வடிகால்களை துப்பரவு செய்து கொண்டிருந்த கல்முனை மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மேற்பார்வையாளர் உட்பட மாநகர சபை உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த பகுதியில் கல்முனை மாநகர சபையினர், கன மழை காரணமாக துர்வாரப்படாமல் இருந்த சீர்செய்து வடிகால்களை நீர் வடிந்தோடச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அம்பாறை - கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் நீரோடும் வடிகால்களை துப்பரவு செய்து கொண்டிருந்த மாநகர சபை ஊழியர்கள் மேற்பார்வையாளர்கள் மீது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 காவல்துறையினர் உத்தியோகத்தர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அதனை கேள்வியுற்று அவ்விடம் சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மீதும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது காவல்துறை எனக் கூறி சம்பவ இடத்திற்கு சென்ற மூவர் மாநகர சபை ஊழியர்களை தாக்கியதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
இவ்வாறு தாக்கியவர்கள் யாருடைய அனுமதியை பெற்று இந்நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள் என தெரிவித்து தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் ஒன்று கூடுவதை அறிந்த குறித்த மூவரும் அவ்விடத்தில் இருந்து சென்றதாகவும் மதுபானம் அருந்திய நிலையில் காணப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக கல்முனை தலைமை காவல்துறைப் பொறுப்பதிகாரி மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
0 Comments