கிழக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் கொவிட்-19 தடுப்பூசி அட்டையை வைத்திருக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று (14) தெரிவித்தார்.
இராணுவம் மற்றும் சுகாதார பகுதியினரால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாகாணங்களில் பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளிடமும், தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கிரமமான முறையில் இராணுவத்தினரால் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும், இது வரை பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
சந்தைத் தொகுதிகளில் மற்றும் சன நெருக்கமான பொது இடங்களில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் கொவிட் 19 தடுப்பூசி அட்டை உள்ளதா என சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தோறும் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்கள் இதுவரை எவ்வித தடுப்பூசியும் பெற்றுக் கொள்ளாதவர்கள் தத்தமது பிரிவிலுள்ள சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
தற்போது மக்கள் கனிசமாக ஒன்று கூடுவதாகவும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமலும் கவனயீனமாக நடந்து கொள்வதை காணக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்படலாம்.
ஆகவே இவற்றை கருத்திற் கொண்டு மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
0 Comments