நாட்டின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவ்வாறு தீர்வு காணத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் ராஜபக்சவினரால் சிறிலங்கா அழிவடைந்தது எனும் வரலாறு பதிவாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பிளவடையாத நாட்டுக்குள்ளே ஒரு தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகவும், கூட்டமைப்பை பிரிவினைவாதக் கட்சியாக சித்தரிப்பதை இனியேனும் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவுடன் இலங்கை நட்புறவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம், இந்தியாவுடனான சுற்றுலாத்துறையை மேம்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
தற்போது பிரதமராக இருக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் பொன்னான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.
யுத்தம் முடிவடைந்தவுடன் 2010 இல் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கொண்ட நாடாளுமன்றம் இருந்தது. 18 ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தார். சர்வதேசத்தின் ஆதரவும் இருந்தது.
ஆனால், அவரால் நாட்டின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போனது. தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு இவர்கள் வந்துள்ளார்கள். இப்போதாவது இந்தப் பிரச்சினைகளுக்கு இவர்கள் தீர்வினை வழங்க வேண்டும்.
ஆசியாவில் மூத்த அரசியல்வாதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ச, ஏன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காமல் இருக்கிறார்? அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குமாறு தான் தமிழ் மக்கள் கோருகிறார்கள்.
இதனை ஏன் வழங்க முடியாமல் உள்ளது? இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கத் தவறினால், 30- 40 வருடங்கள் கழித்து ராஜபக்சவினரை மக்கள் தூற்றும் நிலைமை நிச்சயமாக ஏற்படும்.
ராஜபக்சவினரால் தான் இந்த நாடு அழிவடைந்தது எனும் வரலாறு பதியப்படும். இந்த நிலைமைக்கு செல்ல வேண்டாம் என்று தான் நாம் கேட்கிறோம். அரசாங்கம் இன்று செய்யும் இந்தச் செயற்பாடுகளினால் எமது வருங்கால சந்ததியினர் தான் பாதிக்கப்படுவார்கள்.
நாம் பிளவடையாத நாட்டுக்குள் தான் ஒரு தீர்வை எதிர்ப்பார்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரிவினைவாதக் கட்சியாக சித்தரித்து தான் இதுவரை காலமும் நீங்கள் வாக்குக் கேட்டீர்கள். ஆனால், இனியும் இவற்றை மக்கள் நம்பத் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்
0 Comments