Home » » தீவிரவாத தாக்குதலுக்கு மைத்திரியே முழு பொறுப்பு! ஐ.எஸ் தீவிரவாதிகள் மக்களை கொன்று குவிப்பதற்கு தயங்காதவர்கள்!

தீவிரவாத தாக்குதலுக்கு மைத்திரியே முழு பொறுப்பு! ஐ.எஸ் தீவிரவாதிகள் மக்களை கொன்று குவிப்பதற்கு தயங்காதவர்கள்!


இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சையும் ஜனாதிபதி தம்வசம் எடுத்துக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதால், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு அவரே பொறுப்புக் கூற வேண்டும். ஏனைய அதிகாரிகளைப் பதவி விலகுங்கள் என்று கூறி அவர் தப்பிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தான் நாட்டில் இல்லாத நேரம் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதால் அதற்குப் பொறுப்பேற்றுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் பதவி விலக வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், பதில் பாதுகாப்பு அமைச்சரையும், பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சரையும் நியமிக்காது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி சென்றமை முதல் தவறாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் 2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய சர்வாதிகார ஆட்சியால் நாட்டின் பாதுகாப்புத் துறையும், சட்டத்துறையும் பின்னடைவைச் சந்தித்தன. அதுவே இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்துணிவு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. தற்போது நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கட்டிக்காத்துவந்த அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதைத்தார். அதேவேளை, இனங்களுக்கு இடையிலான மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கடந்த மாதம் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிதைத்துவிட்டார்கள்.

நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூறத் தேவையில்லை என்று நான் கூற வரவில்லை. அவர்கள் தரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. ஆனால், ஜனாதிபதி தரப்பில் மகா தவறு நடந்துள்ளது என தெிரிவித்தார்.

அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எதற்கும் அஞ்சாதவர்கள் மக்களைக் கொன்று குவிப்பதற்கு சிறிது கூட தயங்கமாட்டார்கள். அவர்களுக்கு இரக்க குணம் இல்லை. எனவே, அவர்களை இலங்கையில் முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |