Home » » ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர் வாகனம் கண்டுபிடிப்பு!!

ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர் வாகனம் கண்டுபிடிப்பு!!

 


பொலிஸார் துரத்திய போது , ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.


விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் கரிசனை இல்லாமல் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னர் நேற்று (24), மூன்று நாட்கள் கடந்த நிலையில் பொலிஸார் டிப்பர் வாகனத்தை மீட்டதுடன், எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியையும், டிப்பர் வாகனத்தையும் நெல்லியடி பொலிஸார், பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்து நடைபெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் கடந்த 21ஆம் திகதி மாலை 4 மணியளவில் சப்ரகமுவ மாகாண பதிவில் உள்ள LM 5114 எனும் இலக்கமுடைய டிப்பர் வாகனம் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூன்று பொலிஸார் (இருவர் சீருடை) அதனை துரத்தி சென்றுள்ளனர்.

அதன்போது டிப்பர் சாரதி வாகனத்தை திக்கம் பகுதியில் உள்ள சிறிய வீதிகளின் ஊடாக மிக வேகமாக செலுத்தி தப்பி சென்றிருந்தார்.

அவ்வாறு தப்பி செல்லும் போது சிறிய வீதி வளைவில் வாகனத்தை திருப்பும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஆசிரியையை மோதி தள்ளியுள்ளார்.

டிப்பர் வாகனத்தை துரத்தி வந்த பொலிஸார் விபத்துக்கு உள்ளான ஆசிரியையை மீட்காத​ை, தொடர்ந்தும் டிப்பர் வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர். அதனால் வாகன சாரதி வேகமாக வாகனத்தை ஒட்டி சென்றுள்ளார்.

விபத்துக்கு உள்ளான ஆசிரியையை அப்பகுதியை சேர்ந்த மக்களே மீட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆசிரியை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV வியில் முழுமையாக பதிவாகி இருந்தன.

விபத்துக்கு உள்ளான ஆசிரியையை மீட்காது பொலிஸார் நழுவி சென்றமை தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |