Home » » சுரேஸ் அனந்தி சசிதரனின் செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது

சுரேஸ் அனந்தி சசிதரனின் செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது

வவுனியாவில் ஞாயிறன்று காலை கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அந்தக் கட்சியின் மகளிர் அணி துணைச்செயலாளரும் வடமாகாணசபை உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்குத் துணை போயிருந்தனர் என குற்றம் சுமத்தியிருக்கின்றது.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரையிலும் இவர்கள் இருவரும் கவலை தெரிவிக்காமல் இருப்பது, இந்தச் செயல் தொடர்பான அவர்களின் மனப்பூர்வமான ஈடுபாட்டையே காட்டியிருப்பதாகவும், அவர்களின் இந்தச் செயற்பாடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இன்று காலை முதல் மாலை வரையில் சுமார் எட்டு மணித்தியாலங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
காலை பத்தரை மணிக்கு ஆரம்பமாகி மாலை ஆறேகால் மணிவரையில் வவுனியா வைரவப்புளியங்குளம் லக்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக கட்சியின் பெருந்தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவிப்பார் என சம்பந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததையடுத்து செயலாளர் நாயகம் துரைராஜசிங்கம் கூட்டத் தீர்மானங்களை செய்தியாளர்களுக்கு வாசித்தார்.
அந்தத் தீர்மானங்களின் முழு விபரம் வருமாறு:
2015, மார்ச் முதலாம் நாளான இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையில் தீர்மானங்களை ஆராய்ந்து, தமிழ் மக்களின்
1. காணிளை மீள கையளித்தல்

2. அரசியல் கைதிகளை விடுவித்தல்
3. காணாமல் போனவர்கள் சம்பந்தமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு, தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி, உடனடியாக இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொள்கின்றது. அத்துடன், போர்ச்சூழலில் இடம்பெயர்நத அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள குடியமர்த்தும் வகையில் செயற்பட வேண்டும் என்று அரசை வற்புறுத்துகின்றோம். அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி, உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என எமது இந்த மத்தியகுழு அரசை மீண்டும் வலியுறுத்துகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின், மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது.
இதனைவிட ஒரு கண்டனத் தீர்மானமும் இந்த மத்தியக் குழுவிலே எடுக்கப்பட்டிருக்கின்றது.
அண்மைக்காலமாக எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எமது கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான கௌரவ ம.அ.சுமந்திரன் அவர்களுக்கும் எதிரான நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை ஈழத் தாயகத்திலும், புலத்திலும் நிகழ்த்தியுள்ள விடயங்களை இந்த மத்தியகுழு கண்டிக்கின்றது.
இது தொடர்பில் எமது மத்தியகுழு தனது அக்கறையுடனான கவனத்தைச் செலுத்துகின்றது. 21.02.2015 சனிக்கிழமை காலை, யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு எதிராக ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. காணாமல் போனோரின் உண்மை நிலையைத் தெளிவு படுத்துமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், ஐ.நா.விசாரணை அறிக்கையை தாமதன்றி சமர்ப்பிக்குமாறும் கோருதலே இதன் முக்கியமான நோக்கமுமாயிருந்தது.
இப்போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக இணைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சுரேஸ் அணியின் தலைவர் கௌரவ சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி துணைச் செயலாளர் கௌரவ. அனந்தி சசிதரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், குறித்த ஆர்ப்பாட்டத்துடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிராததும், அதுவரையில் எந்த விதத்திலும் உச்சரிக்கப்பட்டிருக்காததுமான விடயமான கௌரவ. ம.அ. சுமந்திரன் அவர்களுடைய உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இச்செயற்பாடானது
(அ) எந்த நோக்கத்திற்காக மக்கள் திரட்டப்பட்டார்களோ அத்துடன் திரண்டார்களோ அந்த நோக்கத்தின் முக்கியத்துவத்தை மூலியாக்கியுள்ளது.
(ஆ) எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இச்சம்பவம் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்த மக்களின்மீது அவர்கள் கௌரவ.ம.அ. சுமந்திரன் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர் என்ற அபாண்டமான பழியைச் சுமத்தியுள்ளது.
(இ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேற்குறித்த பிரமுகர்கள் இச்செயற்பாட்டிற்குத் துணை போயிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. மேலும், உள்ளகத் தகவல்கள் மூலம் குறித்த உருவப்பொம்மை கௌரவ அனந்தி சசிதரன் அவர்களின் வாகனத்தின் மூலமே குறித்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டதென்பது தெரியவந்துள்ளது. இவ்விடயம் மேலும் கவலையைத் தருவதோடு கட்சி கட்டுப்பாடு தொடர்பில் அவர்கள்மீது பொறுப்புக்கூற வேண்டிய கேள்வியை எழுப்புகின்றது. மேற்குறித்த இருவரும் இவ்விடயம் தொடர்பில் இதுவரை கவலை தெரிவிக்காதிருப்பது இவ்விடயம் தொடர்பான அவர்களது மனப்பூர்வமான ஈடுபாட்டையே புலப்படுத்தியுள்ளது.
அத்துடன், கௌரவ. சுரேஸ் பிறேமச்சந்தரன் அவர்கள் குறித்த நிகழ்வின் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கௌரவ. ம.அ. சுமந்திரன் அவர்களையும் எமது பெருந்தலைவர் கௌரவ. இரா. சம்பந்தன் அவர்களையும் வெளிப்படையாகவே தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் கௌரவ. சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களது நடவடிக்கைகளை எமது மத்தியகுழு கடுமையாகக் கண்டிப்பதோடு, கௌரவ அனந்தி சசிதரன் அவர்களுடைய மேற்குறித்த நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடும் அவர் எமது கட்சியின் உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.
மேலும், கௌரவ. சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு அவருக்கு வழங்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் ஊடகப் பேச்சாளர் என்ற பொறுப்பை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தி கௌரவ ம.அ.சுமந்திரன் மற்றும் கௌரவ. இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் எதிராக தொடர்ச்சியாக கருத்துத் தெரிவித்து வருவதையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கண்டிக்கும் அதேவேளை, இவரது கட்டுமீறிய இச்செயற்பாடு தொடர்பாக அவர்மீது தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
முன்னதாக, பிரித்தானிய பிரதமரின் உறைவிடத்தின் முன்பாகவும், பின்னர் 25.02.2015 அன்று இலண்டனில் உள்ள அமெரிக்க தூரதரகத்தின் முன்பாகவும் இலங்கை அரசு தமிழினத்தைக் கருவறுப்பதைக் கண்டித்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்தக்கோரியும் எமது புலம்பெயர் தமிழர்கள் பெயரால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது கௌரவ. இரா.சம்பந்தன் ஐயா அவர்களதும் கௌரவ. ம.அ.சுமந்திரன் அவர்களதும் புகைப்படங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டமையையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது.
இதேவேளையிலே, யாழில் நடந்த உருவ பொம்மை எரிப்பின் பொழுது அந்த உருவ பொம்மைக்குத் தீவைத்து கொளுத்திய வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் உபதலைவர் க.சதீஸ் அவர்களின் செயலையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கின்றது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |