Home » » ஆசிரியர் போராட்டம் உணர்த்தியது என்ன? 'ஆசிரியர்கள் மிரண்டால் நாடு தாங்காது'

ஆசிரியர் போராட்டம் உணர்த்தியது என்ன? 'ஆசிரியர்கள் மிரண்டால் நாடு தாங்காது'




ஆசிரியர் போராட்டம் உணர்த்தியது என்ன?
'ஆசிரியர்கள் மிரண்டால் நாடு தாங்காது'
=======================================
ஏ. எல். முஹம்மட் முக்தார்

இலங்கை கல்வி நிருவாக சேவை
இலங்கையின் அரச தொழிற்படையில் மிகக் கூடுதலான எண்ணிக்கையினர் ஆசிரியர்களாவர். சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படுபவர்களும் ஆசிரியர்களுமாவர். அவ்வாறான ஆசிரியர்களின் தொழில்ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தீர்த்து வைப்பதில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் முனைப்புக் காட்டுவதாக இல்லையென்பது ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.
இலங்கையில் ஆசிரியர் சேவை என்றொரு சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு பட்டதாரி ஆசிரியர், பயிற்றப்பட்ட ஆசிரியர், தராதரப்பத்திரமுள்ள ஆசிரியர், தராதரப்பத்திர மற்ற ஆசிரியர், டிப்ளோமா ஆசிரியர் என பல்வேறு வகைகளுக்குள் ஆசிரியர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் 1994ம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவை உருவாக்கப்பட்டு உதவி ஆசிரியர் என்ற பதம் நீக்கப்பட்டு ஆசிரியர் சேவையானது தரம் 1, தரம் 2-II, தரம் 2-I, தரம் 3-I தரம் 3-II என்ற அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு அதற்கான சம்பளத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு, காலப் போக்கில் இலங்கை ஆசிரியர் சேவை நாடாளாவிய சேவைகளில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்படுமென்ற வாக்குறுதியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் இவ்வாக்குறுதி இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இலங்கை ஆசிரியர் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய உரிய கௌரவம் புதிய ஆசிரியர் சேவையில் வழங்கப்படவில்லையெனவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகரித்த சம்பளத் திட்டம் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தைகளையடுத்து பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டது.
பொதுவாகவே நாட்டில் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்கள் இடம்பெற்றபோதும் அதிபர், ஆசிரியர்கள் இவ்வாறான தொழிற்சங்க போராட்டங்களில் அக்கறையுடன் ஈடுபடுவதில்லை. இதற்கான காரணம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை விரும்பாத தாராள மனப்பான்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
‘இளகிய இரும்பைத்தான் தூக்கி அடிப்பார்கள்’ என்ற கிராமத்து பழமொழியைக் கூற கேள்வி பட்டிருக்கின்றோம். ஆசிரியர்களின், அதிபர்களின் இவ் இளகிய மனப்பான்மையை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் ஏனைய அரசதுறையினரின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கி சிந்தித்து வைக்கின்ற தகைமையை அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சார் பிரச்சினைகளின் அக்கறை இன்றி செயற்படுகின்ற தன்மையையும் அவர்களின் தொழிற்சங்க போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசிவிடுகின்ற தன்மையையும் அண்மைக்காலத்தில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறானதொரு போராட்டமே கடந்த 13ம் திகதி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்ற தொழிற்சங்கமொன்றால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. அதிபர், ஆசிரியர்கள் சுகவீன லீவு போராட்டம் என ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சங்கப் போராட்டம் அண்மைக்காலத்தில் கல்வித்துறை தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தொழிற்சங்க போராட்டமாக கொள்ளப்படுகிறது.
கல்வித்துறையில் உள்ள 30 தொழிற்சங்கங்கள் அரசியல் பேதமின்றி மேற்படி போராட்டத்திற்கு ஆதரவளித்தன. இப்போராட்டம் காரணமாக நாட்டில் தொண்ணூறு வீதமான பாடசாலைகள் ஸ்தம்பித்துப் போயின.
வழமை போன்று கல்வியமைச்சு மேற்படி போராட்டத்திற்கு அரசியல் சாயம்பூச முற்பட்ட போதும் போராட்டத்தின் வெற்றியை அறிந்து கொண்டதும் சற்று அடக்கியே வாசித்தது. இப்போராட்டம் காரணமாக 02 கோடியே 58 இலட்சம் கற்றல், கற்பித்தல் மணித்தியாலங்கள் இழக்கப்பட்டு விட்டதாகவும், 2016ம்ஆண்டு 16120 ரூபா காணப்பட்ட சம்பளம் தற்போது 33,330 ரூபாவாக ஆசிரியர்களுக்கு அதிகரித்து வழங்கப்படுவதாகவும் அறிக்கை விட்டதுடன் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் சம்பள ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும் கூறி தன்னை சமாதானப்படுத்திக்கொண்டது.
கடந்த 13ம் திகதி அதிபர், ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுகவீன லீவு தீர்வுப் போராட்டம் 1975ம் ஆண்டு கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கல்வியமைச்சராக கடமையாற்றிய போது ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட சமசம்பளப் போராட்டத்தை ஒத்திருந்ததாகவும் மேற்படி போராட்டம் அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்தது போன்று இன்றைய அரசாங்கத்தையும் ஒரு கணம் திக்கு முக்காட வைத்ததாகவும் முன்னணி தொழிற்சங்கவாதிகள் சிலர் கூறக் கேட்கக் கூடியதாகவிருந்தது.
கடந்த 13ம் திகதிய போராட்டம் பின்வரும் கோணங்களை முன்னிறுத்தியதாகக் காணப்பட்டது.
1. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு,
2. இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை என்பவற்றை நாடளாவிய சேவையாக மாற்று
3. இலங்கை ஆசிரியர் சேவைக்கான சேவை பிரமாணக் குறிப்பு திருத்தத்தை உடனடியாக வெளியிடு.
4. ஆசிரியர் சேவை, அதிபர் சேவை முதலாம் தர உத்தியோகத்தர்களுககு தீர்வையற்ற வாகன இறக்குமதி உரிமையை வழங்கு,
5. தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு இடமளி.
6. பெப்ரவரி 28ம் திகதிய தாக்குதலுக்கு நீதி வழங்கு.
தெற்காசிய நாடுகளில் அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், சமசம்பளத்தில் மிகவும் குறைந்த சமசம்பளத்தை இலங்கை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர். இலரங்கையுடன் ஒப்பிடுகையில் வறிய நாடான பங்களாதேஷில் கூட ஆசிரியர், அதிபர்களுக்கு இலங்கையை விட கூடிய சம்பளம் வழங்கப்படுகிறது.
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டில் மிகக் கூடிய தாக்கம் ஏற்படுத்தப்பட்டது. 02/07 சுற்றறிக்கை மூலம் ஆகும். இச்சுற்றறிக்கைகக்கு மூல காரணமாக அமைந்தது பி. சி. பெரேரா சம்பள அறிக்கையாகும். இலங்கை ஆசிரியர் சேவை 1995ல் உருவாக்கப்பட்ட பொது ஆசிரியர்கள் அடைந்த சந்தோசம், பி. சி. பெரேரா சம்பள அறிக்கை மூலம் இல்லாமல் செய்யப்பட்டது.
1977ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சம்பள முரண்பாடானது பொது நிருவாக சுற்றுநிருபம் 15/2003, 09/2014, 06/2006, (XII) 03/2016 ஆகிய சம்பள மாற்ற சுற்றறிக்கைகள் மூலம் கூர்மையடைந்தது. 06/2006, (XII) ம் இலக்க சுற்றறிக்கை மூலம் அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முப்பது மாத கால சம்பள நிலுவை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இச்சம்பள மாற்றம் மூலம் அதிபர், ஆசிரியர்கள் ரூபா 25,000 முதல் 90,000 வரை இழக்க வேண்டியேற்பட்டது.
ஆசிரியர், அதிபர்களுக்கு சம்பள மாற்றத்தில் கிடைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களால் SC/FR /282/2008 ம் இல. அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கில் அதிபர், ஆசிரியர்களில் சம சம்பளங்களை மீளாய்வு செய்யுமாறு உயர் நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் அத்தீர்ப்பு அப்போதைய அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படவில்லை.
பொதுவாக அரசாங்க நிருவாக கொள்ளைகளையே சம்பள மாற்றங்களையோ இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தமது சேவையின் அநீதங்களையும் தரத்தையும், கௌரவித்து காட்டிகொள்ளும் வகையில் செயற்பட்டு ஏனைய சேவைகளை மட்டந்தட்டி பின்னடைவான சேவைகளாக ஏனையவற்றை காண்கின்ற செயற்பாடு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது இவ்வாறான செயற்பாடுகளுக்கு மேலிடத்து ஆசிர்வாதமும் வழங்கப்படுகிறது. அதிபர், ஆசிரியர்களின் சேவை மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளால் தீர்வு காணப்பட முடியாது. ஆனால் நியமிக்கப்படும் குழுக்களில் கல்வித்துறை சார்ந்தோர் பங்குபற்ற அனுமதிக்காமை காரணமாக சம்பள முரண்பாடுகளும், சேவை முரண்பாடுகளும் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இதனை யதார்த்த ரீதியாக கல்வி அமைச்சோ, அமைச்சரவையோ இதுவரை அணுகவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
இலங்கை நிருவாக சேவைக்கு சாதாரண பட்டதாரி ஒருவர் போட்டிப்பரீட்சை மூலம் இணைந்து கொள்ள முடியும். ஆனால் சில சேவைகளுக்கு சிறப்பு பட்டதாரிகள், கெளரவ பட்டதாரிகள் மட்டுமே இணைந்து கொள்ள முடியும். இவை நாடளாவிய ரீதியில் ஒன்றுக்கொன்று சமாந்தர சேவைகளாக கணிக்கப்படுகின்றன. ஆனால் அமைச்சுக்களிலோ, திணைக்களங்களிலோ கடமைக்காக நியமிக்கப்படும் போது சாதாரண பட்டதாரிகளாக இலங்கை நிருவாக சேவைக்கு இணைந்து கொண்டோர்களின் கீழ் சிறப்புப்பட்டம் பெற்ற, பல்கலைக்கழக வகுப்பு சித்தி பெற்று அகில இலங்கை சேவைகளில் இணைந்து கொண்டோர் இரண்டாந்தர பதவி நிலை உத்தியோகத்தர்களாக கடமையாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிலவுவதனை அவதானிக்கலாம்.
அதேபோன்று இலங்கை நிருவாக சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படும் ஒருவர் 12 ஆண்டுகளில் அச்சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்படுகிறார். ஆனால் கல்வித்துறையில் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு நியமனம் பெறும் ஒருவர் 15-20 ஆண்டுகளாகியும் அச்சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வுகளை பெறமுடியாத நிலையில் காலந்தள்ள வேண்டிய நிலையேற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன?
துறைசார்ந்தவர்களின் பிரச்சினைகளை அத்துறை சார்ந்தோர் கையாண்டால் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இலகுவாகக் காண முடியும். அதற்கு கல்வித்துறை மட்டும் விதிவிலக்கல்ல.
தற்போது நடைமுறையில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவைக்காக பிரமாணக்குறிப்பு 2014ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் விடயத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் திருத்தம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள், இணக்கப்பாடுகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டன. ஆனால் கல்வி அமைச்சில் உள்ள ஆசிரியர் பிரச்சினை, பதவி வழங்கல் குறைபாடுகள் பற்றி அடிப்படை அறிவற்ற அதிகாரிகளால் இழுத்தடிக்கப்படுகின்றன. அப்பிரச்சினைகளை கல்வியமைச்சில் உள்ள கல்விப்பணிப்பாளர்களிடம் கையளித்து பிரச்சினைகளை இலகுவாக்க ஆயத்தம் ஏதும் இல்லை. இதற்கு எதிராகவும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இன்று நாட்டில் 10,194 அரச பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் 2,41,000 அதிபர், ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர். சுமார் 361 தேசிய பாடசலைகள் இயங்கிவருகின்றன. ஏனைய 9833 பாடசாலைகள் மாகாணப் பாடசாலைகள் உள்ளன. ஆனால் மாகாணத்திற்கு மாகாணம் ஆசிரியர்கள் வெவ்வேறு வகையான நிர்வாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை அல்லது அறிவுறுத்தலை வெளியிட்டுவிட்டு தப்பித்துக்கொள்ள முற்படுகிறது.
ஆசிரியர்களின் பொதுப் பிரச்சினைகளை எதிர்ப்பதற்கு கல்வி அமைச்சு மட்டத்தில் பொது அமைப்பொன்று இல்லாமை காரணமாக பல நிருவாக சிக்கல்கள் அன்றாடம் ஏற்பட்ட வண்ணமுள்ளன.
நாட்டுக்கு தேவையான சகல புத்திஜீவிகளையும், தொழிற்சார் வல்லுனர்களையும், நிருவாகிகளையும் உருவாக்கிவிடும் மகோன்னத பணியினை நிறைவேற்றி வருபவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் என்பதனால் ஆசிரியர்களின் தொழிற்சார், சம்பளம்சார், பெருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கான துறைசார் நிபுணர்களைக் கொண்ட உயர்மட்ட குழுவொன்றை அமைத்துத் தீர்வுகாண கல்வி அமைச்சு முன்வர வேண்டும்.
“சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பது போல் ஆசிரியர்கள் மிரண்டால் முழு நாடும் பாதிக்கும். அதன்விளைவு பலவருடங்களுக்கு நீடிக்கும் என்பதை உணர வேண்டும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |