இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் 2789 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதனடிப்பபடையில், ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்வதையடுத்து ஸ்ரீலங்கா பொலிஸார் மற்றும் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் விசேட படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனாவினால் ஏழு பேர் மரணமடைந்துள்ளதுடன் ஒரேநாளில் முப்பதிற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதையடுத்து ஏறாவூர் நகர பிரதேசத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படையினரும் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் முடக்கப்பட்ட பகுதியில் வீட்டைவிட்டு வெளியேறுவோரைக் கண்காணிப்பதுடன் அவசியமற்ற முறையில் நடமாடும் நபர்களைக் கைது செய்து பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடரச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனையிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தடுப்பூசி இன்று ஏற்றப்பட்டது.
0 Comments