நாட்டின் தற்போதைய தலைமுறைக்கு போஷாக்கான உணவை வழங்குவதும், எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதுமே இத்தருணத்தில் எனது நோக்கமாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வெளியிட்ட செய்தியிலேயே அதிபர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது கடமையாகும்
" சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும்.
இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறுவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகப் பின்னணி மிகவும் வித்தியாசமானது என்பது தெளிவாகிறது.
இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் சரியான அளவு கலோரி அடங்கிய ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரச தலைவர் என்ற வகையில் எனது கடமையாகும்.
முன்வைத்த கொள்கை அறிக்கை
நான் முன்வைத்த கொள்கை அறிக்கையின் பிரகாரம், ஏழை மற்றும் வசதி குறைந்தவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாடசாலை மாணவர்களுக்கு நிறை உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக 1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவாக போஷாக்குள்ள நிறை உணவு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறன. இது சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து நிபுணர்களின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும்.
அதேபோன்று, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, உணவுப் பாதுகாப்பு இல்லாத குடும்பங்களுக்கும் மேலதிக கொடுப்பனவு மற்றும் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சிறுவர்களின் அழகிய குழந்தைப் பருவத்தையும், நமது நாட்டின் வளர்ச்சிக்காக அளவில்லா தியாகங்களைச் செய்த முதியோர் சமூகத்தையும் பராமரிப்பது நமது கடமையாகும். அது நமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.
உணவு, கல்வி, விளையாட்டு, அழகியல், ஓய்வு, உறக்கம், மனநலம், உடல் ஆரோக்கியம் போன்றவை சிறுவர்களின் தேவைகளில் சிலவாகும். அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் கலாசார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளோம்.
அவர்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுவது, அரசாங்கத்தைத் தவிர பெற்றோர், ஆசிரியர் மற்றும் சிவில் அமைப்புகளின் பொறுப்பாக நான் கருதுகிறேன்.
அனைத்து சிறுவர்களையும் முதியவர்களையும் நம் அன்புக்குரியவர்களாக கருதி, அவர்களை அன்புடன் பராமரிக்கும் ஒரு சகாப்தத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதிபூணுவோம் ", எனக் குறிப்பிட்டுள்ளார்
0 comments: