Advertisement

Responsive Advertisement

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம் - செங்கலடியில் சம்பவம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்துக்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.


செங்கலடி – கொடுவாமடு காளி கோயில் வீதியைச் சேர்ந்த 63 வயதான குஞ்சித்தம்பி காலிக்குட்டி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று மாலை செங்கலடி கருத்தப்பாலத்துக்கருகே மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு காவலுக்குச் செல்லும்போதே அவரை காட்டு யானை தாக்கியது.

இதன்போது, சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் காட்டு யானை அட்டகாசத்துக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நீண்டகாலமாக தாங்கள் இந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் இராஜாங்க அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும், நாட்டின் ஜனாதிபதிக்கு இங்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையே உள்ளது எனவும், இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்களையே தெரிவிக்கின்றனர் எனவும் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

குறித்த இடத்துக்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதுடன், விசாரனைகளையும் முன்னெடுத்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

இதேவேளை, நேற்று மாலை 6 மணியளவில் சம்பவ இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் குடும்பஸ்தரை தாக்கிவிட்டு நின்ற யானையை வனவிலங்கு அதிகாரிகள் அங்கிருந்து விரட்டினர்.

Post a Comment

0 Comments