Advertisement

Responsive Advertisement

இலங்கையில் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில்!

 


இலங்கையில் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டொலர் பற்றாக்குறை காரணமாக சிறிலங்காவிற்கு வந்துள்ள எரிபொருளை தரையிறக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

களனி திஸ்ஸ மின்நிலையத்திற்கு தேவையான மூவாயிரம் மெற்றிக் தொன் உராய்வு எண்ணெயை சிறிலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கியதை தொடர்ந்து மின் விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெறும் மின் வழமைக்கு திரும்பியுள்ளதால் மின்விநியோகத்தை தற்போதைய நிலையில் துண்டிக்காமலிருக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி துறை அமைச்சரால் குறிப்பிட முடியாது எனவும், நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றின் தனியுரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, டீசலுடன் இரண்டு கப்பல்கள் சிறிலங்காவிற்கு வந்துள்ள நிலையில் வங்கிகளுக்கு டொலர் விநியோகிக்கப்படாமையினால், குறித்த டீசலை தரையிறக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மூவாயிரம் மெற்றிக்தொன் பெற்றோலுடன் கப்பல் துறைமுகத்திற்கு வந்தடைந்த மூன்று நாட்களின் பின்னரே தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி வருகை தந்த குறித்த கப்பலிலிருந்த பெற்றோல், கடந்த 14ம் திகதியே இறக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்து, அதனை தரையிறக்குவதற்கு, குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு டொலர் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அந்த டொலரை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறிலங்காவிற்கு எரிபொருளை கொண்டு வந்து, நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கு தொடர்ந்தும் தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

Post a Comment

0 Comments