Home » » முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதி!

முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதி!

வவுணதீவு பொலிஸார் படுகொலை சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிப்புரையை சட்ட மாஅதிபருக்கு விரைவில் விடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டனர். 
இக்கொலை சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் முன்னாள் போராளி அஜந்தன் மீது சுமத்தப்பட்டிருந்ததுடன், அவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சாரதி பொலிஸாரிடம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தக் கொலைச் சம்பவத்தை செய்ததாக கூறியுள்ளார். 
அதன் பிரகாரம் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி அஜந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அஜந்தனை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்ட மாஅதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 
ஜனாதிபதியின் இந்த உத்தரவாதம் தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |