Home » » பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல்-சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல்-சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்திய கருத்தாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார் 

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்டதாக வெற்றிக்களிப்பில் திளைத்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இனி நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு வந்திருந்தார். 

அது மட்டுமன்றி சர்வாதிகார குடும்ப ஆட்சி காரணமாக சிங்கள மக்கள் மத்தியிலும் ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற  எண்ணம் ஏற்பட்டிருந்தது. சர்வதேசத்திற்கும் மகிந்த தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக அவரைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டிய தேவை இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்துதான் ஆட்சி மாற்றத்திற்கு  வித்திட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆட்சி மாற்றத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பினால் புதிய அரசாங்கத்தின் ஊடாக எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மைத்திரி அரியணை ஏறியவுடன் அவசர அவசரமாக ரணிலைப் பிரதமராக நியமித்து நூறுநாள் வேலைத்திட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த நூறுநாள் வேலைத்திட்டத்திலேயே தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பின்னர் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நூறுநாட்களில் தீர்வை முன்வைப்பது சாத்தியமில்லை என்றும் பொதுத்தேர்தல் முடிந்தவுடன் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு வழிசமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரால் உறுதியளிக்கப்பட்டது. 

இதற்காகவே தமிழ் மக்களும் தமது ஏகோபித்த ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி 2010ஆம் ஆண்டைவிடவும் கூடுதலாக இரண்டு ஆசனங்களுடன் பதினாறு ஆசனங்களைப் பெறுவதற்கு வழியேற்படுத்தியிருந்தனர்.

இத்தகைய வலுவான பேரம் சக்தியைக் கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்தை தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியை மேற்கொள்வதை நோக்கி நகர்த்துவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் தவறிவிட்டார் என்பதே உண்மை. 

அரசியல் தீர்வை துருப்புச் சீட்டாக வைத்து, கடந்த அரசாங்கம் இழைத்திருந்ததாக நம்பப்படும் போர்க்குற்றங்கள்,  மனித உரிமைகள் மீறல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பின்தள்ளி ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச அரங்கில் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் கூட்டமைப்பின் தலைமை முன்னின்று பணியாற்றியது. அன்று இது குறித்து நாம் எமது கண்டனத்தையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தோம் என்பதை எமது மக்களுக்குத் தெரியும்.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் புதிய அரசியல் யாப்பிற்காக உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவினரின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய எத்தகைய முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படவில்லை என்று பிரசித்திபெற்ற சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

ஆகவே 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் மற்றும் 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற மத அடிப்படைவாத பயங்கரவாத தற்கொலை தாக்குதல் சம்பவங்களால் அரசியல் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்தும் கருத்துக்களாகும். இதற்கு முன்னர் இடைக்கால அறிக்கையில் சமஸ்டி ஒளிந்திருக்கிறது. வெளியில் கூறினால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்றெல்லாம் சொன்னவர்கள் இப்பொழுது இப்படிச் சொல்வதிலிருந்தே தேசிய இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் தீர்விற்கு இவர்கள் இதய சுத்தியுடன் தீவிரமாக முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

நூறுநாள் வேலைத்திட்டத்திலிருந்தே அரசியல் தீர்விற்கான முயற்சிகளை ஆரம்பிக்கப்போவதாகக் கூறியவர்கள் நான்காண்டுகள் கழிந்தபின்னர் காரணத்தைத் தேடுவது வேதனையான விடயம். இதனால்தான் நாம் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து கூட்டமைப்பு விலகிவிட்டது என்றும் இனியும் அவர்களின் மக்கள் விரோதப் போக்கிற்குத் துணைபோக முடியாது என்றும் தெரிவித்து அதிலிருந்து வெளியேறினோம்என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |