Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் யார்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

ஈஸ்டர் ஞாயிறுக்கிழமை நடந்த தொடர் தாக்குதலில் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் தந்தை, இரண்டு சகோதரர்களே, கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சஹ்ரான் ஹசீமின் மனைவியின் சகோதரரான நியாஸ் ஷரீப் இது குறித்து செய்தி சேவை ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சாய்ந்தமருது துப்பாக்கிச் சண்டைக்கு முன்னர் சந்தேக நபர்கள் வெளியிட்ட வீடியோவில் இருக்கும் மூன்று பேர் சஹ்ரான் ஹசீமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் எனவும் இவர் கூறியுள்ளார்.
சஹினி ஹசீம், ரில்வான் ஹசீம் ஆகியோர் சஹ்ரான் ஹசீமின் சகோதரர்கள். அவரது தந்தையான மொஹமட் ஹசீமும் அந்த வீடியோவில் பேசியிருப்பதாக நியாஸ் ஷரீப் கூறியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட முயற்சித்த போது, இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கி சண்டடை நடைபெற்றதுடன் வீட்டுக்குள் தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்தனர்.
இந்த சம்பவத்தில் 6 ஆண்கள், மூன்று பெண்கள், 6 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமி மற்றும் பெண்ணை பாதுகாப்பு தரப்பினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். இவர்கள் சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
அப்துல் காதர் பாத்திமா சாதியா என்ற பெண்ணும் அவரது மகளான 5 வயதான மொஹமட் சஹ்ரான் ருசெய்னா ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல்களில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments