Advertisement

Responsive Advertisement

போனி பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்! கடும் கொந்தளிப்புடன் கடல்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான 'FANI' ('போனி') திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோமீற்றருக்கு அப்பால் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும், இந்த போனி சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பானி புயல் இன்றைய தினம் பிற்பகல் 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோமீற்றருக்கு அப்பால் நகரும்.
இந்த கட்டமைப்பு மேலும் விருத்தியடைந்து வடக்கு திசைக்கு அழுத்தத்தை கொடுத்த வகையில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கரையோரத்தை சென்றடையும்.
நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும் வானம் முகில் கூட்டத்துடன் காணப்படுவதுடன் கடும் காற்று மற்றும் கடும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக மத்திய மலை பிரதேசத்திலும், வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஊவா, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர்க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும்.
ஏனைய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம். இந்த சூறாவளி கட்டமைப்பு அழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதிலும் குறிப்பாக இன்றைய தினம் தொடக்கம் மே மாதம் மூன்றாம் திகதி வரையில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் வடமேற்கு திசையை நோக்கி மணித்தியாலத்துக்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் சாத்தியம் காணப்படுகிறது.
இதேவேளை காற்றின் வேகம் 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும்.
வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் மணித்தியாலத்துக்கு 120 - 130 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடும். அடிக்கடி காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 145 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்த பிரதேசத்தில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கை தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு பொது மக்கள், மற்றும் கடற் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments