Home » » வில்பத்து காட்டில் முஸ்ஸிம் இளைஞர்கள் பயிற்சி! ஏன் அங்கு கூடினார்கள்?

வில்பத்து காட்டில் முஸ்ஸிம் இளைஞர்கள் பயிற்சி! ஏன் அங்கு கூடினார்கள்?

மக்களையும், நாட்டையும் நேசிக்காத தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாத அமைப்பு தற்கொலைக் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மூலம் குறிப்பாக தமிழ் கத்தோலிக்க மக்கள் அவர்களின் இலக்காக அமைந்துள்ளது.
மனிதர்களை அழிக்க வேண்டும் என்ற கொடூர சிந்தனையோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவம்.
என்னைப் பொறுத்தமட்டில் முஸ்ஸிம் தீவிரவாத அமைப்புக்கள் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்பு 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களுடைய ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மனித வெடி குண்டுகளாக மக்கள் மத்தியில் வெடித்து மக்களை கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு உண்மையில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். இராணுவத்தினுடைய புலனாய்வு மற்றும் நாட்டினுடைய புலனாய்வுப் பிரிவினுடைய பலவீனம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மக்களையும், நாட்டையும் நேசிக்காத தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்ற அரசியல்வாதிகள் ஒரு சில பிழைகளை செய்கின்ற போது அரசாங்கம் அதனை தட்டிக் கேட்பதில்லை.
தட்டிக் கேட்காமல் இருந்ததன் காரணத்தினாலேயே இன்றைக்கு இவ்வளவு படுகொலைகள் இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கம் வெட்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் பாடசாலையை கூட நடத்த முடியாத நிலையில் இந்த நாட்டை அரசாங்கம் வைத்துள்ளது என்பது மிகப்பெரிய கேவலமான ஒரு செயல். அந்தளவுக்கு அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைவரையும் சேர்த்தே இதனை தெரிவிக்கின்றேன். முஸ்ஸிம் தீவிரவாத அமைப்பொன்று நீண்ட நாட்களாகவே இலங்கையில் செயல்பட்டு வந்துள்ளது.
குறித்த செயல்பாட்டிற்கு இலங்கையில் நிச்சயமாக அரசியல் பலம் தேவை. அந்த அரசியல் பலத்தின் மூலமே பயங்கரவாதிகள் வளர்ந்தார்கள்.
அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று அரசியல் ரீதியான அரசியல் தலைவர்களை அல்லது அமைச்சர்களை இராணுவ புலனாய்வு அல்லது தேசிய பாதுகாப்பு சபை விசாரணைகளை மேற்கொள்ளுமா? என்பதில் சந்தேகம் உள்ளது.
இன்று மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். இதற்கு காரணம் தற்போதைய அரசாங்கம். தவறு செய்கின்றவர்களை தொடர்ந்தும் பதவிகளில் வைத்திருப்பதும், அரசாங்கத்தை நடத்தவதற்காக அவர்களை ஊக்குவிக்கின்றமையும் தான் இன்று இவ்வளவு படுகொலைகள் நடப்பதற்கும் காரணமாக உள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புத்தளம் - மன்னார் பிரதான வீதி வில்பத்து காட்டில் முஸ்ஸிம் இளைஞர்கள் பயிற்சி எடுப்பதாக சிங்கள மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் பொலிஸார் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது சி4 என அழைக்கப்படும் வெடி மருந்து நூறு கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நூறு கிலோ சி4 வெடி மருந்து கைப்பற்றப்பட்டும் ஏன் விசாரணைகளை புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவில்லை? ஒப்படைக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன?
இதனை எந்த அரசியல்வாதி தடுத்து நிறுத்தியது? இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் கபீர் ஹாசிம், இதனை தானே பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
அரசியல்வாதிகளின் தலையீட்டால் குறித்த விடயம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சி4 என அழைக்கப்படும் வெடி மருந்து நூறு கிலோகிராமுடன் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்களை சிறை வைத்து, ஏன் அங்கு கூடினார்கள்? என்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தால் இந்த படுகொலைகளை தடுத்திருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.






Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |