Home » » வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு புதிய நடைமுறைகள்!

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு புதிய நடைமுறைகள்!

 


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தர காத்திருப்போருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர்களுக்கும் வர்த்தக மாலுமிகளுக்கும் கடற்படை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இரட்டை பிரஜாவுரிமை உடையோருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இவை பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளின் கீழ் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட அனைவரும் நாட்டிற்கு வருகை தரும் போது, PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அல்லது ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

11 தொடக்கம் 14 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையெனின், 14 ஆவது நாள் நிறைவில் மத்திய நிலையத்திலிருந்து அவர்களை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த PCR பரிசோதனைகளில் COVID நோயாளராக அடையாளம் காணப்படுமிடத்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட இலங்கையர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் நாட்டிற்கு வருகைதரும் போது PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதன்போது, COVID தொற்று உறுதி செய்யப்படாதவிடத்து, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14 நாளின் நிறைவில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் COVID தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின், அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனுமதி பெற்று இராஜதந்திர மட்டத்தில் நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தரும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் அனுமதிக்கப்படும் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாதவிடத்து, 11 முதல் 14 நாட்களுக்குள் இரண்டாவது PCR பரிசோதனையை மேற்கொண்டு அதிலும் தொற்று உறுதிப்படுத்தப்படாதவிடத்து 14 ஆம் நாள் நிறைவில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வௌிநாட்டவர்களையும் அவர்கள் ஏற்றிக்கொண்ட தடுப்பூசி தொடர்பில் ஆராய்ந்து, முதலாவது PCR பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |