கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாகி நான்கு தசாப்தங்கள் நிறைவெய்திய நிலையில், அப் பல்கலைக்கழகத்தில் இந்துக் கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமை, அங்கு அருங்காட்சியகம் ஒன்று இல்லாத குறையினை அது நிவர்த்தி செய்துள்ளது.
மட்டக்களப்புத் தேசத்து தமிழரின் வரலாறும் பண்பாடும் மிகவும் புராதனமானவை. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான இடையறாத தொடர்ச்சியினைக் கொண்டவை என்பது இந்நூற்றாண்டில் நடைபெற்ற களஆய்வுகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. தமிழ் மொழிப் பெயர் பொறித்த பண்பாட்டுச் சின்னங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அவை பல நூற்றுக்கணக்கானவை. மலைகள், காடுகள், வயல் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் ஆகிய எல்லாவற்றிலும் அவை கிடைக்கின்றன. அவற்றிலே காணப்படும் சொற்கள் தமிழ்ப்பிராமி என்ற ஆதியான தமிழ் வரிவடிவங்களில் அமைந்துள்ளன.
களஆய்வுகள், தேடல்கள் என்பனவற்றின் இரண்டாவது கட்டம் வரலாற்றுக்காலம் முழுவதற்குமுரிய (கி.மு. 300 – கி.பி 2000) பண்பாட்டுச் சின்னங்கள் பற்றியது. அதில் இதுவரை ஏற்பட்டுள்ள சாதனைகளை முன்னிலைப்படுத்துவதே இவ்வருடம் ஆவணி மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இந்துசமயப் பண்பாட்டு அருங்காட்சியகம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் பணிப்புரையின் பெயரில் இது அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் கனகசிங்கம் சமுதாய அக்கறை கொண்டவர் என்பதற்கு இப்பணி ஓர் எடுத்துக்காட்டு.
இந்துநாகரிகத்துறைத் தலைவரான கலாநிதி வன்னமணி குணபாலசிங்கம் இந்தப் பணியில் அரும்பாடுபட்டு உழைத்தார். இப்பணியில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் இளம் விரிவுரையாளரான கிருபைரெத்தினம் சர்வேஸ்வரன் ஆவார். இவர்களது பணிகளின் பயனாக இது உருவாகியுள்ளது.
அதிலே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் யாவும் நான்கு மாதங்களில் அவசரமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டவை. அதனைக் கண்டவர்கள் தங்கள் முன்னோரின் வாழ்வியல் பற்றிய அதிசயமான அறிவுணர்ச்சியைப் பெற்றனர். கிடைத்த பொருட்கள் யாவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பாதுகாப்பிற்கும் பல்கலைக்கழகம் பொறுப்பாகவுள்ளது. ஒரு அருங்காட்சியகத்தின் பயன்பாடும், சிறப்பும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களிலே தங்கியுள்ளது. இந்த நிலையத்திலுள்ள பொருட்கள் யாவும் கோயில்கள், வீடுகள், என்பனவற்றிலிருந்து கிடைத்தவை. அவை பெரும்பாலும் கோயில்களுக்குரியவை. சில உருப்படிகள் வீட்டுப் பாவனைக்கும் உரியவை. மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை உலோகப் பொருட்கள், கற் சிற்பங்கள், மரவேலைப்பாடானவை, சுடுமண் சிற்பங்கள், என நான்கு வகையினவாகவும் வகைப்படுத்தலாம்.
இந்த நான்கு வகையான தேவர் படிமங்களையும் இங்கு மட்டுமே காணலாம். என்பது இவ் அருங்காட்சியக்திற்குரிய ஓர் சிறப்பாகும்.
இந்த அருங்காட்சியகத்துப் பொருட்களை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றோம். கடவுட் படிமங்கள், வழிபாட்டிற்குரிய சமயச் சின்னங்கள், ஆராதனை வேளைகளில் உபசாரமாகப் பயன்படும் பொருட்கள், தீபங்கள், விளக்குகள். நீரேந்து கலசங்கள். சமையற் பாத்திரங்கள், உலோக வார்ப்பிலே பயன்படும் கருவிகள். எனப் பலவாறாக அவற்றை வகைப்படுத்தலாம். இவ்வாறான அரும்பொருட்களைக் கோயிலாரும், பிறரும் வழங்கியுள்ளனர். அவை பாவனையில் இல்லாது ஒதுக்கப்பட்டவை. ஆனால் அவற்றைப் போன்ற உருப்படிகள் இன்றுவரை வீடுகளிலும், ஆலயங்களிலும் பாவனையிலுள்ளன.
சைவசமய வழிபாட்டில் ஆராதனை வேளைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் இங்குதான் மிகக் கூடிய வகையிற் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவையும் பல்வேறு நூற்றாண்டுகளில் உற்பத்தியானவை.
கடவுட் படிமங்கள்
வெண்கலம், கல், சுடுமண், மரம், ஆகிய நால்வகை மூலப்பொருட்களிலும் உருவான படிமங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. உலோகப் படிமங்கள் பெறுமதி மிக்கவை என்பதனால் அவற்றை எவரும் இலகுவிற் கைவிடமாட்டார்கள். வெண்கலத்தினாலான நான்கு கடவுட் படிமங்களை இங்கு சிறப்பானவைகளாகக் குறிப்பிடலாம். அவற்றுலொன்று நடராஜர் படிமம் அதனைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வ.கனகசிங்கம் வழங்கியுள்ளார். அது மிகவும் அண்மைக்காலத்திற்குரியது. மற்றயவை பழமையானவை. வேறெங்கும் கிடைக்காதவை, நூதனக் கோலமான உருப்படிகள் ஒன்றிலே கழுத்துடன் கூடிய தலையின் வடிவம் மட்டுமே வார்ப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கண்கள் மூடிய கோலமானவை. நெற்றியிலே திலகம் அமைந்துள்ளது. கழுத்திற் பதக்க மாலையும் நீண்ட காதுகளிலே தோடுகளும் தெரிகின்றன. படிமம் தேவதை ஒன்றின் வடிவம் போன்றது. கழுத்தில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் புராதனமானது.
இரண்டாவது உலோகப்படிமம் கோரமான முகபாவமுடைய கொற்றவையின் கோலமானது உடைப்பினால் அழிந்து தலைப்பாகம் மட்டும் எஞ்சியுள்ளது. வடிவமைப்புத் தனிரகமானது. முடிமேல் விசாலமான நாகபடம் தெரிகின்றது. மூன்றாவது உலோகப் படிமம் பிள்ளையாரின் உருவம்; அதன் காலம் கி.பி.1800-1900 என்பதற்கு இடைப்பட்டது. இது களுதாவளைப் பிள்iளாயர் கோயிலவர் வழங்கியது.
கற் சிற்பங்கள்
கணபதி, முருகன், அனந்தசயனக் கோலமான திருமால் நாயன்மார்கள், நவக்கிரக தேவர்கள், முதலானோரின் செதுக்குப் படிமங்கள் பல உள்ளன. முனைத்தீவிலிருந்து கிடைத்த பிள்ளையார் சிற்பம் கி.பி.பதினான்காம் நூற்றாண்டிற்குரியது. அறுமுகப்போடி என்ற பெயர் அதிலே தெரிகின்றது. முருகனது சிற்பங்களில் ஒன்று தேற்றாத்தீவிலிருந்து கிடைத்தது. தம்மாப்போடி என்ற பெயர் அதிலே காணப்படுகின்றது. அது மத்திய காலத்திற்குரியது. அதன் வேலைப்பாடு மிகவும் செம்மையானது.
இங்குள்ள இரண்டாவது முருகன் படிமம் திருக்கேதீஸ்வரம் கோயிலார் வழங்கியது. மிகவும் பழமையான 11,12ஆம் நூற்றாண்டுகளுக்குரியது. அது சோழரினாலே புனரமைக்கப்பட்ட கோயிலுக்குரியதென்று கருதலாம். அதில் எழுத்துக்கள் தெரிகின்றன.
தனியார் ஒருவர் வழங்கிய அனந்தசயன வடிவம் அழகானது அதிலே விஜயநகர நாயக்கர் காலச் செல்வாக்குப் படிந்துள்ளது. அதன் காலம் 17ஆம் நூற்றாண்டெனக் கருதலாம்.
இங்குள்ள நாயன்மார் சிற்பங்களில் இரண்டு முன்பு திருக்கேதீஸ்வரத்தில் இருந்தவை. அவை அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரின் சிற்பங்கள். அவற்றின் மூலம் அக்கோயிலின் மறைந்துபோன வரலாற்றின் அம்சமொன்று வெளிவருகின்றது. அவை 12ஆம் நூற்றாண்டிற்குரியன போலத் தெரிகின்றன. பொலன்னறுவையிலே நாயன்மாரின் சமகாலத்து வெண்கலப் படிமங்கள் கிடைத்துள்ளன. சண்டேஸ்வர நாயனாரின் சிற்பம் இரண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை ஆசனக்கோலமானவையாகவும், மிகுதியான ஆபரணங்களோடும் வடிவமைக்கப்பட்டுள்ன. அதன் வேலைப்பாடுகள் 15ஆம் நூற்றாண்டிற்குரியவை. அவற்றுட் சில சைவசமயத்தில் ஒரு பிரதானமான அம்சமாகிவிட்டது. நாயன்மார் மீது மட்டக்களப்பு தேசத்தவர்கள் கொண்டிருந்த அபிமானத்துக்கு இவ்வுருவங்கள் அடையாளங்களாகும். .
அழகிய மரச் சிற்பம்
புலிவாகனத்தில் அமர்ந்த பத்திரகாளியின் அழகிய செதுக்கு வேலைப்பாடான சிற்பமொன்று கல்லாறு வடபத்திரகாளியம்மன் ஆலய பரிபாலன சபையினிடமிருந்து கிடைத்துள்ளது. விஜயநகர பண்பாட்டுச் செல்வாக்கின் விளைவாகவே இலங்கையில் வீரபத்திரர், பத்திரகாளி வழிபாடுகள் பரவின. இதனை மிகவும் நுட்பமான முறையில் கவர்ச்சியுடைய வடிவமாகச் செதுக்கியுள்ளனர். படிமம் எண்கரங்களைக் கொண்டது. திரிசூலம், வாள், வில், கோளம் முதலான படைக்கலங்களை ஏந்திய கோலமானவை. இதன் காலம் 16ஆம் நூற்றாண்டெனக் கருதலாம். மரத்திலே செதுக்கிய இதனைப் போன்ற சிற்பம் வேறெங்கும் காணப்படவில்லை
சுடுமண் படிமங்கள்
இந்த அருங்காட்சியத்தில் ஆறு சுடுமண் படிமங்கள் உள்ளன. அவை பழைமையான தொல்பொருட்கள். ஒன்று திருமாலின் அனந்தசயனக் கோலம். ஏனையவை நாயன்மார்களின் படிமங்கள். அனந்தசயன வடிவம் அசாதாரணமானது. இதிலே திருமாலின் கோலம் பாம்பணைப்பள்ளியிற் கால்களை நீட்டிச் சாய்ந்திருப்பது போன்ற கோலம் தெரிகிறது. தலைமேல் விசாலமான ஐந்தலை நாகபடம் தெரிகின்றது. இதன்காலம் கி.பி 1600 – 1800 என்பதற்குள் அடிங்கியதாக இருக்கலாம்.
சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயகுரவரின் படிமங்கள் செப்பமாக அமைந்தவை. அவற்றை உருவாக்கியவர்கள் அறிவுணர்ச்சிக்கு ஏற்ப வடிவமைத்துள்ளனர். உருப்படிகளிற் பெயர்களை அமைத்துள்ளனர். காலம் 19ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
நாயன்மார் வழிபாடு சோழப்பேரரசின் காலத்திலே சைவ சமயத்தில் ஒரு பிரதானமான அம்சமாகி விட்டது. நாயன்மார் மீது மட்டக்களப்பு தேசத்தவர்கள் கொண்டிருந்த அபிமானத்துக்கு இவ்வுருவங்கள் அடையாளங்களாகும்.
வழிபாட்டுச் சின்னங்கள்
திரிசூலம், வேல், மயூரம், யானை, மூ~pகம், நாகம் முதலானவை தமிழ் பேசும் நாகரின் வழிபாட்டுச் சின்னங்கள் என்பது ஆய்வுகளின் மூலம் தெளிவாகின்றது. அவை இலங்கையில் 2000 வருடங்களுக்கு முன்பே வழிபாட்டுச் சின்னங்களாகி விட்டன. இவை மட்டக்களப்புத் தமிழரின் வழிபாட்டு முறையில் வழமையாகிவிட்டன என்பதும் அவை தொடர்ச்சியாக நிலைபெற்று வருகின்றன என்பதும் இங்கு காட்சிக்கு வைக்கப்;பட்டுள்ள உருப்படிகளில் உறுதியாகின்றது. இவ்வகையான சின்னங்கள் வேறெங்கும் வைக்கப்படவில்லை. நாட்டிலுள்ளவர்களும், சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களும், ஆய்வாளரும் இவற்றை ஆவலோடு வந்து பார்க்கும் நிலை விரைவில் உருவாகும்.
நாகர் நாகத்தை நாக வழிபாட்டின் சின்னமாகவும், தங்கள் இனக்குழுமத்தின் சின்னமாகவும் பயன்படுத்தினார்கள். எனவே அவர்களின் உற்பத்திப் பொருள்களிலும், கட்டுமானங்களிலும், நினைவுச் சின்னங்களிலும், வழிபாட்டுச் சின்னங்களிலும் நாக வடிவத்தை அமைத்துக் கொள்வது வழமை.
நாக வழிபாடு சைவ சமயத்திலும், பௌத்த பண்பாட்டு மரபிலும் கலந்து விட்டது. இந்தக் கலப்பும் கூடுதலாக மட்டக்களப்பு தேசத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள நாக வடிவங்களிற் சில நாகதம்பிரான் கோயில்களில் இருந்தவை. அவை அனைத்தும் வெண்கலப் படிமங்கள்.
தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்பாக இருக்கும் யாழப்பாணம் அருங்காட்சியகம் என்பனவற்றில் இவற்றைக் காணமுடியாது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐந்தலை நாக வடிவங்கள் பெருந்தொகையானவை வன்னி மாவட்டங்களில் உள்ளன. அவை கவனிப்பாரற்று மறைந்து போகும் நிலையை அடைந்துவிட்டன. அவற்றுள் பெரும்பாலானவை தமிழிற் பெயர் எழுதப்பட்டுள்ளது.
வெவ்வேறு காலங்களுக்குரிய சிலம்புகள் இங்கே காணப்டுகின்றன. அவை உலோக வார்ப்பானவை. அணிகலன்களாகவன்றி வழிபாட்டுச் சின்னங்களாக பயன்பட்டன. சிலம்ப பத்தினி வழிபாட்டிற்குரிய சின்னம். இவற்றுட் பெரும்பாலானவை கண்ணகி கோயில்களிற் கிடைத்தவை. மட்டக்களப்பு தமிழர் மத்தியில் கண்ணகி வழிபாடு பெருஞ் செல்வாக்கு பெற்றுள்ளது. விழாக் காலங்களிற் கண்ணகி வழக்குரை காவியம் படிக்கப்படும். கொம்பு முறித்தல் விளையாட்டு விழாக் காலங்களில் நடைபெறுவது. அதில் இடம்பெற்ற ஒருசோடி கொம்புகளை இங்கு வைத்துள்ளனர்.
ஆராதனைகளிற் பயன்படும் உபசாரப் பொருட்கள்
ஆலயங்களில் ஆராதனை வேளைகளில் உபசாரஞ் செய்யுமிடத்து கொடி, குடை, தர்ப்பம், சாமரம், விசிறி, ஆலவட்டம் முதலானவற்றைப் பயன்படுத்துவார்கள். மூலஸ்தானத்தில் ஆராதனை நிகழ்வதால் வெளியில் நின்று வணங்குவோருக்கு அவை தெளிவாகத் தெரிவதில்லை. அவ்விதமான உலோக வார்ப்பான பொருள்கள் எல்லாம் இங்கு வைக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பாகும். இவற்றை இலங்கையில் வேறொரு அருங்காட்சியகத்தில் கண்டு கொள்ள இயலாது.
ஆராதனைகளிற் பயன்படுத்தப்பட்ட பொருள்களுள் இன்னொரு வகையானவை தீபங்கள். தீபாராதனை என்பது சைவசமய வழிபாட்டில் பிரதானமான அம்சமாகும். ஆராதனைக்குப் பயன்படும் எல்லா வகையான தீபங்களையும் இங்கே காணமுடிகின்றது. ஏகதீபம், பஞ்சதீபம், அடுக்கு தீபம், பஞ்சாரத்தி தீபம் முதலானவை பொதுவழக்கிலுள்ளவை. மயூர தீபம், நாகதீபம், மூ~pக தீபம் முதலானவை மட்டக்களப்புத் தேசத்திற்குச் சிறப்பானவை.
விளக்கு வகைகள்
பலவகையான உலோக வார்ப்பான விளக்குகள் இங்கு போலப் பெருந்தொகையில் வேறெங்கும் இதுவரை காணமுடியவில்லை. அவை கைவிளக்கு, குத்து விளக்கு, தூக்கு விளக்கு என மூவகைப்படும். அவை புராதனமானவை, வெவ்வேறு காலப் பகுதிக்குரியவை. விளக்கெரிப்பதற்கு முற்காலங்களில் வேப்பெண்ணை, இலுப்பெண்ணை ஆகியவற்றையும் பயன்படுத்தினார்கள்.
பொலன்னறுவையிலுள்ள சில கல்வெட்டுக்கள் விளக்கெரிப்பதற்கு ஆட்டுப்பால், பசுப்பால் என்பவற்றின் மூலம் உற்பத்தியாகின்ற நெய் வழங்கியமை பற்றிக் குறிப்பிடுகின்றன. அண்மைக் காலத்திலே தேங்காய் எண்ணெய்யினைப் பயன்படுத்துவது வழமையாகி விட்டது.
வரலாற்றுக் காலமும் முழுவதும் பாவனையிலிருந்த கைவிளக்குகள் எல்லாம் நாகரின் வடிவமைப்புக்களை மூலமாகக் கொண்டவை. அவற்றிலொன்றை வந்தாறுமூலையில் முதன்முதலாகக் கண்டோம். அதில் மணிணாகன் பள்ளி என்ற பெயர் தெளிவாகத் தெரிந்தது. அதன் பின்பு அவற்றைப் போன்ற உருப்படிகளை யாழ்ப்பாணத்திலும் காணமுடிந்தது.
இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் உருப்படிகளில் இரண்டு நாகரின் காலத்திற்குரியவை. மற்றவை யாவும் 6ஆம் நூற்றாண்டு முதலாக 16ஆம் நூற்றாண்டு வரையான காலத்திற்குரியவை.
கைவிளக்குகளைப் போல குத்துவிளக்குகளும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய பிராந்தியங்களிலும் புழக்கத்தில் இருந்தன. அவை பெரும்பாலும் 5 அலகுகள் கொண்டவை. இங்கு 67 அலகுகளுடைய விளக்குகளும் உள்ளன. மங்கல வேளைகளிலும், தைப்பொங்கல், வரு~ப் பிறப்பு, நவராத்திரி, கார்த்திகை விளக்கீடு முதலிய சிறப்பு நாட்களில் அவற்றை எரிப்பது வழக்கம். சில வீடுகளிலே ஒவ்வொரு நாளும் அதை முற்காலங்களில் எரித்தனர். வெவ்வேறு விதமான விளக்குகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அவை 10 – 18ஆம் நூற்றாண்டுக்குரியவை.
தூக்கு விளக்குகள் வெண்கல வார்ப்பான தனிரகமானவை. தலைப்பாகத்திலே கொழுக்கியுடைய சங்கிலி ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றிலே பல அலகுகள் உள்ளன. இந்த விளக்குகள் கனதியானவை. நீண்ட காலற்ற குத்து விளக்குகளுள் பெருந்தொகையான விளக்குகளை காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். வேறு பிராந்தியங்களில் இவ்வாறான தூக்கு விளக்குகள் காணப்படவில்லை.
உலோகப் பாத்திரங்கள்
பல்வேறு விதமான உலோகப் பாத்திரங்கள் தமிழர் சமுதாயத்திலே புழக்கத்தில் இருந்தன. கிண்ணம், கெண்டி, செம்பு, பானை, சட்டி, குடம், கிடாரம், வட்டா, சேர்வக்கால், குவளை ஆகிய யாவற்றையும் புதிய அருங்காட்சியத்திலே வைத்துள்ளனர். தட்டம், தாம்பாளம் என்பனவும் கணிசமான தொகையில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் அவை உற்பத்தியானவை. இவற்றைப் போன்ற உருப்படிகளைத் தமிழர் வாழும் வேறு பிராந்தியங்களிலும் வழங்கினார்கள். ஆயினும் அங்குள்ளவற்றை இதுவரை எவரும் பெருந்தொகையிலே காட்சிப்படுத்தவில்லை.
செம்பு, குடம் என்பன நீர் கொள்ளும் கலசங்கள் தண்ணீர் குடிப்பதற்கும், ஆடு, மாடுகள் பால் கறப்பதற்கும் செம்புகள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுதும் அவை புழக்கத்தில் உள்ள கொண்டாட்டங்களிலே விருந்தினரைக் கௌரவிப்பதற்கும் செம்புத் தண்ணீர் கொடுக்கும் வழக்கமுண்டு. கெண்டி பெரும்பாலும் கோயில்களிலும், வீடுகளிலும் சமயச் சடங்குகளிற் பயன்படுத்தப்படுவது. நீரைத் தெளிப்பதற்கும், ஊற்றுவதற்கும் அது பயன்படும்
செப்புக் குடங்கள், நீரேந்து கலன்கள், குழாய் நீர் வழங்கும் வசதிகள் ஏற்படும் வரை வயல்வெளிகளிலிருக்கும் நல்ல தண்ணீர் கிணறுகளிலிருந்து பெண்கள் நிரை நிரையாகச் செம்புக் குடங்களில் நீரை அள்ளிச் செல்லும் காட்சி யாழ்ப்பாணத்திற் பொதுவானது. மட்டக்களப்பிலும் செப்புக் குடங்களை நீரேந்து கலன்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
அங்கும் வேறு பிராந்தியங்களிற் சருவப்பானைகளைப் பயன்படுத்தியுள்ளனர். சிறப்பு நாட்களில் வீட்டு முற்றத்திலும், கோயில்களிலும் பொங்கல் செய்வதற்குப் அவை பயன்பட்டன.
இவற்றோடு வீடுகளிற் புழங்கிய சருவச் சட்டி, கொத்துச் சட்டி போன்றனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் உற்பத்தியான அகன்ற வாயுடைய பானைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அவை மங்கல வேளைகளிலே பெருமளவில் விருந்தினருக்கு வழங்குவதற்கான உணவுகளைச் சமைப்பதற்குப் பயன்பட்டவை. கோயில்களில் நெய்வேத்தியம் வைப்பதற்கான அமுது சமைப்பதற்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள்.
தட்டங்களும் தாம்பாளங்களும்
பெரிய தட்டங்கள் தாம்பாளம் எனப்படும். அவற்றின் பயன்பாடும் பல வகைப்படும். சிறிய தட்டங்களில் வெற்றிலை, பாக்கு என்பவற்றை வீடுகளுக்கு வருவோருக்கு வழங்குவது வழமை. அது உபசரிப்புக்கான அடையாளமாகும். நன்மை, தீமை காலங்களிலே பெரிய தட்டங்களில் அவற்றை வைத்து அவற்றைக் கொடுப்பார்கள். கோயில்களில் நிவேதனப் பொருட்கள் தாம்பாளங்களில் வைக்கப்படும். மடை போடுவதற்கும் அவை பயன்பட்டன.
பல்வேறு காலங்களுக்குரிய தட்டங்கள் இங்கு காணப்படுகின்றன. அவற்றிலொன்று அளவிற் சிறியது. அதன் நடுவிலே நாகபந்தம் தெரிகின்றது. மணிணாகன் பள்ளி எள்ற பெயரின் அடையாளமும் தெரிகின்றது.
நாகபந்த வடிவமுள்ள உருப்படிகள் நாகர் காலத்தவை. உலோக வார்ப்பான உண்கலங்கள் வட்டா எனப்படும். அவற்றின் உருப்படிகள் பல இங்குள்ளன. புலால் உணவு உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள் சிலர் இன்றும் அவற்றையே பயன்படுத்துகின்றார்கள். ஆதியில் நாகரே இவற்றை உருவாக்கினார்கள்.
பொம்பரிப்பில் அகழ்வாய்வு செய்த பொழுது பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களோடு ஒரு வட்டாவும் காணப்பெற்றதென்று பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
ஓர் அதிசயக் கோலமான உலோக வேலைப்பாடான மலர்த் தட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. அது ஓலையில் இழைத்த உருப்படி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பாவனைக்கும்ஈ, கோயில்களிலும் பயன்பட்ட உலோகப் பொருட்கள் போதிய அளவில் இங்கு காணப்படுகின்றன. பெரும்பாலானவை இலங்கைத் தமிழர் சமூகங்கள் அனைத்துக்கும் பொதுவானவை. சில மட்டக்களப்பு வழமைக்குச் சிறப்பானவை. சைவசமய வழிபாட்டு முறை, உலோகப் புழக்கம் ஆகியன பற்றிய ஆய்வுகளுக்கு இங்குள்ள பொருள்கள் பற்றிய அறிவுணர்ச்சி இன்றியமையாத தேவையாகும். உலோகப் பொருள்களின் உற்பத்தி முறை மட்டக்களப்பில் மிகவும் வளர்ச்சி பெற்ற நிலைக்கு இருந்தமைக்கு அவை அடையாளங்களாகும். வார்ப்புக் கலையிற் பயன்படுத்திய சில கருவிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாழ்வியல் தொடர்பான எல்லாத் தொல்பொருள்களையும் அடக்கிய பெரு நிறுவனமாக இந்த அருங்காட்சியகம் மலர வேண்டும்.
வேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
0 comments: