ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகளை காரணம்காட்டி தேர்தல்களை ஒத்திவைப்பதானது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் படுகொலைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கடந்த வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டும், பதவிநாட்களை நீடிப்பு செய்தும் வருகின்ற தேர்தல்களை உடன் நடத்தியாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகின்ற அனித்தா என்கிற தேசிய சிங்கள வாரப் பத்திரிகையின் ஒருவருடப் பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் தம்பர அமிலதேரர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பல மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற படுகொலைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்று வினவினர்.
இந்த நேரத்தில் காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் தேர்தலுக்கு செல்வோம் என்று கூறுவதானது பொருத்தமானதாக அமையாது. எனினும் எந்த நிலைமையிலும் தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற தாக்கமாகும்.
எந்தவொரு பிரிவினரும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு இந்த சூழ்நிலையை பயன்படுத்த மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் தீவிரவாதத்திலும் சரி, தேர்தல்களை ஒத்திவைப்பதிலும்சரி ஜனநாயகமே பறிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல்களானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இருந்த போதிலும் இந்த நாட்டில் குண்டுகள் வெடிக்கின்ற நிலையிலும், படுகொலைகள் இடம்பெற்ற போதிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த சூழ்நிலையை காரணம்காட்டி மேலும் தேர்தலை தாமதப்படுத்தி, பதவிநாட்களை நீடிப்பதானது ஜனநாயகத்திற்கு ஏற்படுத்துகின்ற இழுக்காகும். ஜனநாயக நாட்டில் தேர்தல்களை ஒத்திவைப்பது இப்படியான குண்டுகளை வைத்து படுகொலை செய்வதற்கு சமமாகும்”
0 Comments