Home » » புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்ததனால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்ததனால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு!

பொதுபல சேனா மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்தபடியினால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள பொதுபல சேனா, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் பயன்படுத்திய ஆயுதங்கள் மாயமாகியிருப்பதாகவும், அவை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டிருந்தனர்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாகல்கந்தே சுதத்த தேரர், தமது அமைப்பும், முன்னாள் போராளிகளும் விடுத்த முன்னெச்சரிக்கையை ஸ்ரீலங்கா அரசு உதாசீனம் செய்தபடியினால்தான் பாரிய அழிவை எதிர்கொண்டதாகவும் அதனால் இப்போதாவது தங்களுடைய கோரிக்கையின்படி அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாகல்கந்தே சுதத்த தேரர் - பொதுபல சேனா அமைப்பு, ‘சில மாதங்களுக்கு முன்னர் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் சிலர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெளிவான விடயமொன்றை முன்வைத்திருந்தார்கள். கருணா அம்மான் தலைமையிலான ஆயுததாரிகள் கிழக்கு மாகாணத்தில் கைவிட்டுச்சென்ற 5000-ற்றும் அதிகமான ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவை இப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் அமைப்புக்களிடமும் இருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.
ஆனால் இதனை ஆட்சியாளர்களும், பாதுகாப்பு பிரிவும் அதனை கணக்கில் எடுக்காததினால் இப்படியான விளைவுகள் ஏற்பட்டுள்ன, அதேபோல கோவில்களை உடைத்து பள்ளிகளை அமைப்பதாக ஹிஸ்புல்லா கூறியிருந்தார். ஆகவே ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு கிழக்கில் பாதுகாப்பை ஸ்திரப்படுத்த முடியுமா? தீவிரவாத செயற்பாட்டிற்கு முஸ்லிம் மக்களை தள்ளிவிட வேண்டுமென மேல் மாகாணத்தில் ஆளுநர் அசாத் சாலி இந்தியாவிற்கு சென்றிருந்தபோது கூறியிருந்தார். அவரை தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு மேல் மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா? தீவிரவாதிகளுக்கு தொழிற்சாலை வழங்கி வெற்றுத் தோட்டாக்களையும் வழங்கிய ரிஷாட் பதியூதீனை வர்த்தக அமைச்சராக தொடர்ந்தும் பதவிவகிக்கச் செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா? ஆகவே அந்த ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களின் சி.சி.ரி.வி கமராக்களை பரிசோதனை செய்து வந்துசென்ற அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். அவர்களுடைய தொலைபேசி அழைப்புக்களையும் விசாரிக்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம் இனவாதிகள் இருப்பதாக ஞானசார தேரர் கூறியபோதிலும் அவரை சிறைதள்ளினார்கள். எனவே குறைந்தபட்சம் பெயர் குறிப்பிட்டவர்களை கைது செய்யாவிட்டாலும் பதவிகளிலிருந்து நீக்கிவிட்டு விசாரணை செய்யும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |