(ஞானம்) மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த திருமதி ராதா ஞானரெத்தினம் என்பவர் 2020 ஆம் ஆண்டிற்குரிய “அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்” நடாத்திய சைவப்புலவர் பரீட்சையில் இரண்டாம் பிரிவில் சித்தி அடைந்துள்ளார். இவர் குழந்தைவேல்குருக்கள் மாணிக்கவாசகர்- ஞானம்மா அவர்களின் புதல்வியும் இளஞ்சைவப்புலவர் கணபதிப்பிள்ளை- சந்திரசோதி அவர்களின் மருமகளும் மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம் என்பவரின் துணைவியாரும் அனுசேஷனின் தாயுமான இவர் குருக்கள்மடத்தின் முதலாவது பெண் சைவப்புலவர் என்பதும் சிறப்பம்சமாகும்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணி (தமிழ் சிறப்பு) பட்டதாரியான இவர் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்ட மேற் கல்வி டிப்ளோமாவையும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் முதுகலைமாணி பட்டத்தையும்(MATE) பூர்த்தி செய்துள்ளார். கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக பல வருடங்கள் கடமையாற்றி பின்னர் இவர், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகவும் மட்டக்களப்பு ஆசிரியர் வள நிலைய வளவாளராகவும் கடமையாற்றியவராவார். அத்துடன் திறந்த பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்கல்வி டிப்ளோமா பாடநெறியின் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
“மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள்”எனும் லயன் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரான இவர் சிறந்த சமயச் சொற்பொழிவாளரும் பல சமூக சேவையாளருமாவார். அத்துடன் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கவிதை ,கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளில் பல பரிசில்களையும் பதக்கங்களையும் பெற்றவரான இவர்; “அகில இலங்கை சமாதான நீதவான்” என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments