Home » » முஸ்லிம்கள் இனிவரும் காலங்களிலாவது தமிழர் தரப்போடு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்

முஸ்லிம்கள் இனிவரும் காலங்களிலாவது தமிழர் தரப்போடு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்

முஸ்லிம்கள் இனிவரும் காலங்களிலாவது தமிழர் தரப்போடு இதயசுத்தியுடன் பேசி சிறுபான்மைச் சமூகத்திற்குரிய தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு  முன்வர வேண்டும். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசனின் நிதியில், பொத்துவில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் பா.புவிராஜா மற்றும் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள், ஆலய நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்,
முஸ்லிம்கள் எமது சகோதர இனமாக இருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த அரசுக்கு எதிரானவர்களாக இருந்த வரலாறே இல்லை.மாறி வரும் இந்த பேரினவாத அரசாங்கத்தோடு பேரம்பேசி தங்கள் சமூகத்திற்கு எதையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன்தான் இருக்கின்றார்கள்.
இனிவரும் காலங்களிலாவது அவ்வாறான சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, தமிழர் தரப்போடு இதயசுத்தியுடன் பேசி சிறுபான்மைச் சமூகத்திற்குரிய தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் போவோமாக இருந்தால் இந்த நாட்டிலே சிறுபான்மைச் சமூகம் இருந்த தடமே இல்லாமல் போவதற்கான நிலைமையே உருவாகும். இதனை அனைவரும் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்
கிழக்கு மாகாணத்தில் தமிழ்ச் சமூகம் இறுதி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மாத்திரமல்ல, தமிழரது அபிவிருத்தியும் பொருளாதாரமும் முடக்கப்பட்டு வருகின்றது.
.கிழக்கு மாகாணத்திலே பெரும்பான்மையாக இருந்த எமது தமிழ்ச் சமூகம் இன்று இறுதிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மாத்திரமல்ல, தமிழரது அபிவிருத்தியும் பொருளாதாரமும் முடக்கப்பட்டிருப்பதனையும் காணமுடிகின்றது.
இந்த நாட்டிலே பல கொடுமைகளையும் அழிவுகளையும் சந்தித்த சமூகம் என்றால் அது தமிழ் சமுகந்தான். எமது இனத்திற்கென்று பல வரலாறுகள் இருந்திருக்கின்றது
இந்த நாட்டிலே முதன்முதலாக குடிசன மதிப்பீடு எடுக்கப்பட்டபோது கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் 75 வீதத்தினராகவும், எமது சகோதர இனமான முஸ்லிங்கள் 24 வீதமாகவும், சிங்களவர்கள் 0.53 வீதமாகவும் இருந்தார்கள்.
பின்னர் 1981ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின் படி தமிழர்கள் 43 வீதமாகவும் முஸ்லிங்கள் 32 வீதமாகவும், ஏனையோர் சிங்களவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.
1960, 1963 களில் இந்த நாட்டிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசுகள் பல யுத்திகளை பயன்படுத்தி திட்டமிட்ட குடியேற்றங்களை செய்திருந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரைக்கும் அவர்களது திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ந்து கொண்டு செல்லும் அதே நேரம், நாம் வீதாசாரத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றோம்.
1956ஆம் ஆண்டு இந்த நாட்டிலே தனிச் சிங்களச் சட்டம் அப்போதைய அரசினால் கொண்டு வரப்பட்டது. அப்போது எமது தமிழ்த் தலைவர்கள் அதனை முற்றாக எதிர்த்து இச்சட்டத்தினை இல்லாமல் செய்தார்கள் அன்று எமது தலைவர்கள் அந்தச்சட்டத்தினை எதிர்க்காமல் இருந்திருந்தால் இன்று இந்த நாட்டிலே தமிழர்கள் என்ற ஓர் இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறமுடியும் அவ்வாறுதான் அன்றைய சூழல் இருந்தது.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களது வீதாசாரம் கூடியமைக்கு 1960, 63 ஆம் ஆண்டுகளில் அம்பாறை மாவட்டம் என்ற ஒரு மாவட்டம் உருவாகியமையும் வீதாசாரத்தில் அதிகரிப்பு வரக் காரணமாகும்.
சிறுபான்ரைமயினத்தவர்களாகிய எங்களை எந்த நேசக்கரம் கொண்டும் அரவணைக்க இந்த அரசாங்கம் தயாரில்லாத நிலைமைதான் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது.
இன்றைய இந்த சூழலில் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே, தமிழ் பேசும் மக்களுக்கான இறுதித் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை உணராத முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறுசிறு பிரச்சினைகளுக்குக்கூட சரியான முறையில் தீர்வு காணமுடியாத நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றார்கள்என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |