Home » » சர்வதேச குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் - மைத்திரிக்கு எச்சரிக்கை!

சர்வதேச குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் - மைத்திரிக்கு எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுக்கும் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதற்கு, மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தயாராக இருக்குமாறும் எச்சரித்துள்ளன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் மனித உரிமை பேரழிவு என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்சிற்கான ஆராய்ச்சியாளர் கார்லொஸ் கொன்டே, உலகின் எந்த நாடும் இதனை பின்பற்றக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்தை வெறுமனே குற்றச்செயலாக மாத்திரம் கருதி முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள்களிற்கு எதிரான யுத்தங்களால் அவற்றிற்கு தீர்வை காணமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் சொல்லொண துயரத்தையும்,சட்டத்தின் ஆட்சியின் அழிவையும் மனித உரிமைகளில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை பின்பற்றுவது குறித்து சிறிசேன உறுதியாக உள்ளார் என்றால், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என பிலிப்பைன்ஸின் மனித உரிமை அமைப்பான ஐ டிவென்ட் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டாம் என ஆசிய நாடுகளின் தலைவர்களிற்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம் என ஐ டிபென்ட் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்திற்கு ஜனநாயக கட்டமைப்புகளை அழிக்காத மாறாக பலப்படுத்தும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி மூலம் தீர்வை காண முயல வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |