Home » » தேசிய சம்பியனாக சாதனை படைத்த சிவாநந்தா தேசிய பாடசாலையின் இளம் டெனிஸ் வீரர்கள் மட்டு மண்ணை ஒளிரச்செய்துள்ளனர்

தேசிய சம்பியனாக சாதனை படைத்த சிவாநந்தா தேசிய பாடசாலையின் இளம் டெனிஸ் வீரர்கள் மட்டு மண்ணை ஒளிரச்செய்துள்ளனர்

 



கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று (28-10-2022) கொழும்பில் இடம்பெற்ற தேசிய டென்னிஸ் பகிரங்கச் சுற்றுப்போட்டியில் சிவாநந்தா தேசிய பாடசாலை இளம் வீரர்களின் நிதானமும் அதிரடியும் கலந்த பரபரப்பான ஆட்டம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய அளவில் இடம்பெற்ற போட்டியில் பல பாடசாலை அணிகளை வெற்றிகொண்டு இறுதிப்போட்டியில் விளையாட்டு விற்பன்னர்களை விசேடமாகக்கொண்ட கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அணியினை சாகச ஆட்டம் மூலம் வீழ்த்தி 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேசிய சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது சிவாநந்தா தேசிய பாடசாலை அணி.



இளம் வீரர்களின் வெற்றி சிவாநந்தாவின் வரலாற்றுச் சாதனைகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சிவாநந்தா தேசிய பாடசாலையின்  நாமத்தையும் மட்டு மண்ணின் பெருமையையும் தேசிய அளவில் பிரகாசிக்கச் செய்த இளம் சாதனை வீரர்களான செல்வன் கோ. தனுஸ்கர்,  செல்வன் ர.இளங்கோவன் மற்றும் செல்வன் க.ஜெயர்சன் ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்கள்.


மட்டக்களப்பு டென்னிஸ் பயிற்சி நிலையத்தின் விளையாட்டு வீரர்களாகத் திகழும் சிவாநந்தாவின் இளம் சாதனை வீரர்களின் சாதனைப் பயணத்திலும் வெற்றியின் பின்னாலும் பயணித்துக்கொண்டிருப்பவர்களில் டென்னிஸ் பயிற்றுவிப்பாளர்களும், பெற்றோர்களும் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள்.


பிள்ளைகள் சிறந்த வீரர்களாக மிளிர அயராது பாடுபடும் பெற்றோர்களான திரு&திருமதி கோகுலதாசன் , திரு&திருமதி ரவீந்திரன், திரு&திருமதி கனகரெத்தினம் ஆகியோர் போற்றுதற்குரியவர்களாவர்.


 உடற்கல்வி ஆசிரியார்கள், உடற்கல்வி ஆசிரியரான வி. தினேஸ்குமார், பயிற்றுவிப்பாளர்களான திருவாளர் ஈ. லுக்சன் மற்றும் திருவாளர் ஸ்ரான்லி வருண் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். பயிற்றுவிப்பாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புமிக்க சேவை தொடர வாழ்த்துக்கள்.


எல்லாவற்றிற்கும் மேலாக பயணச் செலவு, பயிற்ச்சிச் செலவு, தங்குமிடச் செலவு முதலானவைகளை அனுசரணைகளெதுவுமில்லாமல் தாங்களே பொறுப்பெடுத்ததோடு பாடசாலையின் பெயர் மிளிரக் காரணமான பெற்றோர்கள் உண்மையில் மெச்சத்தக்கவர்களாகின்றனர்.

சிவாநந்தாவிற்கென பிரத்தியேக பயிற்சிக் களமோ பயிற்றுவிப்போ இல்லாவிடினும், சிவாநந்தா தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் தட்டிக்கொடுப்புகள், ஊக்குவிப்புக்கள் என்பன இளம் சாதனை வீரர்கள் தேசிய ரீதியில் வெற்றிவாகை சூட உதவியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் சகல வசதிகளுடனும் கூடிய டென்னிஸ் பயிற்ச்சிக் களம் உருவாகுவது காலத்தின் தேவையென உணரப்பட்டுள்ளது.


மேற்படி வெற்றியின் ரகசியம், இளம் வீரர்களின் சாதனை, சாதனைப் பயணத்திற் பங்குகொண்டோரென அனைவரையும் வரவேற்றுக் கௌரவிக்கும் நிகழ்வொன்றினைச் செய்வதற்கு சிவாநந்த வித்தியாலய கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர் நலன்புரிச் சங்கம் முடிவெடுத்துள்ளனர். பாடசாலைமீது ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டினையும் அர்ப்பணிப்பினையும் இது எடுத்துக்காட்டுகின்றது.









Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |