பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவர் மாத்திரமே ‘மெனிங்கோகோகல்’ பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசோதனைகள் மூலம் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கு மாத்திரமே இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இருந்து பதிவாகிய மற்றைய நோயாளி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும், அவர் ஜா-அல பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அத்திடிய பிரதேசத்தில் பணியாற்றியவர் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.
‘மெனிங்கோகோகல்’ பாக்டீரியா தொற்று கொழும்பிலும் பரவியுள்ளதாக சில ஊடகங்கள் தவறான கருத்தை பரப்பி வருவதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன கூறுகிறார்.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த வருடங்களில் இந்நோய் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு வந்து உயிரிழந்த சிறு குழந்தைக்கு இந்த நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அந்த குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படவில்லை என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நுண்ணுயிரியல் நிபுணரான டொக்டர் லிலானி கருணாநாயக்க, மெனிங்கோகோகல் பாக்டீரியா எவ்வாறு தொற்றுகிறது என்பதை விளக்கினார்.
“இது பாக்டீரியாவால் ஏற்படும் நோய். இது சளி மற்றும் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. இது நெருங்கிய மக்களிடையே பரவுகிறது. இது சமூகத்தை விட குடியிருப்பாளர்களிடையே அதிகம் பரவுகிறது.
மிக நெருங்கிய உறவில் இருப்பவர்களுக்கும் இது பரவுகிறது. அறிகுறிகளின் அடிப்படையில், மூளைக்காய்ச்சல் ஒரு சிக்கலாகும். கூடுதலாக, நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
இதற்கான வகைகள் நம் நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளன. இங்கு பி மற்றும் சி என இரண்டு வகைகள் மட்டுமே உள்ளன. இது இலங்கையில் ஒரு தொற்று நோயாக இருக்கப் போகிறது, அது ஒரு தொற்றுநோயாகப் பரவாது…”
0 comments: