Home » » முஸ்லிம் காங்கிரஸ் செய்திருக்கின்ற துரோகம் தமிழர்களுக்கெதிரான துரோகம், ஏமாற்று என்பதை விட முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செய்யப்பட்ட துரோகமாகவே கருதப்பட வேண்டும். எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர்

முஸ்லிம் காங்கிரஸ் செய்திருக்கின்ற துரோகம் தமிழர்களுக்கெதிரான துரோகம், ஏமாற்று என்பதை விட முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செய்யப்பட்ட துரோகமாகவே கருதப்பட வேண்டும். எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர்

நீதி, நியாயம், விட்டுக்கொடுப்பு என்ற பதங்களின் ஒத்த கருத்துக்கள் தங்களது அகராதியில் அநீதி, அநியாயம், காட்டிக்கொடுத்தல் என்பனவாகவே இருக்கின்றன என்பதை இந்நாட்டில் முஸ்லிம் பெயர்தாங்கிகளின் கூட்டமொன்று இன்னுமொருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.
முப்பது வருட யுத்தத்தினால் ஏற்பட்டுப் போயிருக்கிற வடுக்களை இந்நாட்டின் இருபெரும் சிறுபான்மைச் சமூகங்களுமே எவ்வாறு ஆற்றிக்கொள்வது, எவ்வாறு விட்டுக்கொடுப்புக்களைச் செய்வது என்று யோசிக்கத் தொடங்கி, முன்னெடுப்புக்களை ஆரம்பிக்கிற மனோநிலை ஏற்பட்டிருக்கிற இவ்வேளையில், இரு சமூகமும் இரண்டறக் கலந்து தமது கல்வி, வியாபார, கலாசார விடயங்களில் புரிந்துணர்வோடு செயற்பட ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் இவ்விரு சமூகங்களையுமே இரு துருவங்களாக நிரந்தரமாகவே பிரித்து வைக்கின்ற ஒரு பெரும் கைங்கரியம் முஸ்லிம் பெயர்தாங்கிகளால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாண சபையின் அண்மைய ஆட்சிமாற்றமும் அதனை நோக்கிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினதும் அதனது உறுப்பினர்களினதும் செயற்பாடுகளும்;, அரசியல் இலாபங்களுக்காகவும், தமது சொந்த ஆடம்பர வாழ்வுக்காகவும் தாம் யாரையும் ஏமாற்றுவோம், கொள்கை கோட்பாடுகள், இஸ்லாத்தின் வழிகாட்டல்கள், ஆகக்குறைந்தது மனிதாபிமானம் போன்ற எந்த ஒன்றைப் பற்றியும் கவலைப்படமாட்டோம் என்பதை இன்னுமொருமுறை உலகிற்குச் சொல்லியிருக்கின்றன.
பதவிகளையும் அந்தஸ்த்துக்களையும், பொருளாதாரத்தையும் ஈட்டிக் கொள்வதற்காக, முஸ்லிம் அரசியல் என்ற போர்வையில் இந்த நாட்டில் முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகள் செய்கின்ற அநாகரிகச் செயற்பாடுகள் எல்லை மீறியே செல்கின்றன. தேர்தல் காலங்களில் பெரும்பான்மைக் கட்சிகளை ஆதரிப்பதற்காக செய்யப்படுகின்ற பாரிய தொகைப் பணங்களுக்கும் பதவிகளுக்குமான பேரம்பேசல்களில் தொடங்கி மற்றைய சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளில் கைவைப்பதிலிருந்து இந்நாட்டின் பொது நன்மைகளைச் சிதைப்பது வரை எந்த மனிதாபிமானமுமின்றி நடந்துகொள்கின்ற இவர்களது நடவடிக்கைகள் இந்நாட்டில் முஸ்லிம் சமூக இருப்பை இன்னும் பிரச்சினைகளுக்குள்ளாக்கும்.
பொதுபலசேன போன்ற தீவிரவாத அமைப்புக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய பிழையான புரிதல்களை உருவாக்குவதில் முஸ்லிம் அரசியல்வாதிகளது செயற்பாடுகள் கூடுதல் பங்காற்றியிருக்கின்றன. இவ்வாறான பௌத்த தீவிரவாத இயக்கங்களது செயற்பாடுகள் அண்மைய அரசியல் மாற்றங்கள் காரணமாக ஒரு வகையில் மட்டுப்படுத்தப்பட்டாலும் நிரந்தரமாக அவர்களது மனங்களில் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய பிழையான பதிவுகள் களையப்பட்டு, புரிந்துணர்வு ஏற்பட்டு எமது பிரச்சினைகள் தீர்க்கப்படுவது என்பது இந்நிலையில் சாத்தியமற்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளே எமது சமூகம் அனுபவிக்கின்ற வேதனைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும். இந்த விடயத்தில் படைத்தவனைப் பயப்படவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது என்பதை ஒருமுறை அவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறுதிநேரம் வரை ஒரு வேட்பாளரை அல்லது ஒரு கட்சியை ஆதரிப்பது, அவ்வாறு ஆதரிப்பதன் மூலம் தமது பதவிகளையும் பொருளாதாரத்தையும் தமது ஆடம்பர வாழ்வையும் நிச்சயப்படுத்திக் கொள்வது, அந்த வேட்பாளர் அல்லது அந்தக் கட்சி தோற்றுப் போகும் என்ற நிலை வருகின்றபோது இன்னுமொரு கட்சியோடு பேரம் பேசுவது, ஒரு குறைந்தபட்ச வெட்கம் கூட இல்லாது அடுத்த கட்சியை ஆதரிப்பது, அந்த கட்சியினுடைய பாரிய பிழைகளையும் அநியாயங்களையும் நாக்கூசாமல் நியாயப்படுத்துவது, அங்கும் தமது பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் குறியாயிருப்பது என்று வியாபித்துச் செல்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளது இந்நடவடிக்கைகள் முஸ்லிமைப்பற்றிய, இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்களை ஏனைய சகோதர இன சமூகங்கள் மத்தியில் வேரூன்ற வைக்கின்றன.
முஸ்லிம் என்பவன் எப்போதுமே சுயநலவாதி, பணத்திற்காகவும் பதவிக்காகவும் சோரம் போகக்கூடியவன், ஏனைய சமூகங்களையோ, மனிதர்களையோ பற்றி எந்த அக்கறையும் கொள்ளாதவன் என்ற மனப்பதிவு ஏனையோர் மத்தியில் நிலவுவதற்குக் காரணம் பெருமளவில் எமது அரசியல்வாதிகளே. இந்நிலை சர்வதேச சமூகத்தின் மத்தியிலும்கூட இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய மோசமான மனப்பதிவை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண சபை ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் செய்திருக்கின்ற காய் நகர்த்தல்கள் இலங்கை சமூகத்தின் முன் முஸ்லிம்களை தலைகுனிய வைத்திருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்அவர்களது சமூகத்தின் மத்தியில் மாகாண சபையில் நாம் கல்வியமைச்சைப் பெறுவோம், கல்விக்காகப் பாடுபடுவோம் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தனர். ஜனநாயக அடிப்படையில் கூட்டமைப்பிற்கே கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நியாயங்கள் இருந்தும், அந்த யதார்த்தங்கள் ஒருபுறமிருக்க, நிலைமைகளோடு ஒத்துப் போவோம் என்று விட்டுக் கொடுக்கின்ற மனோநிலையில் அவர்கள் செயற்படத் தொடங்கியவேளை, மீண்டும் அவர்களை ஏமாற்றி அந்தப்பதவிகளை தகுதியற்றோருக்கு வழங்கியிருப்பது முஸ்லிம் காங்கிரஸ் செய்திருக்கின்ற மிகப்பெரும் துரோகமாகும். இது தமிழர்களுக்கெதிரான துரோகம், ஏமாற்று என்பதை விட முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செய்யப்பட்ட துரோகமாகவே கருதப்பட வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் இம்மாகாணத்தில் இரு பெரும் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியிலும் நிரந்தரமான மனக்கசப்புக்களையும் பிரிவினைகளையும் வளாப்பதற்கே வழிவகுக்கும். இந்நிலை எமதும் எமது எதிர்கால சந்ததியினதும் வாழ்வை மிகப்பாரதூரமாகப் பாதிக்கும். மனங்களை வென்று சமாதான வாழ்வை உருவாக்க முஸ்லிம்கள் இதய சுத்தியோடு முயற்சி செய்யாத வரை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு உலகிலுமே நாம் ஒரு கீழ்சாதிச் சமூகமாகவே கணிக்கப்படுவோம் என்பதை கசப்பாயினும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
முஸ்லிம்கள் இந்த சூழ்நிலைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்க கட்டுப்பாடுகளை விதிக்கின்ற, உரத்துச் சொல்லுகிற அமைப்புக்கள் அரசியல்வாதிகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்நாட்டின் நன்மையை மாத்திரம் கருத்திற்கொண்டு பெரும்பான்மை சமூக அரசியல்வாதிகளை வழிநடாத்த பங்களிப்புக்கள் செய்த சோபித தேரர் போன்றவர்களைப் போன்று முஸ்லிம் சமயப் பெரியவர்களும் இந்த நாட்டின் நன்மைக்காகவும், முஸ்லிம் சமூகத்திற்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் தாக்கம் செலுத்தி வழிகாட்ட இதய சுத்தியோடு, சுயநலன்களுக்கப்பால் செயற்பட முன்வர வேண்டும். அன்றேல் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு இந்நாட்டில் கேள்விக்குறியே!
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |