இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் இவ் அநீதி இணை காட்டவேண்டும் என்ற நோக்குடனும் சாகும் வரையான உண்ணாவிரத முயற்சியையும் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முஸ்லீம் சமூகதிற்கும் ஏனைய சமூகம்களுக்கும் இடையே உள்ள உறவுமுறையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்

தமிழ் முஸ்லீம் சமூகங்களிற்கு  இடையேயான உறவு முறை 1980 களில் இருந்து காலத்திற்கு காலம் முறுகல் நிலையை அடைவதும் தெரிந்த விடயமாகும். ஆனால் போர் முடிவிற்கு வந்த காலப்பகுதியில் இருந்து ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஆளுநராக நியமிக்கும் வரை ஓர் அளவிற்கு சுமுகமான உறவே நிலவியது. ஆனால் அதேவேளை கல்முனை வடக்கு உப செயலகம் தரமுயர்த்தலுக்கான முயற்சி , ஹிஸ்புல்லா அவர்களின் ஆளுநர் நியமனம் மேலும் உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் அடிப்படைவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதல்கள் இதனை தொடர்ந்து தமிழ் சமூகம் மட்டும் இன்றி சிங்கள சமூகமும் பலவிடயம்களில் முஸ்லீம் சமூகத்தோடு அதிருப்தி அடைய தொடங்கியது  இதன் ஒரு விளைவே அண்மையில் கல்முனையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டமும் மேலும் இவையாவற்றிற்கும் முக்கிய காரணிகளாக கிழக்கில் முஸ்லீம் சமூகம் கூடுதலாக வாழும் பகுதிகளில் 1989ஆம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளின் அளவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அவற்றுள் சில 
 • 1980களில் நாட்டில் உள்ள சில மாகாணங்களில் மாகாண ரீதியாக பல்கலைக்கழகம்கள் உருவாக்கப்பட்டன அந்த வகையில் கிழக்கிலும் மட்டக்களப்பை மையமாக கொண்டு கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது அதேவேளை இப் பல்கலைக்கழகம் முழு நிலமையில் இயங்க முன்பே நாட்டின் மற்றைய பகுதிகளில் இல்லாதவகையில் முஸ்லீம் அரசியல் வாதிகளை திருப்திப்படுத்தும் வகையில் அதாவது 1988 யிலிருந்து நாட்டின் அரசாங்கத்தை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லீம் அரசியல் தோற்றம் பெற்றதிலிருந்து அன்றைய  அரசிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக ஒலுவிலில்  தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும். எமது நாட்டை பொறுத்தளவில் அக் காலப்பகுதியில் இது ஒரு சாதனையாகவும் அமைந்தது . ஒப்பிட்டு அளவில் நாட்டின் மற்றைய பகுதிகளை போல் கூடிய கல்வியாளர்களை கொண்ட வடக்கில் இன்று வரை யாழ் பல்கலைக்கழகம் ஒன்றே வவுனியா வரையில் கிளைகளை அமைத்து இயங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் அவ் வேளையில் கிழக்கில் மேலும் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தேவையே இருக்கவில்லை. • ஹிஸ்புல்லா அவர்களின் மத போதனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பாரிய நில மற்றும் கட்டிட தொகுதியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம்
 • எமது நாட்டின் சனத்தொகையோ 2 கோடி 20 இலட்சம் (2,20,00,000) அதேவேளை நாடளாவிய ரீதியில் 23 மாநகர சபைகளையும் அதாவது அண்ணளவாக 10,00,000 பேருக்கு ஒரு மாநகர சபை என்ற ரீதியில் அமைந்துள்ளது. ஆனால் இவற்றுள் 3 மாநகர சபைகள் கிழக்கிலும் அவற்றுள் 2 அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பகுதியை மையப்படுத்தி முறையே கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பகுதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அம்பாறை மாவட்டத்தில் அண்ணளவாக வாழுகின்ற 3,20,000 முஸ்லீம் சமூகத்திற்கு 2 மாநகர சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் 1,60,000 பேருக்கு 1 மாநகர சபை என்ற விகிதத்தில் இது அமைந்துள்ளது.
 • நாட்டில் உள்ள 2,20,00,000 மக்களுக்கு 43 நகர சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 5,00,000 பேருக்கு 1 நகரசபை என்ற ரீதியில் நகரசபைகள் அமைந்துள்ளது . இவற்றுள் 5 நகரசபையில் கிழக்கில் உள்ள திருகோணமலை, கிண்ணியா, ஏறாவூர், காத்தான்குடி, அம்பாறை ஆகிய பகுதிகளிலும் இச் நகரசபைகளில் 3 முஸ்லீம் மக்களை மையப்படுத்தியும் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கில் அண்ணளவாக வாழுகின்ற 6,90,000 முஸ்லீம் மக்களுக்கு 3 நகரசபைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் . 2,30,000 முஸ்லீம் மக்களுக்கு 1 நகரசபை என்ற ரீதியில் அமைந்துள்ளது
 • குறிப்பாகக் கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை பார்ப்போமாயின் கல்முனை பகுதியில் ஒரு ஆதார வைத்திய சாலை இருக்கும் போது 2 கிலோ மைல்கல் தொலைவில் கல்முனை குடியில் மற்றுமொரு வைத்திய சாலை உருவாக்கப்பட்டதும்
 • கடந்த தேர்தலில் கிழக்கில் இருந்து மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 7 முஸ்லீம் பாராளுமன்ற உறுபின்னர்களில் 5 பேர் ராஜாங்க அமைச்சர்களா அல்லது துணை அமைச்சர்களாக இருந்ததும்.
 • அரசியல் அழுத்தம்கள் காரணமாக  பொருத்தமற்ற இடத்தில் உருவாக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் காணப்படும் ஒலுவில் துறைமுகம்
இவ்வாறு 1989ஆம் ஆண்டிலிருந்து கிழக்கில் உள்ள முஸ்லீம் சமூகம் நாட்டில் உள்ள ஏனைய சமூகங்களை  விட சாதிக்கும் சமூகமாகவும் அரசியலில் சக்தி வாய்ந்த சமூகமாகவும் விளங்கியதால் இச் சமூகம் பெற்றுக்கொண்ட நன்மைகள் அடுக்கி கொண்டே போகலாம். இவ்வாறு முஸ்லிம் சமூகத்தால் சாதிக்கப்பட்டவைகளில் மேலே குறிப்பிடப்பட்டவை சிலவே. மேலும் முஸ்லீம் அரசியல் வாதிகள் சிலர் தாங்கள் நினைத்தால்  எதையும் செய்யலல்லாம் என்ற தோற்றப்பாட்டையும் அதற்கு நல்ல உதாரணமாக வட கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கு தடையாக இருப்பதையும் குறிப்பிடலாம்.


கல்முனை விடயத்தை பொறுத்த அளவில் முஸ்லீம் அரசியல் மற்றுமொரு சமூகத்தின் தலைவிதியையும் நிர்ணயிக்கும் சக்தியாகவும் இருந்திருப்பதை உப செயலாளர் பிரிவு தரமுயர்த்தல் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இவ் வகையான யுக்தியை குறிப்பாக முஸ்லீம் அரசியலின் ஒரு பகுதி கடந்த உயிர்த்த ஞாயிறு வரையும் வெற்றியளிக்கக்கூடிய வகையில் பயன்படுத்தியதை இவ் விடயம் தெளிவாக எடுத்துக்க்காட்டுகின்றது.


இவ் வகையான செயற்பாட்டின் அதிதிருப்தியே கல்முனை பகுதியில் ரண்முத்து தேரரின் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டமும் மேலும் இப் போராட்டத்திர்க்கு சிங்கள தமிழ் சமூகத்தால் பாரிய அளவில் வழங்கப்பட்ட ஆதரவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.


தமிழ் தலைமையின் அமைதியான போக்கு

தமிழ் தலைமையை பொறுத்தளவில் அரசியலில் முஸ்லீம் தலைமைகள் மற்றும் முஸ்லீம் மக்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இன்றும் கடைபிடிப்பதை உணரக்கூடியதாகவுள்ளது. மேலும் இவர்கள் கடந்த 70 வருடகாலமாக தமிழ் மக்களுக்குறிய அரசியல் தீர்விலேயே மாத்திரம் கவனம் செலுத்தும் அமைப்பாகவும் இருக்க முற்படுகின்றனர். ஆனால் கிழக்கில் சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கள நிலமை வடமாகாணத்தை போல் அல்லாமல் முற்று முழுதாக மாற்றம் கண்டுள்ளது இவற்றுள் முக்கியமாக தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும் . அதே வேளை கடந்த 70 வருடகாலமாக தமிழ் தலைமையோ வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஒரே அரசியல் கொள்கையையே பின்பற்ற முற்படுகின்றனர் . அத்தோடு முஸ்லீம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணக்க அரசியல் கொள்கையை பின்பற்றமுற்படுகின்றனர் . ஆனால் முஸ்லீம் மக்களோ 1980களில் இருந்து அரசியல் தீர்வில் நம்பிக்கை அற்றவர்களாகவும் மற்றும் அவர்கள் தமது சமூகத்தின் அபிவிருத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்டவர்களாகவும் மேலும் எமது நாட்டின் அரசியலை பொறுத்தளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் சகித்தியாகவும் வளர்ச்சியடைந்துள்ளனர். 


கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களை பொறுத்தளவில் நடந்து முடிந்த போரை தொடர்ந்து அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையே போராட்டமாக மாற்றம்கண்டுள்ளது. ஆனால் இன்று வரை தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் கொள்கையில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் மாற்றம்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை இப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை உருவாக்க ஆரம்பித்துள்ளது . இதன் தொடர்ச்சியில் ஒன்று தான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலுக்கான முயற்சியுமாகும். இந்த விடயத்தை பொறுத்த அளவில் தமிழ் தலைமை கல்முனை பகுதியில் உள்ள முஸ்லீம் அரசியல் வாதிகளை பகைக்ககூடாதென்பதில் தான் அவர்களுடைய முழுக்கவனமும் இருந்தது. இக் கொள்கையால் தமிழ் சமூகமோ இவர்களை நம்பி பயனில்லை என்று தேரரின்  வழிகாட்டலில் புறப்பட ஆரம்பித்து விட்டனர். ஒப்பீட்டளவில் ஒரு சிறிய விடயமான பிரதேச செயலக தரமுயர்த்தலை பெற தடுமாறும் தமிழர் தலைமை எவ்வாறு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெறமுடியும் என்ற கேள்வியை இப் பகுதியில் வாழும் தமிழ் சமூகம் எழுப்புகின்றது .
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாகுவதற்குரிய சாத்தியப்பாடுகள்

கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட கல்முனை விகாராதிபதி ரன்முத்து சங்கரட்ன தேரர் தலைமயிலான உண்ணாவிரத போராட்டம் உடனடியாக வெற்றியளிக்கவிட்டாலும் இப் போராட்டமானது ஒரு சிறிது காலப்பகுதிக்குள் வடக்கு கல்முனை பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள்  அதிகமாவே காணப்படுகின்றது. மேலும் பார்ப்போமேயானால்


 • கல்முனையில் சகல பகுதி மக்களாலும் மதிக்கப்படுவரும்  மற்றும் சமாதான விரும்பியுமான  ரண்முத்து சங்கரட்ன தேரரின் தூய்மையான சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் தரமுயர்த்தலுக்கான நியாய தன்மையை நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தெளிவாக காட்டியுள்ளது 


 • மேலும் தமிழ் மக்களின் நியாய பூர்வமான இக் கோரிக்கைக்கு பாரிய அளவிலான  அளவிலான தேரர்கள் மற்றும் சிங்கள மக்களின் பெரும் ஆதரவு 
 • ஞானதேரர்  30 நாட்களுக்குள் தரமுயர்த்துவதற்கான முழு முயற்சியும் எடுப்பதாக வழங்கியதாக கூறப்படும் வாக்குறுதியும் மற்றும் அவ்வாறு தரமுயர்த்த படாத பட்சத்தில் தானும் களமிறங்குவதாக வழங்கிய வாக்குறுதி 
 • பிரதமர் ரணிலினால்  உண்ணாவிரதகாரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்தி அதாவது பிரதேச செயலகமாக தரமுயர்த்தலில் உள்ள நிர்வாக எல்லைநிர்ணயம் சம்பந்தமான விடயம்கள் முடிவிற்கு வந்ததும் தரமுயர்த்தல் மேற்கொள்ளப்படும் எனவும் 
 • உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் அடிப்படைவாத தாக்குதலை தொடர்ந்து பலவீனமான நிலைக்கு  முஸ்லீம் அரசியல் தள்ளப்பட்டுள்ளதால்  தரமுயர்த்தலுக்கு எதிர்க்கும் குழு மேலும் பலவீனம் அடைந்த நிலை 
 • மேலும் தமிழ் மக்களின் நியாய பூர்வமான இக் கோரிக்கைக்கு பாரிய அளவிலான   தேரர்கள் மற்றும் சிங்கள மக்களின் பெரும் ஆதரவு
இவை யாவும் கல்முனை வடக்கு தமிழ் பிரிவு விரைவில் முழு அளவிலான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படுவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை தெளிவாக காட்டுகின்றது.

போர் நடைபெற்ற காலம்களில் 
 • குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாய்பேசத   மனிதர்களாக மாற்றப்பட்டதும் மேலும் உரிமைப்போராட்டம்களை மேற்கொள்கின்ற போது பயங்கரவாதிகளாக மாற்றப்பட்ட காரணம்களினாலும்
 • 1989 இல் இருந்து முஸ்லீம் அரசியல்   நாட்டின் ஆட்சியை  உருவாக்கும் சக்தியாக இருந்ததாலும் 
 •  கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் 100% சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததாலும் மேலும் இவர்கள் தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளில் நாட்டம் இல்லாதவர்களாகவும் அதேவேளை தமிழ்மக்களின் அரசியல் தீர்வில் அக்கறைசெலுத்தியதாலும்


30 வருடங்கள் சென்றும் விடையில்லாத தொடராக கல்முனை செயலகம் தரமுயர்தல் சென்றுகொண்டு இருந்த இவ் வேளையில் . இவை யாவற்றிற்கும் முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் எங்கோ இருந்து இப் பகுதியிற்கு 2004ஆம் ஆண்டு விகாரதிபதியாக வந்த ரன்முத்து சங்கரட்ன தேரரின் தலைமையிலானா குழுவினர் கல்முனை தமிழ் மக்களுக்கு மூன்று சகாப்தமாக இழைக்கப்பட்டு வந்த அநியாயத்திற்கு விடை காணும் வகையில் தமது உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்ட தூய்மையான உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாக கல்முனை வடக்கு பிரதேச செயலகமாகும் செய்தியாக கொண்டுவரும் நாட்கள் தொலைவில் இல்லை


ஆர்.சயனொளிபவன் & TEAM

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |