Home » » எமது இணையவழிக் கல்வி உயிரோட்டமானதா ? ஓர் பார்வை - கட்டுரை...!!

எமது இணையவழிக் கல்வி உயிரோட்டமானதா ? ஓர் பார்வை - கட்டுரை...!!


 சவால்கள் மிகுந்த இன்றைய காலப்பகுதியில் மாணவர்கள் தமது கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பல சவால்களை எதிர்கொள்ளுகின்றனர் என்பது கண்கூடு. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எதிர்பாராத நிலையில் அவசரமாக அறிமுகம் செய்யப்பட்ட இணையவழிக் கல்வி முறையில் தொழிநுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது? அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது? எவ்வாறு செயற்படுத்துவது? அதில் எவ்வாறு கலந்து கொள்வது? போன்றவை தொடர்பில் இன்றுவரையில் மாணவர்கள்> பெற்றோர்கள்> ஆசிரியர்கள் ஆகியோர் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


எமது ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுவாகவே வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கே பழக்கப்பட்டவர்களாவர். இதுவரை காலமும் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை பிள்ளை நேயமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பாகவே ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும் புதிய தொழிநுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவை நேரடி வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தப்பாடுடையதாகவே அமைந்திருந்தன.

கல்விப் புலத்திலே புதிய முறைமையோ அல்லது விடயங்களோ அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கான முறையான பயிற்சிகளும்> வசதி வாய்ப்புக்களும் முன்னதாகவே உரிய தரப்பினருக்கு வழங்கப்படுவது வழமையாகும். ஆனால் இணையவழி மூலமாக புதிய கற்றல் கற்பித்தல் முறையை மேற்கொள்ளும்போது அது தொடர்பாக முறையான செயன்முறைப் பயிற்சிகள் எதுவும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாது கணினி> அறிதிறன்பேசி (Smart Phone) சாதனங்கள் மற்றும் இணையதள சமிக்ஞை போன்ற வசதி வாய்ப்புக்கள் எதுவும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தாத நிலையில் காலத்தின் தேவை கருதி அவசர அவசரமாக இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தமை காரணமாக மாணவர்கள்> பெற்றோர்கள்> ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் எனப் பல தரப்பட்ட தரப்பினரும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளமையை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

'இணையவழிக் கற்றல் கற்பித்தல்' என்பது 'வகுப்பறைக் கற்றல் கற்பித்தல்' செயற்பாடுகளுகளிலிருந்து வேறுபட்டதாகும். இணையவழிக் கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளோ அனுபவங்களோ இல்லாத நிலையில் சூம் (Zoom) போன்ற செயலிகளை வினைத்திறனுடன் பயன்படுத்துதில் பல சவால்களை பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக இணையவழிக் கற்பித்தலின்போதும் நேரடி வகுப்பறைக் கற்பித்தல் உத்திகளே பெரும்பாலான ஆசிரியர்களிடம் பிரதிபலிக்கூடியதாக இருக்கின்றது. இதனால் மாணவர்கள் பாட விடயங்களைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர்.

ஆரம்பப் பிரிவு> இடைநிலைப் பிரிவு வகுப்புக்களைப் பொறுத்தமட்டில் ஒரு பாடவேளை 40 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே. ஏனெனில் குறித்ததொரு பிள்ளையால் ஒரு விடயத்தை 40 நிமிடங்களுக்குமேல் தொடர்ந்து கிரகிக்க முடியாது என்பதனாலாகும். இதனை கல்வியலாளர்கள்> உளவியலாளர்கள் போன்ற துறைசார் நிபுணர்களால் நீண்டகாலமாக பிள்ளைகள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகும். இது நேரடியான வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கே உரியதாகும்.

ஆனால் இணையவழிக் கற்றல் கற்பித்தலுக்கும் 40 நிமிடங்களுக்குமேல் நேரத்தை எடுத்துக்கொள்வது நடைமுறைக்குச் சாத்தியமானதா? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. ஒரு சிறிய தொழிநுட்ப சாதனத்தை நீண்டநேரம் உற்றுநோக்குவதென்பது உடல்> உள ரீதியான அழுத்தங்களைப் பிள்ளைகளிடத்து அதிகரிக்கச் செய்யலாம். ஆகவே ஒரு பாடவேளைக்கான நேரத்தை நடைமுறைக்கேற்றவாறு மட்டுப்படுத்தி உயிரோட்டமான கற்பித்தல் செயற்பாட்டை திட்டமிட்டு ஆசிரியர் மேற்கொள்ளும்போது பிள்ளையினது கற்றலானது நிச்சயம் வினைத்திறன் மிக்கதான அமையும்.

தினமும் தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்குமேல் தொலைக்காட்சியைப் பார்ப்பதனால் சிறார்களுக்கு நீண்டகால உடல்> உள ரீதியான அழுத்தங்கள் ஏற்படலாம் என சிறுவர் நோய்கள் தொடர்பான விஷேட மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிறுவர்கள் தொழிநுட்பம் தொடர்பான புதிய விடயங்களை அறிய முயல்பவர்கள் என்பதால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படும் ஆபத்தும் காணப்படுகின்றது. ஆகவே கணினி> கைபேசி போன்ற சாதனங்கள் குறித்தும் பெற்றோர் கூடிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் இவ்விஷேட மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சாதாரணமான பாடசாலை நாட்களில் பாடத்திட்டத்திற்கு அமைவாக குறித்த தவணைக்குரிய வாராந்த> நாளாந்த வகுப்பறைக் கற்பித்தலைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவது போன்று இணையவழிக் கற்பித்தலை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செயற்படுவது பிள்ளைகளிடத்து பாடவிடயத்தைத் திணிப்பதாகவே அமையும்.                                                            
இணையவழிக் கல்வி தொடர்பாக மாணவர் எதிர்கொள்ளும் சவால்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

· நேரடி வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் போன்று அடுத்தடுத்து 3-4 மணித்தியாலங்கள் பாடங்கள் தொடர்ந்து இடம்பெறுதல்.

· கணினி> கைபேசி போன்றவற்றின் திரைகளை நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பார்ப்பதனால் தலையிடி> கண்நோ> கழுத்து வலி> கழுத்துப் பிடிப்பு போன்ற உடல் உபாதைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாதல்.

· முழுமையாக விரிவுரை முறையில் கற்பித்தல்.

· வேகமாக பாடவிடயத்தை கற்பித்து முடித்தல்.

· காண்பிக்கப்படும் படங்கள் தெளிவின்றிக் காணப்படுதல்.

· வெண்பலகையில் எழுதப்படும் விடயங்கள் தெளிவாகத் தெரியாமை.

· ஆசிரியர் போதிய வெளிச்சமில்லாத இடங்களில் இருந்து கற்பித்தல்.

· வட்ஸ்அப் (WhatsApp) மென்பொருளுடாக அதிகளவு பாடக்குறிப்புக்களை ஆசிரியர்கள் வழங்குவதனால் கைபேசியைப் பார்த்து குறிப்புப் புத்தகத்தில் எழுதுவதில் சிரமப்படல்.

· கற்பித்துக் கொண்டிருக்கும்போது சில சமயங்களில் ஆசிரியர் அமைதியாக இருத்தல்.

· மாணவர் வரவு பதிதலுக்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளுதல்;.

இவ்வாறான காரணங்களால் இணையவழிக் கற்றலில் வெறுப்படைந்துள்ளதாகவும் பலர் இணையவழிக் கற்றலைத் தவிர்ப்பதாகவும் மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களில் பெரும்பாலானோர் கணினி> கைபேசி ஆகியவற்றின் ஒலியை காதொலிக்கருவி (Earphone) சாதனம் மூலமே கேட்கின்றனர். எமது காதுகளால் 65 டெசிபெல் (Decibel) வரையிலேயே ஒரு ஒலியைத் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் காதொலிக்கருவியின் (Earphone) ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். காதொலிக்கருவியை (Earphone) அதிக நேரம் பயன்படுத்துவதனால் நமது காதில் உள்ள கலங்கள் சிதைவடைவதுடன் பக்டீரியா தொற்றுக்களும் ஏற்படலாம். இதன் காரணமாக கேட்கும் திறனும் அற்றுப்போகலாம். மேலும் சிந்திக்கும் திறன்> ஞாபக சக்தி போன்றனவும் குறைவடையலாம். காதொலிக்கருவிக்கு (Earphone) அடிமையானால் காதொலிக்கருவியைக் Earphone) காதிலிருந்து அகற்றிய பின்பும் பாடல்கள் ஒலிப்பது போலவும் யாராவது பேசுவது போலவும் இருக்கும். எனவே காதொலிக்கருவி (Earphone) சாதனம் மூலம் கேட்பதைத் தவிர்த்து Out Speaker இல் கேட்பதே பாதுகாப்பானதாகும்.

இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின்போது மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள உதவும் சில உத்திகளையும் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

· தொடர்ச்சியாக நீண்டநேரம் இணையவழிக் கற்றலில் ஈடுபடும்போது உடல் உபாதைகளும் அதன் காரணமாக மன அழுத்தமும் ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் உடன் ஓய்வெடுப்பதே சிறந்தது.

· உடல் பாதிப்புக்களையோ> மன அழுத்தத்தையோ உணரும்போது அவற்றிலிருந்து விடுபட கீழ்க்குறிப்பிட்ட செயற்பாடுகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ மேற்கொள்ளலாம்.

o குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல்.

o பிடித்தமானவருடன் சற்றுநேரம் பேசுதல்.

o பிடித்தமான பாடலைக் கேட்டு இரசித்தல் அல்லது பாடுதல்.

o நகைச்சுவைக் காட்சிகளை இரசித்தல்.

o வீட்டிலுள்ள செல்லப் பிராணியுடன் சிறிது பொழுதைக் கழித்தல்.

o குட்டித்தூக்கம் போட்டு எழுதல்.

o உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு செயற்பாட்டில் ஈடுபடுதல்.

· தொடர்ந்து கற்றலில் ஈடுபடமுடியாத சந்தர்ப்பங்களில் கைபேசியிலுள்ள Screen Recorder எனும் செயலியைப் பயன்படுத்தி கானொலி காட்சிப் பதிவு (Video Recording) செய்து பின்னர் அதனைப் பார்வையிடுதல்.

· கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்தும்போது பிள்ளையின் கண் மட்டத்திற்குச் சமமான உயரத்தில் அவற்றை வைத்துக் கொள்ளவேண்டும். கணினிக்கும் பிள்ளைக்குமான இடைவெளியை 20' அங்குலமாகப் பேணுவது நலம்.

· கணினி> கைபேசி ஆகியவற்றின் ஒலியை காதொலிக்கருவி (Earphone) மூலம் கேட்பதைத் தவிர்த்து Out Speaker இல் கேட்டல்.

· சூம் (Zoom) போன்ற மென்பொருள்களுடாகக் கற்கும்போது முக்கியமான விடயங்களை Screen Shot எடுத்து வையுங்கள். கணினியிலும் Snipping Tool இன் உதவியினுடன் இதனைச் செய்யமுடியும். கணினியிலுள்ள தேடுதலில் (Search) Snipping Tool என தட்டச்சு (Type) செய்வதனூடாக இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

· வட்ஸ்அப் (WhatsApp) மென்பொருளுடாக அதிகளவு பாடக்குறிப்புக்கள் ஆசிரியர்களினால் தட்டச்சுப் பிரதியாகவோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ வழங்கப்படுமிடத்து மாணவர்கள் தங்களது பெற்றோர்> சகோதரர் அல்லது மற்றொருவரின் உதவியைப் பெறலாம். அவர் கைபேசியிலுள்ள குறிப்புக்களை பார்த்து வாசிக்க பிள்ளை அக்குறிப்புக்களைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொள்ளுதல்.

· நாளாந்தம் சராசரி 7 மணி நேரம் நன்கு தூங்கி எழுதல்.

· இணையவழிக் கற்றலை விருப்புடன் மேற்கொள்ளவும் இலகுபடுத்தவும் நாளாந்த நேரசூசி ஒன்றை ஒழுங்கமைத்துக் கொள்ளுதல் சிறந்தது. காலையில் பிள்ளை தூக்கத்திலிருந்து எழுவது முதல் அன்றிரவு படுக்கைக்குச் செல்லும்வரையில் அவர்களது அனைத்துச் செயற்பாடுகளையும் நேரத்தின் அடிப்படையில் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். . இதன்போது விளையாட்டு> உடற்பயிற்சி> பயன்தரு பொழுதுபோக்கு போன்றவற்றிற்கான நேரங்களையும் ஒதுக்கிக்கொள்ளுதல் அவசியமாகும்.

இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது உயிரோட்டமானதும், வினைத்திறன்மிக்கதும், பிள்ளை நேயமானதுமாக அமையும் பட்சத்திலேயே மாணவர்களது முழுமையான பங்குபற்றுதலையும் அவர்களது அடைவு மட்டத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என நம்புகின்றேன். அந்தவகையில் ஆசிரியர்கள் இணையவழிக் கற்பித்தல் செயற்பாட்டைத் திட்டமிடும்போது பின்வரும் உத்திகளைப் பற்றியும் சற்று சிந்தியுங்கள்.

· மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் விடயத்தை எளிமையாகப் புரிந்தகொள்ளும் வகையிலும் கற்பித்தலானது அமைய வேண்டும்.

· அவ்வப்போது மாணவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல். இதன் மூலம் மாணவருக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்குவதற்கும் அவர்களது பங்களிப்பு> ஈடுபாடு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்து கொள்ளவும் மதிப்பீட்டினை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

· கலந்துரையாடல்களின்போது மாணவர் பெயர்களைக் கூறி அழைப்பதனூடாக அவர்களது கவனத்தையும் ஈர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்களது அநாவசியமான செயற்பாடுகளையும் வெளியேறுதலையும் தடுக்க முடியும்.

· இணையவழிக் கற்றல் கற்பித்தலுக்கான நேரசூசியை தயாரிக்கும்போது தொடர்ச்சியாக அல்லாது குறைந்தது 15 நிமிட இடைவேளையாவது ஒவ்வொரு பாடத்திற்குமிடையே இருக்குமாறு அமைத்துக்கொள்ளலாம். அல்லது பிள்ளைகளுடன் கலந்துரையாடி இவ் இடைவேளையை அமைத்துக்கொள்வது மிகச்சிறந்தது.

· இணையவழிக் கற்றல் கற்பித்தலின்போது தேவையான இடங்களில் அசையும் படங்கள் (Animation Pictures)> புகைப்படங்கள்> வீடியோக்கள்> பவர்பொயின்ட் (PowerPoint)> சூம் வெண்பலகை போன்ற சாதனங்களைப் பயன்படுத்துதல்.

· சில பாடங்களைப் பொறுத்தமட்டில் செயல்முறை பிரதானமானது. ஆகவே அவ்வப்போது அவற்றை ஆசிரியர்கள் செய்து காட்டுவதுடன் முடியுமானால் முன்னறிவித்தலுடன் செயல்முறைக்குத் தேவையான பொருட்களை கொணரச் செய்து மாணவர்களையும் செயல்முறையில் ஈடுபடுத்துதல்.

· ஆசிரியர்கள் தங்கள் வீடியோவை நிறுத்தி (Off) வைக்காது முழுநேரமும் இயங்க (On) வைத்தே கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

· குறித்த பாட அலகு நிறைவுபெற்றதும் அடுத்த வகுப்பில் மாணவர்களைக் குழுக்களாக்கி வினா விடைப் போட்டிகளை நடாத்தி அவர்களுக்குப் புள்ளிகளை வழங்கலாம். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இணையவழிக் கற்றலுக்கான மாணவர்களது ஆர்வத்தைத் தூண்டமுடியும்.

· முழுமையான விரிவுரை முறைக் கற்பித்தலைத் தவிர்த்தல்.

· வேகமாக அன்றி நிதானமாகவும் தெளிவாகவும் பாடவிடயத்தைக் கற்பித்தல்.

· பெரிய அளவிலான தெளிவான படங்களைப் பயன்படுத்துதல்.

· வெண்பலகையில் தெளிவாகத் தெரியக்கூடியவாறு எழுதுதல்.

· போதிய வெளிச்சமுள்ள இடங்களில் இருந்து கற்பித்தல்.

· வட்ஸ்அப் (WhatsApp) மென்பொருளுடாக அளவிற்கதிகமான பாடக்குறிப்புக்கள் வழங்குவதைத் தவிர்த்தல்

· மாணவர் மன்றம் போன்ற இணைபாடவிதானச் செயற்பாடுகளையும் இணையவழி ஊடாக முன்னெடுத்தல். இதனால் மாணவர்கள் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்த அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதுடன் மன அழுத்தங்களிலிருந்து அவர்கள் விடுபடவும் வழியேற்படும்.

· நிறைவுபெற்ற இணையவழி வகுப்புக்களை வீடியோ வடிவில் மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் புரியாதவற்றைத் திரும்பப் பார்த்துப் புரிந்துகொள்ள அது உதவும்.

வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலரிடம் கணினி> அறிதிறன்பேசி (Smart phone) போன்ற சாதனங்கள் இல்லாமையினால் இணையவழிக் கற்றலை மேற்கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர். மேலும் தொழிநுட்ப சாதனங்கள் இருந்தும் இணையதள சமிக்ஞை கிடைக்காத காரணத்தினாலும் பல மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனை நிவர்த்திசெய்யும் வகையில் கல்வி அமைச்சு தரவுக் (Data) கட்டணமின்றி வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி வசதியை வழங்கும் முறையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. மேலும் இணையதள சமிக்ஞை கிடைக்காத இடங்களில் இணைய மத்திய நிலையங்களை கிராம மட்டத்தில் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
                                                    

இன்றைய அசாதாரண சூழலில் இணையவழிக் கல்வி அவசியமானதாகும். இணையவழியில் பல்வேறு தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாட விடயங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக வினைத்திறனுடன் புரியவைக்க முடியும். எனினும் இணையவழிக் கல்வியை நேரடி வகுப்புக் கல்விக்கு இணையாகக் கொள்ளமுடியாது. இது ஒரு தற்காலிகத் தீர்வேயாகும். கிராமப்புற ஏழை மாணவர்கள் இணையவழியில் கற்க முடியாத நிலையுள்ளதால் கல்வியில் ஏற்றத்தாழ்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே இணையவழிக் கல்வியானது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நாம் வழிசமைக்க வேண்டும். இதுவே எமது கடமையுமாகும்.
சிந்திப்போம்! செயற்படுவோம்!

முத்துராஜா புவிராஜா
(முதன்மை உளவளத்துணையாளர்)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |